சென்னை சூப்பர் கிங்ஸை நான் வாங்கலை, என்னை விட்ருங்க ப்ளீஸ் .... வருண் மணியன்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தான் வாங்கவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமும், நடிகை திரிஷாவின் வருங்கால கணவருமான வருண் மணியன் தெரிவித்துள்ளார். தயவு செய்து என்னை தனியாக விட்டு விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேட்ச் பிக்சிங் தொடர்பான வழக்கில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாத அளவுக்கு என். சீனிவாசனுக்கு, அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையூறாக முளைத்துள்ளது.
இதையடுத்து அதை அவர் விற்கப் போவதாகவும், அந்த அணியை திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியன் வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெளியான சூதாட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், பி.சி.சி.ஐ. தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்ற இரு பதவிகளை தன்னிடம் வைத்துள்ள சீனிவாசன் ஒன்றில் மட்டுமே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஏலத்திற்கு வரும் சி.எஸ்.கே
இதையடுத்து இந்த ஆண்டு ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் பிப்ரவரி 16 ஆம் தேதி சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையை விட்டுக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஜோடி போட்டு நடந்த காட்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வருண் மணியன் வாங்கவுள்ளதாக பல்வேறு ஊகங்கள் வெளியாயின. இதற்கு ஏற்றார் போல சில தினங்களுக்கு முன் சீனிவாசனும் வருண் மணியனும் இணைந்து சென்ற வீடியோ பதிவு என்று தொலைக்காட்சி சேனல்களில் வெளியானது.

ஐ.பி.எல் நடிகைகள்
ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்கும் பல அணிகளை சினிமா நடிகர்கள்தான் வாங்கியுள்ளனர். ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி என பட்டியல் நீள்கிறது. இதில் ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் இணைந்து ஒரு அணியை வாங்கியது போல் தனது வருங்கால மனைவி திரிஷா உடன் இணைந்து வருண் மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

ஆளை விடுங்கப்பா
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கும் எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என்று வருண் மணியன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், "எந்த அணியையும் வாங்கும் திட்டம் என்னிடம் இல்லை. என்னை தனியாக விட்டுவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

புதுமாப்பிள்ளை
சமீபத்தில்தான் வருண் மணியனுக்கும் பிரபல தமிழ் நடிகை திரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சில மாதங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications