ஊட்டியில்.. தமிழக ஆளுநர் ரவி! பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாடு இன்று ஆரம்பம்.. இதுதான் நீலகிரி பிளான்
ஊட்டி: ஊட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று ஆரம்பமாகிறது.. 2 நாள் நடைபெறும் இந்த மாநாடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்குகிறது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, வருடா வருடம் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார்.. அந்தவகையில், இந்த வருடத்துக்கான துணைவேந்தர்கள் மாநாடு இன்று ஊட்டியில் நடக்கிறது.

2 நாள்: இன்றும், நாளையும் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்கும் இந்த மாநாட்டை ஆளுநர் ரவி தொடங்கிவைக்கிறார்... ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
இதற்காக மாநிலத்திலுள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவிலும், நிறைவு விழாவிலும் குடியரசுத் தலைவர் உரையை ஆற்றுவார்... தொடக்க அமர்வின்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் சிறப்புரையாற்றுகிறார்.
சிறப்பம்சம்: இம்மாநாட்டில் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரியர் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய மனித வளங்களை ஊக்குவித்தல் தொடர்பான விவாதங்கள், விளக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, எதிர்கால சிறப்பு ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல், புதுமை மற்றும் தொழில் முனைவு, தேசிய சிறப்பு கட்டமைப்பின் மூலம்வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல், உலகளாவிய மனித வளங்கள், வளர்ந்துவரும் தொழில்துறை தேவைகளுக்கான ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் போன்ற தலைப்புகளின் கீழ் அமர்வுகளும், உரையாடல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டின்போது "பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள்" என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளனர்.
அனுபவங்கள்: அதுமட்டுமல்லாமல், நெட் அல்லது யுஜிசி-சிஐஎஸ்ஆர் தேர்வுகளில் தகுதிபெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச்பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள போகிறார்கள்..
மொத்தத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க போவதால், இந்த 2 நாள் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிளான்: இந்த மாநாட்டிற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து நேற்று ஊட்டிக்கு வந்தார். இன்றும், நாளையும் மாநாட்டை முடித்துக்கொண்டு, நாளை மறுநாள் அதாவது 29-ம் தேதி ஆளுநர் ரவி, கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சிமுனைகளை கண்டு ரசிக்கிறார். அதற்கு பிறகு 30-ம் தேதி ஊட்டியிலிருந்து சென்னை புறப்படுகிறார் ஆளுநர்.












Click it and Unblock the Notifications