மூத்த காங்கிரஸ் தலைவர் கிள்ளிவளவன் மறைவு... ஜெ., ராமதாஸ் இரங்கல்
சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் காமராஜர் ஆகியோரின் நெருங்கிய தோழராக விளங்கிய மூத்த காங்கிரஸ் தலைவர் தி.சு.கிள்ளிவளவன் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.
சென்னையில் 1926-ம் ஆண்டு பிறந்தவர் கிள்ளிவளவன். திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டப் பிரதிநிதியாக இருந்து பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். அண்ணா, திமுகவை தொடங்கிய பிறகு அண்ணாவின் நிழல்போல எப்போதும் அவருக்கு அருகில் இருந்து பணியாற்றியவர். எனினும், பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காமராஜருடன் மிக நெருக்கமான நட்பை பாராட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் உள்பட பல முக்கியப் பொறுப்புகளை அக்கட்சியில் வகித்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவதிப்பட்டு வந்த கிள்ளிவளவன், வறுமையாலும் பாதிக்கப்பட்டார். அவரது நிலை அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அண்மையில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் கிள்ளிவளவன் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் உடல் நிலை மோசமானதால் இன்று மாலை கிள்ளிவளவன் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் புதுக்குளத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
ஜெயலலிதா இரங்கல்
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.சு.கிள்ளிவளவன் இறந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். இவர், தன் முதுமையில், கவனிப்பார் இன்றி தனிமையிலும், ஏழ்மையிலும் தவித்தது தெரிந்து, அவரின் பெயரில், ஐந்து லட்சம் ரூபாயை, நிலை வைப்பில் செலுத்தி உதவினேன்.
அவர் உடல் நிலை தேறி, இயல்பு நிலைக்கு திரும்புவார் என, எதிர்பார்த்த நிலையில், மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு துயரமுற்றேன். அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராமதாஸ் இரங்கல்
பாமக நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
''காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (13.03.2015) காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய இரு தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர்; இணைந்து பணியாற்றியவர். எனக்கும் நல்ல நண்பராக திகழ்ந்தார். ஊழல், பணத்தாசை ஆகியவற்றின் நிழல் கூட தம்மை நெருங்காமல் பார்த்துக் கொண்டவர்.
இளம் வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இறுதி வரை அரசியலில் இருந்தாலும் எளிமை ஒன்றையே தனது அடையாளமாகக் கொண்டவர். சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழக அரசியலின் அனைத்து தகவல்களையும் தமது விரல் நுனியில் வைத்திருந்தவர். அவரது மறைவு தமிழக அரசியல் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ''












Click it and Unblock the Notifications