சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், சட்டவிரோத கனிமக் கடத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், குவாரிகளை கண்காணிக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கனிம வள மேலாண்மையை மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கனிம வளங்களை அறிவியல் ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நிர்வகிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்கும் நோக்கில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். குறிப்பாக, கனிமக் குவாரிகளின் எல்லைகளை துல்லியமாகக் கண்காணிக்கவும், அங்கிருந்து எடுக்கப்படும் கனிமங்களின் அளவை சரியாக மதிப்பிடவும் ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோத கனிமக் கடத்தலைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, கனிம வருவாயை அதிகரிக்கும் புதிய வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்களும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன. கனிம வளங்களை நீடித்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் முறையாகப் பயன்படுத்துவதோடு, அரசின் வருவாயை மேம்படுத்தவும், சட்டவிரோத கனிமக் கடத்தலை முழுமையாகத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், இயற்கை வளங்கள்துறை அமைச்சர் டி.கே. பிரபு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications