எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைக்க தயாரா?... வெற்றிவேல் அதிரடி!
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்களது சொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்கத் தயாரா என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை கட்சிக்குத் தரத் தயார். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் தங்கள் பெயரில் இருக்கும் அனைத்து சொத்துகளையும் கட்சிக்காகத் தரத் தயாரா என்று வெற்றிவேல் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை கைப்பற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதையடுத்து தினகரன் அணியினர் கடுமையான கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
ஆர்கே நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம், இடைத்தேர்தலில் டிடிவி. தினகரனுடன் சென்று வாக்கு முதல்வர், அமைச்சர்கள் தங்கமணி, வேலமணி சென்றார்களே ஏன்?. நியமனம் செல்லாது என்றால் ஏன் அவர்கள் வாக்கு சேகரிக்கச் சென்றனர், தினகரன் நியமித்த நிர்வாகிகள் மட்டுமே கட்சியில் செயல்படுவர்.

சவால்
பொதுச்செயலாளர் சசிகலா சிறை சென்றுள்ளதால் அவரிடம் அதிகாரம் பெற்று தினகரன் செயல்பட்டு வருகிறார். ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆரை கட்சியின் சொத்தாக இணைக்க சசிகலாவை சந்தித்து வலியுறுத்தி பெற்றுத் தரத் தயார், அதே போன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உள்ள சொத்துகள், பினாமி சொத்துகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கட்சிக்கு எழுதி வைக்கத் தயாரா. அவர்களுக்கு எங்கெங்கு என்னென்ன சொத்துகள் இருக்கிறது என்பதை நாங்கள் பட்டியல் எடுத்து வைத்துள்ளோம்.

ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்டாரா?
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை, முதல்வர் நடத்திய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்களிலும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து கட்சியில் பொறுப்பு கொடுத்துள்ளனர்.

எப்படி பொறுப்பு?
அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்கு மன்னிப்பு கேட்டாரா?. எந்த அடிப்படையில் அவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலருக்கு கட்சியில் எந்தத் தொடர்பும் இல்லை, ஆனால் இவர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டுள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடமா?
குருமூர்த்தி போன்றவர்கள் அதிமுகவை வைத்து பொம்மலாட்டம் நடத்துகின்றனர். துணை பொதுச்செயலாளர் கூட்டும் கூட்டம் தான் செல்லும், இவர்கள் நடத்தும் கூட்டம் எதுவும் செல்லாது. தேர்தல் ஆணையம் கட்டப்பஞ்சாயம் செய்யும் இடமில்லை.












Click it and Unblock the Notifications