தண்டவாளத்தில் ஏற்றி தடம் இல்லாமல் செய்து விடுவார்கள்.. வைகோ எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Vaiko warns centre on train accidents
சென்னை: கடந்த காலத்தில் திருச்சி -அரியலூர் ரயில் விபத்திற்கு பின், மக்கள் கிளர்ந்து எழுந்து, ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்று காங்கிரஸ் அரசை எச்சரித்ததைப் போன்று மக்கள் விரோத ஊழல் நிறைந்த மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி தடம் இல்லாமல் மாற்றி விடுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

மக்கள் பெரும்பாலும் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு விரும்பி பயணம் செய்வது ரயில் வண்டிகளைத்தான். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும், 100க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து, நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் ரயில்வே துறைக்கு லாபம் ஈட்டித் தருகின்ற ரயில் போக்குவரத்தை பாதுகாப்புடன் இயக்குவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டுகிறேன்.

காரணம் தமிழ்நாட்டில் கடந்த 21.10.2013 அன்று திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே கரூர் வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை, அப்பகுதி பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி கவுன்சிலர் கருப்பையா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு தகவல் சொன்னதால் மும்பை தாதரில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்று கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி பெரும் விபத்திலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளது.

அதே போன்று 21.10.2013 அன்று செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம்- மோசிவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு இடங்களில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை அவ்வழியே செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொதிகை விரைவு வண்டி ஓட்டுனரின் முன்னெச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

25.10.2013 அன்று காலை 6 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்தொடர் வண்டி புளியமங்களம் ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை ஓட்டுனர் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

25.10.2013 அன்று காலை 11.45 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து திருச்சிக்கு உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு இரயில்,சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுள்ளது. இதனால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களில் நான்கு திசைகளிலும் நான்கு பெரும் இரயில் விபத்துகள் நிகழாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் தொடர் விரிசல்களால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி, ரயில் பயணம் பாதுகாப்பற்ற, நேரம் விரயம் கொண்டது என்று எண்ணத் தொடங்கிவிட்டனர்.

தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுவதற்கான காரணத்தை ரயில்வே அதிகாரி ஒருவர் கூறி இருக்கும் காரணம், குளிர்காலம் கோடைகாலத்தில் ஏற்படும் சீதோஷ்ண நிலையால் இதுபோன்று தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவது வழக்கம் என்று காலமாற்றத்தை காரணம் காட்டி சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி என்றால் குளிர்பிரதேசங்களிலும், பாலைவன நாடுகளிலும் ரயில்கள் எப்படி இயக்கப்படுகிறது.

ரயில்வேதுறை கோடை மற்றும் குளிர்காலங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. நல்ல உறுதியான எல்லா சீதோஷ்ண நிலைக்கும் தாங்கக்கூடிய தரமான தண்டவாளங்களை கொள்முதல் செய்யாததால் இதுபோன்ற விபரீதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இத்தாலி சோனியா வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இயங்கும் மத்திய காங்கிரஸ் அரசு எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஊழலோ ஊழல் என்று மக்களின் நம்பிக்கையை இழந்து, பொறுப்பற்ற முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், விரும்பத்தகாத பெரும் விபத்து மனித தவறுகளால் ஏற்பட்டு, மனித உயிர்கள் பறிக்கப்படும் போது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இந்தப் பழியை, பயங்கரவாதத்தால் எற்பட்ட விபத்து என்று பொறுப்பை தட்டிக்கழித்து அப்பாவி சமூகத்தின் மீது பழியைப் போட்டுத் தப்பித்து விடுவார்கள்.

எனவே சமீபகாலமாக தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்கள், ஆளில்லாத ரயில்வே கேட் விபத்து உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி தவறுகளை கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் வரும் முன் காத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்திட வேண்டுகிறேன்.

கடந்த காலத்தில் திருச்சி -அரியலூர் ரயில் விபத்திற்கு பின், மக்கள் கிளர்ந்து எழுந்து, ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்று காங்கிரஸ் அரசை எச்சரித்ததைப் போன்று மக்கள் விரோத ஊழல் நிறைந்த மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி தடம் இல்லாமல் மாற்றி விடுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+