பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி!
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து காலையில் எக்ஸ்வலைதளத்தில் பதிவிட்டதும் உடனே நடவடிக்கை எடுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வியில் பின்னடைவு. விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததைப் பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரித்தேன். மாவட்ட ஆட்சியரிடமும் கலந்தாலோசித்தேன்.

நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் உட்பட விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
காலையில் ரவிக்குமார் ட்வீட் போட்டிருந்த நிலையில் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரவிக்குமார் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மற்றொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி அமைச்சருக்கு நன்றி , விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளிக் கல்வியில் ஏற்பட்டிருக்கும் சரிவு குறித்து காலையில் எக்ஸ் தளத்தில் நான் போட்டிருந்த பதிவைப் பார்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் , இன்று விடுமுறை நாள் என்றாலும் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசியதோடு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். அந்தத் தகவல்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடமும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டக் கல்வி நிலையை உயர்த்துவதற்கு மாண்புமிகு அமைச்சர் எடுத்துக்கொண்டுள்ள அக்கறைக்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வெளியிட்ட 2026-ஆம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளின்படி, விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி விவரங்கள் மற்றும் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் பின்வருமாறு:
12ஆம் வகுப்பு (+2) பொதுத்தேர்வு முடிவுகள் (2026)
2026-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்டம் பெரும் சரிவைச் சந்தித்து மாநில அளவில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
மாநில அளவிலான இடம்: 38-வது இடம் (கடைசி இடம்)
ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம்: 85.92%
மாணவிகள் தேர்ச்சி: 90.26%
மாணவர்கள் தேர்ச்சி: 81.26%
10ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் (2026)
2026 நிலவரம்: 2026 மே 20 அன்று வெளியான பத்தாம் வகுப்பு முடிவுகளின்படி, சிவகங்கை மாவட்டம் (98.31%) முதலிடம் பிடித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் மாநில சராசரி தேர்ச்சி விகிதத்திற்கு (94.31%) அருகிலேயே இருந்தாலும், தரவரிசையில் 10-வது இடத்திற்குள் வரவில்லை. (வட மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது).
கல்வித்துறையானது மாணவர்கள் மத்தியில் தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க, அதிகாரப்பூர்வமாக 1 முதல் 38 வரையிலான முழுமையான ரேங்க் பட்டியலை வெளியிடுவதில்லை. முதலிடம் பிடிக்கும் மாவட்டங்கள் மற்றும் மிகக் குறைந்த தேர்ச்சி பெறும் மாவட்டங்களின் தரவுகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications