இறந்தவர் உயிருடன் திரும்பிய ஆச்சரியம் – பிணவறை வரை போய் திரும்பிய அதிசயம்
வேலூர்: வேலூரில் இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர், பிணவறை வரை சென்று உயிருடன் திரும்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் தள்ளியுள்ளது.
ஆம்பூர் ரெட்டிமாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை மோசமானது அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது.
இறந்துபோன வரதராஜன்:
நேற்று வரதராஜன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைத்துள்ளனர்.
குடும்பத்தினர் தகவல்:
இந்த தகவலை கேட்ட வரதராஜனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் இறந்ததாக உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக்கு வந்த உறவினர்கள்:
ரெட்டி மாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் சாமியானா பந்தல் போடப்பட்டது. பாடை கட்டும் வேலை, சுடுகாட்டில் அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. உறவினர்கள் பலர் மாலையுடன் வீட்டுக்கு சென்றனர்.
உயிருடன் இருந்த "பிணம்":
இது ஒருபுறம் இருக்க வரதராஜனின் உடலை பெற அவரது குடும்பத்தினர் பிணவறைக்குச் சென்றனர். அப்போது வரதராஜனின் கை, கால்கள் அசைந்தன. இதனை கண்டதும் அவர்கள் திடுக்கிட்டனர். உற்றுப் பார்த்தபோது வரதராஜன் உயிரோடு இருப்பது தெரியவந்தது.
மீண்டும் சிகிச்சை:
இதனால் வரதராஜனின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். உடனடியாக வரதராஜனின் உடல் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லபட்டது. அங்கு மீண்டும் சிகிச்சை அளித்தனர்.
இறுதிச்சடங்கு நிறுத்தம்:
பிணவறையில் வைக்கப்பட்டவர் உயிரோடு வந்த அதிசயம் அவரது சொந்த ஊருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு நடந்த இறுதி சடங்கு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
மகிழ்ச்சியாய் மாறிய கண்ணீர்:
கண்ணீர் மல்க மாலையுடன் வந்தவர்கள் ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சியுடன் வரதராஜனை பார்க்க சென்றனர். இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது உயிரோடு இருந்தவரை எப்படி பிணவறைக்கு கொண்டு சென்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications