கையெழுத்து போட்டுவிட்டு கண்டுக்காம போன விஜயகாந்த்… அதிர்ச்சியான தேமுதிக எம்.எல்.ஏக்கள்
சென்னை: நீண்ட நாட்களுக்குப் பின்னர் சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், அங்கு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தேமுதிக எம்.எல்.ஏக்களை கண்டுகொள்ளாமல் போனதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேமுதிக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 11.25 மணிக்கு தலைமை செயலகத்தில் 10ஆம் நம்பர் கேட் வழியாக சட்டசபை லாபியில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து சட்டசபை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் வெளியில் வந்து காரில் ஏறி சென்று விட்டார்.

தேமுதிகவினர் தர்ணா
அதே நேரத்தில் 4ஆம் நம்பர் கேட் அருகே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் பக்கம் வராமலேயே விஜயகாந்த் சென்றுவிட்டார்.

அதிர்ச்சியான எம்.எல்.ஏக்கள்
தங்களின் போராட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட ஆதரவு தெரிவித்த நிலையில் தங்கள் கட்சித்தலைவர் தங்களை கண்டுகொள்ளாமல் சென்று விட்டாரே என்று அதிர்ச்சியடைந்தனர்.

ஏன் இங்கே இருக்கீங்க
பாதி தூரம் சென்ற நிலையில்தான் நினைவு வந்திருக்கும் போல விஜயகாந்த் மீண்டும் திரும்பி தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் காரில் வந்து இறங்கிய அவர், ஏன் இன்னும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எழுந்து வாருங்கள். நாம் போகலாம் என்று கூப்பிட்டார்.

மக்களை அசிங்கப்படுத்துவதா
கேப்டனே சொல்லிட்டாரே கேட்டுத்தானே ஆகணும் என்று நினைத்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், சபாநாயகர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தே.மு.தி.க.வுக்காக வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்துகிறார். அ.தி.மு.க. அரசு, தேர்ந்து எடுக்கப்பட்ட எங்கள் எம்.எல்.ஏ.க்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்துகிறது என்றார்.

ஜெயலலிதா வழிகாட்டுதல்
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறுவது இல்லை. பொதுவாக பட்ஜெட் ரகசியமாக தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக சட்டசபையிலேயே முதல்வர் சொல்கிறார். இது கண்டிக்கத்தக்கது என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications