நிலையான ஆட்சியை விட ஜனநாயக ஆட்சிதான் முக்கியம்... தொல்.திருமாவளவன்
சென்னை: திமுக, அதிமுக என்று மாறி ஆட்சி செய்யும் தமிழகத்தில், கூட்டணி ஆட்சி என்ற புதிய முழக்கத்தோடு தற்போது அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன். அரசு ஊழியராக இருந்து தலித் மக்களின் போராளியாக அறிமுகமாகி, 1990ஆம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கி, மதுரையில் கொடியை அறிமுகப்படுத்திய திருமாவளவன், அதே மதுரையில் வெள்ளி விழா பொதுக்கூட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் நடத்தி முடித்திருக்கிறார்.

இந்த 25 ஆண்டுகால பயணத்தில் பத்து ஆண்டுகாலம் அரசியலில் போட்டியிடாமல் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார் தொல். திருமாவளவன். 1999ஆம் ஆண்டில் இருந்து தீவிர அரசியலில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. அரசியலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கும் தொல்.திருமாவளவன் இன்றைக்கும் இரவு பகலாக மக்கள் பணியாற்றி வருகிறார். 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகளை செய்து வரும் திருமாவளவன் நமது "ஒன்.இந்தியா தட்ஸ்தமிழ்" இணைய தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி.
மத்திய அரசைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்று புது புயலை கிளப்பியிருக்கிறீர்களே? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவது கடந்த 64 ஆண்டுகால ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகத்தான். காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகள்தான் இதுவரை தமிழகத்தை ஆண்டு இருக்கின்றன. ஒரு கட்சி ஆட்சி முறை ஏதேச்சதிகாரத்தை வலியுறுத்தும்.
கூட்டணி ஆட்சி முறை ஜனநாயகத்தை வலியுறுத்தும். இது புதிய கருத்தல்ல. தமிழ்நாட்டில் அண்ணா காலத்தில் காயிலேமில்லத் அவர்கள் வலியுறுத்தினார். ராஜாஜி-அண்ணா கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த போதும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சு அடிபட்டது நடைமுறைக்கு வராமல் போனது.
1981ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகமும், இ.காங்கிரஸ் கட்சியும் 50:50 என்று இடங்களை பகிர்ந்து கொண்டு தேர்தலை சந்தித்தார்கள். வெற்றிக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி என்று அப்போது பேசினார்கள் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
பாண்டிச்சேரியில் அதிமுக - பாமக இணைந்து போட்டியிட்ட போது கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் 6 மாதகாலம் அதிமுக முதல்வர், 6 மாதகாலம் பாட்டாளி மக்கள் கட்சி முதல்வர் என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டே தேர்தலை சந்தித்தார்கள் ஆனால் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 119 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட்டது. அப்போதும் கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது நாங்கள் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை வலியுறுத்துகிறோம். 2016ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம் இல்லை என்றாலும் எங்களின் முழக்கத்தை தீவிரப்படுத்துவோம்.
2016 சட்டமன்ற தேர்தலில் உங்கள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெறுமா? அல்லது புதிய கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதா?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது பற்றி மட்டுமே இப்போது பேசுகிறோம். வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் எந்தக்கட்சியோடு கூட்டணி அமைப்பது என்பது பற்றி இப்போதைக்கு பேசவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல. அதிமுக உடன் கூட்டணியா? திமுக உடன் கூட்டணியா? அல்லது புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா? என்பது பற்றி எல்லாம் இப்போதைக்கு நாங்கள் பேசவில்லை. தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி கூடாது, கூட்டணி ஆட்சி வேண்டும் என்பது பற்றி மட்டுமே இப்போதைக்கு எங்களின் பேச்சாக உள்ளது.
சமீபகாலமாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ‘கூட்டணி ஆட்சி' கருத்தரங்கத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறீர்கள். உங்கள் அழைப்பை ஏற்று யார் யார் இந்த கருத்தரங்கத்திற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்?
"தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற தலைப்பில் வரும் 9ஆம் தேதி எங்களது தலைமையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கத்திற்கு அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, தமாகா, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் எங்களின் அழைப்பை ஏற்று கருத்தரங்கத்திற்கு வர சம்மதம் கூறியுள்ளனர். தேமுதிகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் எங்களின் கருத்தில் உடன்பாடு உள்ளது ஆனால் கருத்தரங்கத்திற்கு வர இயலாது என்று கூறிவிட்டனர்.
கூட்டணி ஆட்சி என்பது மத்தியில் மட்டுமல்ல. கேரளாவில் நடைமுறையில் இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி ஆட்சிமுறை நடைமுறையில் இருந்திருக்கிறது. மத்தியில் மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது.
இந்த கூட்டணி ஆட்சி கருத்து திமுக, அதிமுகவிற்கு எதிரான முழக்கமல்ல. விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த தலித், பழங்குடியின, கிருஸ்தவ, இஸ்லாமிய மக்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகவே. திமுகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதிமுகவில் இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இது உட்கட்சி ஜனநாயகம்.
ஆனால் விளிம்புநிலை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற, அரசியல் ஆட்சி முறையில் பங்கேற்கச் செய்கிற வகையில் அமையவேண்டும். இதற்காகவே கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைக்கிறோம்.
இந்தியாவில் 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு 30 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி செய்தது. 1977ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை மாற்றிவிட்டு கூட்டணி ஆட்சியை ஜனதா கட்சி ஏற்படுத்தியது. அதனால்தான் மத்தியில் கூட்டணி அரசு அமையும் நிலை உருவானது. அதன்மூலம், மிகவும் பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் ஆட்சியில் அமரும் சூழ்நிலை உருவானது. முதன்முறையாக பிரதமருக்கு அடுத்தபடியாக துணை பிரதமர் என்ற பதவியும் ஏற்படுத்தப்பட்டது. 1989 ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கின வி.பி.சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி உருவானது. மாநில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றனர். 13 கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘ஐக்கிய முன்னணி' கூட்டணி ஆட்சி 996ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்தது. அப்போது தமிழக அ அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றனர்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ( என்.டி.ஏ), சோனியாகாந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ( யு.பி.ஏ) என 1977 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டுவரை இந்தியாவில் கூட்டணி ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்றைக்கு மோடி தலைமையிலான பாஜக தனி மெஜாரிட்டியோடு வெற்றி பெற்றிருந்தாலும் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. ராம்விலாஸ்பஸ்வான் மத்திய அமைச்சராக இருக்கிறார். மத்தியிலேயே பல கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிற போது மாநிலத்தில் அது முடியாதா? கூட்டணி ஆட்சி அமைந்தால் நிலையான ஆட்சியாக இருக்காது என்கின்றனர். அடிக்கடி ஆட்சி கவிழும் என்றும் கூறுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை ‘நிலையான ஆட்சியை விட ஜனநாயக ஆட்சி வேண்டும்'. 2016ல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது விடுதலை சிறுத்தை கட்சியின் விருப்பம்.
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு அப்பீலுக்கு போயுள்ளதே, நீங்கள் வரவேற்பீர்களா?
இதில் வரவேற்கவோ, எதிர்க்கவோ எதுவும் இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்கிறது. கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. சட்டவல்லுநர்களின் செயலுக்கு அரசியல் ரீதியாய சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு இந்திய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்டு வந்த மாணவர் அமைப்பான அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. இதில் மத்திய அமைச்சரவையின் தலையிட்டது ஏன்? கல்வி நிறுவனவே தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கலாம். ஆனால் மொட்டைக்கடிதத்திற்கு முக்கியத்துவம் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வலியுறுத்தல் காரணமாக மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தலித் விரோத சிந்தனையை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு அந்த மாணவர் அமைப்பின் அம்பேத்கார் - பெரியார் என்ற பெயர்கள் பிடிக்கவில்லை. மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்த ஸ்மிருதி இராணியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கோரிக்கை வைக்கிறது.
ஐ.ஐ.டியில் பல்வேறு நிர்வாக முறைகேடுகள் நடந்திருக்கின்றன. முன்னாள் இயக்குநர் ஆனந்தின் உறவினர்கள் 60க்கும் மேற்பட்டோர் இங்கு பணி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கான ஆதரங்கள் உள்ளன. முறையான கணக்கு வழக்குகள் கிடையாது. தலித் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களில் 2 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வி பயில்கின்றனர். 5சதவிகிதம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். நாடுமுழுவதும் உள்ள ஐ.ஐ.டிக்களில் பயிலும் தலித் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். சென்னை ஐ.ஐ.டியிலும் பிற ஐ.ஐ.டிக்களிலும் நடைபெறும் நிர்வாக முறைகேடுகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
தலித் சமுதாய மக்களின் வாக்குகளை மட்டுமே நம்பி தனித்து நின்று தேர்தலை சந்திக்கத் தயாரா என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளாரே?
அவரைப்போல நான் சாதிய அரசியல்வாதியல்ல. எனக்கு குறுகிய பார்வை கிடையாது. தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலைக்காகவே போராடுகிறோம். எங்களுக்கு சாதி வெறி கிடையாது.
அரசு ஊழியர் திருமாவளவன், தேர்தலில் பங்கேற்காத "தலித் பேந்தர்ஸ்" திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்... உங்களின் பணி எதில் திருப்தியளிக்கிறது.
அரசு ஊழியராக 11 ஆண்டுகாலம் பணிபுரிந்திருக்கிறேன். தேர்தலில் பங்கேற்காமல் பத்து ஆண்டுகாலமும், 15 ஆண்டுகாலம் தீவிர அரசியலில் இறங்கி தேர்தலில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறோம். அரசு ஊழியராக இருந்தபோது வாழ்க்கை அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. தேர்தலில் பங்கேற்காமல் சமூக இயக்கமாக இருந்த போது ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை எண்ணி வேதனை மட்டுமே படமுடிந்தது. தேர்தலில் பங்கேற்று மக்கள் பணி ஆற்றியபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் கொடுமைகளை அம்பலப்படுத்த முடிந்தது.
அரசு ஊழியராக இருந்த போது கிடைத்த மனஅமைதி இப்போது இல்லை ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறோம் என்ற மன நிறைவு இப்போது கிடைத்துள்ளது.
தேர்தலில் அரசியலில் நீங்கள் ஈடுபடாமல் கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன் போன்றவர்களுடன் இணைந்து 'இயக்கமாக' செயல்பட்டிருந்தால் வலுவான சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிற தமிழ்த் தேசிய களத்தை கட்டமைத்திருக்க முடியும் அல்லவா?
இயக்கம் என்பது பொது விவாதங்களில் பங்கேற்க மட்டுமே முடியும். ஆனால் சாதி ஒழிப்பை தீவிரப்படுத்த அரசியல் பொது நீரோட்டத்தில் கலந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வன்முறையை தூண்டுவதாக குற்றச்சாட்டு இருக்கிறதே?
இது வன்முறைக்கு எதிரான முழக்கமல்ல... நீண்டகாலம் ஒடுக்குமுறைக்கு ஆளான... அடக்குமுறைக்கு ஆளான... அச்சப்பட்டு கிடக்கிற மக்கள் அதிலிருந்து மீண்டு எழவேண்டும் என்பதற்கான முழக்கம் இது. இது தலித்களுக்காக மட்டுமேயான முழக்கமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் முழக்கம். வன்முறையை தூண்டும் முழக்கமல்ல... திணிக்கப்படும் வன்முறைக்கு எதிரான முழக்கம்.
தந்தை பெரியார் - தமிழர் தலைவர் அல்ல.. வழிகாட்டிதான் என்கிற தமிழ்த் தேசியவாதிகளின் புதிய முழக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ் தேசியம் வேண்டும். அதற்காக பெரியாரை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஒன்றில் இருந்துதான் மற்றொன்று உருவாகிறது. திராவிட தேசியத்தில் இருந்துதான் தமிழ் தேசியம் உருவானது. கேரளா மக்கள் தங்களை மலையாளிகள் என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை கன்னடர்கள் என்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தங்களை தெலுங்கர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொண்ட பின்னர் எஞ்சிய தமிழர்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டனர். தமிழ் தேசியம் என்பது இந்துத்துவா கருத்துக்களை எதிர்க்கக் கூடியதாக, சாதீய ஒழிப்பை அடிப்படையாக கொண்டதாக இருக்கவேண்டும். தமிழ் தேசியத்தை சாதி ஒழிப்பு கருத்தியலாக உள்வாங்காத யாரும் உண்மையான தமிழ் தேசியவாதியாக செயல்பட முடியாது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திமுக அரிய பணிகளையாற்றியதாக சொல்லி வந்த நீங்கள் திமுகவை விட்டு தள்ளி நிற்க காரணம்?
திமுகவை விட்டு விலகியதாக நாங்கள் சொல்லவில்லை. விலக்கிவிட்டதாக அவர்களும் சொல்லவில்லை. தேர்தல் கூட்டணி வேறு... கூட்டணி ஆட்சிமுறை என்பது வேறு.... கூட்டணி ஆட்சி கருத்தரங்கத்திற்கு திமுக, அதிமுக பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை நாங்கள் அழைக்கவில்லை அவர்கள் தேர்தல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள். பாமக சாதி வெறி பிடித்த கட்சி எனவே அந்தக்கட்சியையும் விட்டுவிட்டோம். எனவே இதுகுறித்து திமுக என்ன நினைக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.
இலங்கையில் சமாதானப் பேச்சுகள் தொடங்கிய போதே விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்டு அங்கே சென்றவர் நீங்கள்.. அவரோடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரோடும் மிக நெருக்கமான உறவையும் பேணி வந்தவரும் நீங்கள்.. ஆனால் தமிழகத்தில் இன்று ஒருசிலர், பிரபாகரன் தங்களுக்கு அப்படி கட்டளை பிறப்பித்தார்.. இன்ன கம்பெனிகளுக்கு திரைப்படம் எடுக்க சொன்னார்.. என்னை அப்படி திரைப்படம் எடுக்க உத்தரவிட்டார் என்றெல்லாம் பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மேதகு பிரபாகரன் அவர்கள் ஈழத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்படக்கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். நானும் 2002, 2004ஆம் ஆண்டுகளில் மேதகு பிரபாகரன் அழைப்பின் பேரில் ஈழத்திற்குச் சென்றிருக்கிறேன். அதேபோல திரைப்பட இயக்குநர்களும் அழைக்கப்பட்டிருக்கலாம். நான் சென்ற நேரத்தில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவும் வந்திருந்தார். அப்போதுதான் தமிழக திரைப்பட கலைஞர்களும் ஈழத்திற்கு அழைக்கப்பட்டிருப்பது எனக்கு தெரியும். அவர் யார் யாரை அவர் நேரில் அழைத்து நேரில் பேசி என்ன சொன்னார் என்பது தெரியாது.
பரபரப்பான அரசியல்வாதியாக இருக்கும் நீங்கள் திடீரென திரைப்படங்களில் நடித்த காரணம் என்ன?
நட்புக்காக நண்பர்களின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக சில காட்சிகளில் நடித்தேன்.
உங்களின் ‘வேர்களைத் தேடி' நிகழ்ச்சி எதனை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறது.?
கிராமப்புறங்களில் உள்ள மக்களை சந்தித்து முகாம்களை கட்டமைத்தல். புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது. கொடிக்கம்பங்களை நிறுவுதல். முகாம் பொறுப்பாளர்களுடன் இணைந்து 2016 சட்டமன்ற தேர்தலைப் பற்றி கலந்துரையாடுவதுதான் இந்த பயணத்தின் நோக்கம்.
விடுதலை சிறுத்தைகளின் 25 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் சாதனைகள் என்ன? சறுக்கல்கள் என்ன?
சாதிய இறுக்கம் நிறைந்த சமூகத்தில் 25 ஆண்டுகாலம் தாக்கு பிடித்ததே மகத்தான சாதனைதான். அரசாங்கத்தின் நெருக்கடி, காவல்துறையினரின் பொய் வழக்குகள், கொடியேற்றினாலே படுகொலைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்திருக்கிறோம். பொருளாதார பின்புலம் இல்லாமல், ஊடகங்களின் ஆதரவு எதுவும் இல்லாமல் எதிர்நீச்சல் போட்டு இருக்கிறோம். ஒடுக்கப்பட்டவர்கள் அணிதிரளவேண்டும் என்ற விழிப்புணர்வை அளித்திருக்கிறோம்.
தொடக்கத்தில் தேர்தல் புறக்கணிப்பை முன்னெடுத்தோம். கடந்த 15 ஆண்டுகளாகத்தான் தேர்தலில் பங்கேற்கிறோம். தமிழக வரலாற்றிலேயே சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாதனை.
சறுக்கல்கள் என்று எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஆனால் 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த போது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டது. இதனை ஒரு வரலாற்று பிழையாகவே கருதுகிறோம். இது தமிழ்தேசியவாதிகள் என்று சொல்லப்பட்ட சுயநல அரசியல்வாதிகள் கைவிட்டதாலேயே இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க நேரிட்டது.
-
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications