முதல்வர் பதவிக்கு விஜயகாந்த் சரிப்பட்டு வரமாட்டார்: ராதிகா
சென்னை: தமிழகத்தின் முதல்வராவதற்கு விஜயகாந்திற்கு தகுதி இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவி ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அவரது மனைவியும், கட்சியின் மகளிர் அணித் தலைவருமான ராதிகா சரத்குமார் ஈடுபட்டுள்ளார்.
குலசேகரன்பட்டினம் வடக்கூர் அண்ணா சிலை பகுதியில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். பின்னர் அவர் அனுகூலபுரம், மணப்பாடு, புதுக்குடியேற்று, உடன்குடி, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, மானாடு, மெஞ்ஞானபுரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

குடும்ப அரசியல்
தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அது அவர்களின் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டது. விஜயகாந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் குழப்பமே மிஞ்சி உள்ளது.

ஜெ.வை ஜெயிக்க முடியாது
முதல்வர் ஜெயலலிதாவை எத்தனை பேர் எதிர்த்தாலும், அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என்றார். அவர் தனி ஒரு பெண்ணாக நின்று சாதனை படைத்து வருகிறார். அவருக்கு நிகர், அவர் தான், வேறு யாரும் கிடையாது என்றார்.

வெற்றி உறுதி
முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி மக்கள் நலத்திட்டங்களால், திருச்செந்தூரில் என்னுடைய கணவரின் வெற்றி உறுதியாகிவிட்டது. மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மணப்பாட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும்.

தொண்டர்கள் கட்சி
தொண்டர்கள் மிகுந்த கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. அதேபோன்று ச.ம.க.விலும் அதிக தொண்டர்கள் உள்ளனர். ஆனால் தொண்டர்கள் இல்லாமல், தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அ.தி.மு.க., ச.ம.க. தொண்டர்கள் இணைந்து உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

விஜயகாந்துக்கு தகுதியில்லை
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் பேசுவது என்னவென்று அவருக்கே புரியாத நிலையில் மக்களுக்கு எப்படி புரியும். விஜயகாந்தின் திறமை குறித்து அவருடன் பல திரைப்படங்களில் நடித்தவர் என்ற முறையில் எனக்குத் தெரியும். முதல்வர் ஆகும் தகுதி அவருக்கு இல்லை என்றார் ராதிகா.












Click it and Unblock the Notifications