For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை விடுவித்த விடுதலைப் புலிகள் மர்ம மரணம்- சர்வதேச விசாரணை நடத்த வேல்முருகன் கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை ராணுவத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து மர்மமாக இறந்து வருவது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரின் இறுதியில் 2009 மே 18-19 வரை கிட்டத்தட்ட 11,000 போராளிகள் சிங்கள அரசுப் படையிடம் சரணடைந்தார்கள் என்பது உலகறிந்த செய்தி. வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலித்தேவன், நடேசன், அவர் மனைவி உட்பட நூற்றுக்கணக்கானோர் வதைத்துக் கொல்லப்பட்டார்கள் என்பதும் பல்வேறு விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Velmurugan demands International probe on LTTE cadres death

அனந்தி சசிதரன் முன்னிலையில் ஒரு பாதிரியாருடன் சரணடையச் சென்ற தளபதி எழிலன் முதலானவர்கள் - அந்தப் பாதிரியார் உட்பட - அதன் பிறகு காணாமல் போய் விட்டார்கள். காணாமல் போனவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்று இப்போதைய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்காவே கூறியுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், காணாமலடிக்கப்பட்டவர்கள் போக மற்றவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்களிலும் முக்கியமான சில போராளிகள் பிறகு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டர்கள். சிறைக் காவலிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் ஆண்டுக்கணக்கில் இருந்த பின் விடுதலை செய்யப்பட்ட போராளிகள் பலர் கடந்த சில காலமாய் அடுத்தடுத்து மாண்டுப் போகும் செய்தி அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி சென்ற 2015 அக்டோபர் 18ஆம் நாள் தனது 43ஆம் வயதில் புற்று நோயால் இறந்து போனார். அவர் மூன்றாண்டு காலம் சிறையிலும் ஓராண்டு காலம் புனர்வாழ்வு முகாமிலும் இருந்து விடுதலையானவர்.

சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்து வெளியே வந்த பின் புற்று நோயால், அல்லது இனம் புரியாத வேறு நோயால் இறந்து போன 99ஆவது போராளி தமிழினி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினிக்குப் பிறகும், முன்னாள் போராளி சசிகுமார் ராகுலன், தமிழ் ஆசிரியை தம்பிராஜா சரசுவதி ஆகியோர் ஒரே நாளில் (2016 சூலை 12ஆம் நாள்) புற்று நோய் அல்லது ஏதோ மர்ம நோயால் இறந்து விட்டனர். இவ்வகையில் உயரிழந்த முன்னாள் போராளிகளின் தொகை 108ஐத் தொட்டு விட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் பிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசியதோடு, இந்த மர்மச் சாவுகளின் காரணம் கண்டறிய நம்பகமான விசாரணை நடத்தக் கோரினார்கள்.

அவர்களுக்கு பதிலளித்துப் பேசிய பாதுகாப்புத் துறைத் துணையமைச்ச்சர் ருவான் விஜயவர்த்தனா இதற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்க முடியாது என்று கூறி விட்டார். வட மாகாண சபை முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும் இந்தச் சாவுகள் தொடர்பாக சர்வதேச நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இவ்வகையில் இது வரை 108 பேர் இறந்திருப்பது பாரதூரமான செய்தி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறு கூறிய பிறகும் சாவுகள் தொடர்கின்றன.

இது வரை 109 முன்னாள் போராளிகள் இவ்வாறு ஐயத்துக்கிடமான முறையில் இறந்துள்ளனர் என்று நம்பகமான செய்தி கிடைத்துள்ளது. இதற்கு மேல் யாரும் இவ்வகையில் சாகாத படி அவசரமான உயர்தர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

சிறிலங்கா அரசே இவ்வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நிற்பதால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அதனிடமே விட்டு விடலாகாது. சர்வதேசத்தின் தலையீடு அவசரமாகத் தேவைப்படுகிறது. 2015 செப்டெம்பரில் ஐநா மனித உரிமை உயர் ஆணையர் மனித உரிமை மன்றத்துக்கு அளித்த அறிக்கையில் இலங்கை அரசின் உள்நாட்டு நீதிப் பொறிகுறை என்ற முன்மொழிவைத் திட்டவட்டமாக மறுதலித்து விட்டார் என்பதை நினைவிற்கொள்க!

இவ்வகையில் மனித உரிமை மன்றத்துக்கும் அதன் உயர் ஆணையர்க்கும், 2015 அக்டோபரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய நாடுகளுக்கும் இவ்வகையில் தனிப் பொறுப்பு இருப்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan has demanded that International probe must fro mysterious death of LTTE cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X