நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் உதகையில் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
உதகை: பத்ம விபூஷன் விருது பெற்ற இந்திய அணுசக்தி ஆய்வாளர் எம் ஆர் ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக இன்று ஊட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவராகவும் ஸ்ரீனிவாசன் இருந்துள்ளார். இதற்கிடையே எம் ஆர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் அடைந்த போது நாம் கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தோம். அதன் பிறகு பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் எடுத்த மிகப் பெரிய முன்னெடுப்புகள் காரணமாகவே நாம் இந்த நிலையை அடைந்துள்ளோம். அணுசக்தித் துறையிலும் நாம் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

அணு உலைகள்
நாடு முழுக்க ஏகப்பட்ட அணு ஆலைகள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இயங்கி வருவதே அதற்குச் சாட்சி. இந்த அணு சக்தி துறையில் மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுத்தவர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன். அணு சக்தி துறையில் பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள அவருக்குப் பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
எம்.ஆர். ஸ்ரீனிவாசன் மறைவு
மூத்த அணு விஞ்ஞானியும் முன்னாள் அணுசக்தி ஆணையத் தலைவருமான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் ஊட்டியில் அவரது இல்லத்தில் வசித்து வந்தார். இதற்கிடையே இன்று காலை வயது மூப்பு காரணமாக அவர் தனது 95வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் அணு விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தூணான டாக்டர் எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்..
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜே. பாபாவுடன் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், நமது முதல் அணு உலையை வெற்றிகரமாகக் கட்டினார். நாடு முழுக்க அவரது தலைமையில் 18 அணு மின் யூனிட்கள் அமைக்கப்பட்டன. இது எரிசக்தியில் தன்னிறைவு அடை உதவியது. உண்மையாகத் தேசத்தைக் கட்டியெழுப்பியவர். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
யார் இந்த எம்.ஆர். ஸ்ரீனிவாசன்
இவர் அணுசக்தித் துறையைத் தலைமையேற்ற போது தான் நாடு முழுக்க வெற்றிகரமாக 18 அணு மின்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக இவருக்குப் பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்திய அணுசக்தி தந்தையாகப் போற்றப்படும் ஹோமி பாபாவுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகும் கூட இவர் தேசியளவில் பல முக்கிய பதவிகளை வகித்தார். 1974ல் அவர் அணு சக்தி துறையின் மின் திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநரானார்,
1984இல், அணுசக்தி வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போது அவர் எடுத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு அணுசக்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பிறகு 1987ஆம் ஆண்டில், அவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அணுசக்தித் துறையில் அவரது பங்களிப்பைப் பாராட்டி 1984ல் பத்மஸ்ரீ விருதும், 2015ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு உதகையில் தனது இல்லத்தில் அவர் வசித்து வந்தார். இந்தச் சூழலில் தான் அவர் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.












Click it and Unblock the Notifications