சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரி வைகுண்டராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மதுரை: சிபிஐ பதிவு செய்த வழக்கை, தள்ளுபடி செய்யக் கோரி, வி.வி.மினரல்ஸ் நிர்வாகி வைகுண்டராஜன் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்தவர் சுப்பையா. தற்போது மேற்குவங்கத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். இவரும், குடும்பத்தினரும், வருமானத்திற்கு அதிகமாக, 8.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.

சுப்பையா சொத்து சேர்ப்பதற்கு உதவி செய்ததாக விவி மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரையும் வழக்கில் சிபிஐ சேர்த்தது.
நிலம் விற்பனை தொடர்பாக, சுப்பையாவின் தாய் ஜானகி மற்றும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், இவர் சகோதரர் ஜெகதீசன் இடையே, வங்கி மூலம், 7.5 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்ததாகவும், வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
வழக்கை ரத்து செய்ய மனு
இந்நிலையில், சிபிஐ பதிவுசெய்த வழக்கை ரத்து செய்யக் கோரி வைகுண்டராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் மீதான வழக்கு, தற்போது முதல் தகவல் அறிக்கை நிலையில்தான் உள்ளது. இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த சூழலில் வழக்கை ரத்து செய்யும்படி கோர முடியாது என சிபிஐ தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பினை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், மனுதாரர்கள் மீதான வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையில்தான் உள்ளது. மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கும்போது கூறப்பட்ட காரணங்கள், வழக்கை ரத்து செய்வதற்கு பொருந்தாது. இந்த வழக்கை ரத்து செய்ய கூறும் காரணத்தை ஏற்க முடியாது.
மனுதாரர்கள் தங்கள் வசமுள்ள இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் வழங்கலாம். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன், மனுதாரர் தரப்பு ஆவணங்களை சிபிஐ பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். மனுதாரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சி.பி.ஐ தொடுத்துள்ள வழக்கை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார் வைகுண்டராஜன்.












Click it and Unblock the Notifications