"காத்திருந்து...காத்திருந்து" .. யாரும் வராததால் வாலண்டியராக அழைத்து ம.ந.கூ.வில் இணைந்த விஜயகாந்த்!
சென்னை: வைதேகி காத்திருந்தாள் படத்தில் 'காத்திருந்து...காத்திருந்து.. காலங்கள் போனதடி... பூத்திருந்து... பூத்திருந்து.. பூவிழியும் நோகுதடி என நடிகர் விஜயகாந்த் பாடிய பாடல் மனதை வருடக் கூடியது... இந்த பாடல் வரிகள் தற்போதைய அரசியல் சூழலில் தேமுதிகவின் தலைவராக உருமாறியிருக்கும் விஜயகாந்துக்கு அப்படியே பொருந்திப் போவது காலத்தின் கோலம்தான்.. ஒரே வித்தியாசம், அதில் கடைசி வரை காத்திருந்து ஏமாந்தார்.. இதில் சுதாரித்துக் கொண்டு வைகோ அன் கோவுடன் போய் ஒட்டிக் கொண்டு விட்டார்.
காஞ்சிபுரத்தில் தேமுதிக மகளிர் அணி மாநாடு அண்மையில் நடைபெற்றது. அந்த மாநாடு நடைபெறும் நாள் இரவு வரை தேமுதிகவுக்காக திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை வழிமேல் விழிவைத்து காத்திருந்தன. ஆனால் அந்த இரவு தேமுதிக தனித்து போட்டியிடும் என்று 'தெள்ளத் தெளிவாக' விஜயகாந்த் அறிவித்திருந்தார். ஆனால், அவர் பேசி முடித்து அமர்ந்ததும் மீண்டும் மைக் பிடித்த அவரது மனைவி பிரேமலதா 'விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம்' என்றார். இதுவே தேமுதிக தொண்டர்கள் மற்றும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் விஜய்காந்தின் முடிவு இறுதியானது அல்ல என்பது தெளிவானது.

விஜயகாந்தின் இந்த நிலைப்பாட்டை அன்று இரவே பாஜக, மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் விழுந்தடித்து வரவேற்றன... தேமுதிகவும் ஆஹா, நம்ம தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையப் போகுது; ஜெயலலிதா, கருணாநிதி தலைமையில் கூட்டணிகள் என்பது போல விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி என ஒரு சரித்திரத்தில் இடம்பெறப் போவதாக பிரேமலதாவும் கற்பனை செய்து கொண்டிருந்தார்.
பொழுது விடிந்தது... தேமுதிக தலைமையை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த கட்சிகள் வருவார்கள் என கட்சி தலைமை அலுவலகத்தில் காத்திருந்தார் விஜயகாந்த்... ஆனால் எவருமே எட்டிப் பார்க்கவில்லை... அங்கே மயான அமைதிதான் நீடித்தது...
இந்த காத்திருப்பு ஒருநாள் அல்ல... வாரங்கள் கணக்காக ஒரு தொடர் கதையாகி நீடித்துவருகிறது. நேற்று வரை நமக்காக காத்திருந்த எவருமே நம்முடைய தலைமையை ஏற்றுக் கொண்டு வரவேமாட்டார்கள் என்பதை மெல்லப் புரிந்தவராகத்தான் கொஞ்சம் இறங்கிப் போய் திமுகவுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுத்தார்.
ஆனாலும் எப்படியும் பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்மை தேடி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு விஜயகாந்திடம் தொடர்ந்தும் இருந்தது. சென்னையில் நேற்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் முடிந்த உடன் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திப்பார்கள் என ஊடக வட்டாரங்களில் தகவல் பரவியது.
இதை விஜயகாந்தும் நம்பி அவசரம் அவசரமாக தேமுதிக அலுவலகத்துக்கு காலை 11.00 மணிக்கே வந்து அமர்ந்துவிட்டார். பகல் 1 மணியைக் கடந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஒன்றாக புறப்பட்டனர்.... ஆனால் அவர்கள் விஜயகாந்த் வீட்டுக்குப் போகாமல் தங்களது வீட்டுக்குப் போய்விட்டனர். இதனால் "'காத்திருந்து...காத்திருந்து.. காலங்கள் போனதடி" என்ற நிலைக்கு தள்ளப்பட்டவரானார் விஜயகாந்த்.
இந்நிலையில் அவருக்கு சற்றே ஆறுதல் தரும் வகையில், திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டி அமைந்திருந்தது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கருணாநிதி கூறியிருந்தார். இதனால் அவங்க போனால் போகட்டும்... திமுக இருக்கிறதே என்ற தெம்பு விஜயகாந்துக்கு வந்தது.
ஆனால் அதற்கும் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தேமுதிகவுக்கு முன்னர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில்தான் கருணாநிதி கூறியிருந்தார்.. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என அவர் பட்டென கதவுகளை சாத்திவிட்டார். இதனால் இருந்த ஒற்றை நம்பிக்கையையும் இழந்த நிலையில் "பூத்திருந்து...பூத்திருந்து.. பூவிழியும் நோகுதடி" என்ற நிலைக்குப் போய் விட்டார் விஜயகாந்த்.
இப்படியே உட்கார்ந்திருந்தால், திண்ணையெல்லாம் காலியாகிப் போகும்.. ஒரு தொன்னை கூட கிடைக்காமல் போகும் நிலையும் வரலாம் என்று நொந்து போன விஜயகாந்த், வேறு வழியில்லாமல் இன்று மக்கள் நலக் கூட்டணிக்கு தானே நேரடியாக அழைப்பு விடுத்து கூப்பிட்டார். இதையடுத்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும் கொத்தாக - கெத்தாக கிளம்பிப் போய் விட்டனர். முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை விட்டுத் தந்துவிட்டது விஜய்காந்தை முதல்வராக ஏற்றுக் கொண்டு கூட்டணி அமைத்துள்ளனர்.
காத்திருந்தாலும் மற்றவர்களை காக்க வைத்திருந்தாலும் நினைத்தை விஜய்காந்த் சாதித்துவிட்டது என்னமோ உண்மை.












Click it and Unblock the Notifications