எப்படிப் பார்த்தாலும் ரஜினியை விட விஜயகாந்த்தான் "தில்" அரசியல்வாதி.!
Recommended Video

சென்னை: என்னதான் இருந்தாலும் விஜயகாந்த்துக்கு இருந்த தைரியம், தில், துணிச்சல், ரஜினிகாந்த்திடம் நிறையவே மிஸ் ஆகிறது. காரணம், விஜயகாந்த்தின் அரசியல் பாதையைப் பார்த்தால் அவரைப் போன்ற மிகத் துணிச்சலான புதுமுக அரசியல்வாதியை தமிழகம் பார்த்ததில்லை.
கருணாநிதிக்கு எதிராக எம்ஜிஆர் செய்த அரசியலை விட அபாரமான துணிச்சலுடன் கூடியது விஜயகாந்த் நடத்திய அரசியல். எல்லோருமே இதை ஒத்துக் கொள்வார்கள். காரணம், எம்ஜிஆர், கருணாநிதியை எதிர்த்து மட்டுமே அரசியல் செய்தார். ஆனால் விஜயகாந்த்தோ, ஜெயலலிதா - கருணாநிதி என இரு இமயங்களை எதிர்த்து முட்டி மோதியவர்.
இவர்களுடன் ஒப்பிடும்போது ரஜினிகாந்த்தை எந்த சீனிலுமே சேர்க்க முடியாது. விஜயகாந்த்தின் துணி்ச்சல், தைரியத்திற்கு முன்பு ரஜினி படு வீக்காகவே காட்சி தருகிறார்.

தெளிவான விஜயகாந்த்
விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதல் அவருக்கு உடல் நலம் பாதித்து, தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் வரை அவரது செயல்பாடுகள் கிட்டத்தட்ட புயல் வேகத்தில்தான் இருந்தன. வருவேன் என்று சொன்னார். வந்தார். பெரும் சலசலப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தினார். சாதித்தார். ஓய்ந்து போனார். இதுதான் விஜயகாந்த்.

அசரடித்த துணிச்சல்
கருணாநிதி என்ற ஜாம்பவானை தைரியமாக சந்தித்தார். ஜெயலலிதாவின் பாய்ச்சல்களை லாவகமாக எதிர்கொண்டார். சட்டசபையில் வைத்து ஜெயலலிதாவுக்கு முன்பாக அவர் போட்ட போட்டில் மு.க.ஸ்டாலின், துரைமுருகனே வெலவெலத்துப் போய் பார்த்த காட்சியை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

விடாமல் வெளுத்த விஜயகாந்த்
எத்தனை அடிகள், சறுக்கல்கள் வந்தாலும் விடாமல் போராடியவர் விஜயகாந்த். யாருடைய ஆதரவும் இல்லாமல், தனி மனிதராக, தன்னை மட்டுமே நம்பி களம் கண்டு போராடி வெற்றிகளைப் பெற்றவர் விஜயகாந்த். அவர் செய்த ஒரே தவறு வழக்கமான அரசியல்வாதி போல மாறிப் போனதுதான். அதிமுக, பாஜக என மாறி மாறி சவாரி செய்ய ஆரம்பித்தபோதுதான் மக்களின் அபிமானத்தை அவர் பறி கொடுத்தார்.

ரஜினி எங்கே விஜயகாந்த் எங்கே
எம்ஜிஆருடன் போய் ரஜினியை சிலர் ஒப்பிடுகிறார்கள். முதலில் விஜயகாந்த்துடன் கூட ரஜினியை ஒப்பிட முடியாது என்பதே நிதர்சனம். விஜயகாந்த் போட்ட போடு எங்கே, ரஜினியின் பயம் எங்கே. ஆயிரம் வேறுபாடுகள் உள்ளன இருவருக்கும். யாருமே இல்லாத ஊரில் டீ ஆற்ற வந்துள்ளவர் போலத்தான் ரஜினியைப் பார்க்க முடியும். ஆனால் விஜயகாந்த் இமயங்களுடன் மோதியவர். முத்திரை பதித்தவர்.

முன்பே வந்திருக்க வேண்டியதுதானே
கருணாநிதியும், ஜெயலலிதாவும் தீவிர அரசியலில் இருந்தபோது ரஜினியும் களம் இறங்கியிருந்தால் அது துணிச்சல், நேர்மை, தைரியமான அரசியல் என்று சொல்லலாம். ஆனால் எதிரிகளே இல்லாத சமயம் பார்த்து, படு சேஃப்டியாக களம் இறங்கி முழங்குவதில் என்ன துணிச்சல் இருக்கிறது என்று சத்தியமாக புரியவில்லை.
எப்படிப் பார்த்தாலும் ரஜினியை விட விஜயகாந்தான் துணிச்சலான அரசியல்வாதி என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications