அய்யப்பன் கோயிலில் பெண்கள்: உச்சநீதிமன்ற கிடுக்குப்பிடியால் "வழக்கங்கள்" விடை பெறுகின்றன- கி. வீரமணி
சென்னை: சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதன் மூலம் செல்லரித்த வழக்கங்கள் விடைபெறுகின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
1. சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு ஏன் பெண்கள் போகக் கூடாது? - உச்சநீதிமன்றம் கேள்வி.
2. மகாராஷ்டிராவிலுள்ள பிரபல கோயிலுக்கு இரண்டு பெண் ‘டிரஸ்டிகள்' நியமனம்

இன்று வந்துள்ள இரண்டு செய்திகள், காலங்காலமாக இந்து மத சனாதனத்தின் முதுகெலும்பை முறித்து, மதவழக்கம் - என்பதற்கு ஆழமான குழி தோண்டும் நிகழ்வு ஆகும்!
மனித உரிமை அடிப்படையில் இந்த இரண்டு நிகழ்வுகளும், குறிப்பிடத்தகுந்த மைல் கற்களாகும்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளின்படி, பாலின வேறுபாடு காட்டுவது சட்டப்படி குற்றமாகும் என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
ஆனால் ஹிந்துமத வர்ணதர்மப்படி படிக்கட்டு வர்ணஜாதி முறை அமைப்பில், பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணங்களும் படிக்கட்டு முறையில் ஒன்றுக்கு மற்றொன்று கீழானது என்பதோடு,
அந்த வர்ண தர்மத்திற்கு கீழே மேலும் இரண்டு பிரிவுகள் - ‘அவர்ணஸ்தர்கள்' என்ற தலைப்பில் படிக்கட்டாக கீழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அய்ந்தாவது ‘பஞ்சமர்' என்ற ‘தாழ்த்தப்பட்ட தீண்டக் கூடாத மக்கள்', அதன் கீழே ஆறாவதாக, அனைத்து ஜாதி (மேல் ஜாதி உட்பட) பெண்கள் என்பதாகும்!
எனவே, பெண்கள் ஹிந்து கோயில்களில் டிரஸ்டிகளாகவோ, அர்ச்சகராகவோ, ஏன் கேரள சபரிமலை அய்யப்பன் கோயில் போன்றவைகளில் உள்ளே சென்று தொழக்கூட உரிமையற்றவர்களாக உள்ளார்கள்?
மீறி யாராவது சென்றால், சாமி ‘தீட்டாகி விட்டது' என்ற பூச்சாண்டி காட்டி, மேலும் புரோகித அர்ச்சகர் கூட்டம் தங்கள் வருமானத்தையும், செல்வாக்கையும் பெருக்க, பரிகார பூஜை, தீட்டுக்கழித்தல் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு பெண்மணி சென்றதை பிரச்சினையாக்கி அப்படிப்பட்ட ‘சடங்குகளும்‘ முன்பு நடந்தேறின.
10-50 வயது இடைவெளியில் உள்ள பெண்கள் ‘சாமி தரிசனம்'' செய்யவும் அனுமதி இல்லை. இன்றளவும் ஆண்களும், மேற்குறிப்பிட்ட வயது தகுதியுள்ள பெண்களும் மாத்திரமே செல்லும் நிலை இருந்து வருகிறது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 5 கேரள பெண் வழக்குரைஞர்களும், இந்திய இளம் வழக்கறிஞர் அணியும் வழக்குத் தொடுத்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் டி.பி. மிஸ்ரா ஒரு முக்கியமான நெத்தியடி கேள்வியை, கேரள அரசின் தேவஸம் போர்டாரை நோக்கிக் கேட்டு, தாக்கீது அனுப்பி பதில் அளிக்குமாறு ஆணையிட்டுள்ளார்!
"இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி பெண்கள் நுழைவை தடை செய்வதை நியாயப்படுத்த முடியும் உங்களால்? அரசமைப்புச் சட்டப்படி பெண்களுக்கு வழங்கி உள்ள உரிமைக்கு இது விரோதமல்லவா? பதில் அளியுங்கள் என்று கேட்டதோடு,
பொதுக் கோயில் வேறு, மடங்கள் வேறு, இரண்டையும் ஒரே மாதிரி எப்படிப் பார்க்க முடியும் என்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்! (இதன் உட்பொருள் அரசமைப்புச் சட்ட மதச் சுதந்திர 26ஆவது பிரிவினைக் காட்டி; நீங்கள் அதில் புகுந்து தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதேயாகும்) வழக்கு ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு வந்தபிறகு அது பல்வேறு புரட்சிகர மாறுதல்களுக்கு நுழைவு வாயிலாகவும் அமையும்.
இதேபோல் புனே அருகே உள்ள பிரபல ஷானி ஷிங்னாப்பூர் ‘கோயில்', மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் உள்ளது) டிரஸ்டியாகவும், டிரஸ்ட் போர்டு தலைவராகவும் ஒரு பெண் அனிதா ஷெட்டி என்பவர் முதலில் டிரஸ்டியாக அங்கே நியமிக்கப்பட்டு, பிறகு அந்தக் குடும்பத் தலைவியான பெண்ணே, கோயில் டிரஸ்ட் போர்டின் - நிர்வாகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் என்ற செய்தி, மற்றொரு சனாதன ஹிந்து, புரோகித கூட்ட ஆதிக்கத்தின் முதுகெலும்பை முறித்திடும் செய்தியாகும்.
பெண்கள் கருவறைக்குள் செல்லக் கூடாது என்று கூறி தடுத்த காலம் இனி ‘அந்தக் காலம்' ஆகி விடும்.
தபோல்கர் போன்றவர்களின் போராட்ட வெற்றியை இது குறிக்கும்.
அங்கும் இதே கேள்வி எழும். கேரளம், மகாராஷ்டிர நிகழ்வுகள், பெண்ணிய சமத்துவக் கொடி தலை தாழாது பறக்கக் கூடும் என்பதை பறைசாற்றும் முன்னோடி நிகழ்வு ஆகும்.
‘வழக்கம்‘ என்ற செல்லரித்தவைகளுக்கு விடை கொடுப்போம்!
சில ஆண்டுகளுக்கு முன் சிறீரங்கத்தில் ஒரு திறமை வாய்ந்த பெண்அதிகாரி, நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, அவரை அங்குள்ள அர்ச்சகர் ஒருவர் தடுத்தபோது, அவர் ‘உன்னைக் கைது செய்ய உத்தரவு போடுவேன்!' என்று துணிந்து கூறினார்.
அஞ்சி நடுங்கிய அர்ச்சகப் பார்ப்பனர் வாயை மூடிக் கொண்டு வழி விட்ட கதை தமிழ்நாட்டிலேயே நடந்தது!
இதன் விளைவு, ‘வழக்கம்‘ என்ற செல்லரித்தவைகளுக்கு விடை கொடுக்கும் விடிவெள்ளி முளைக்கத் தோன்றி விட்டது என்பதற்கு சரியான சான்று ஆகும்!
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications