கடும் வேலைப்பளு.. மன உளைச்சல்.. ரயில் முன் பாய்ந்து ஒரத்தநாடு வி.ஏ.ஓ தற்கொலை
ஒரத்தநாடு தாலுகா தலையாமங்களம் விஏஓ வெங்கடேசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவகல்லூரி அருகே ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள வித்யாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்,34. இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள தலையாயமங்கலத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
வழக்கம் போல வெள்ளிக்கிழமையன்று காலை வெங்கடேசன் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தஞ்சையை அடுத்த ஆலக்குடி-வண்ணாரப்பேட்டை இடையே ரெட்டிப்பாளையம் ரயில்வே கேட் அருகே நேற்று இரவு ரயிலில் அடிபட்டு வெங்கடேசன் சடலமாக கிடந்தார்.

இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் வெங்கடேசனின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தஞ்சை ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிணமாக கிடந்த வெங்கடேசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு போதிய நேரம் கிடைக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு வெங்கடேசன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தஞ்சை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் கிருபாகரன் கூறியுள்ளார். விஏஓ தற்கொலை குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருபாகரன் கூறியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நெல்லையில் வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இப்போது கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications