பணப்பட்டுவாடா புகார்.. அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.. விஜயகாந்த் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் பதவி விலகி, வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததை உறுதி செய்யப்பட்டதன் விளைவாக இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டது.

vijayakanth welcomed case against CM Palanisamy over cash distribution issue

இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டு பல நாட்கள் ஆகியும் தீர்வு வராத நிலையில், நேற்று தேர்தல் ஆணையம், பணப் பட்டுவாடா நடைபெற்றது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும், வேட்பாளர் டிடிவி தினகரன் மற்றும் நான்கு தமிழக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது வரவேற்கத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கின்ற நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டு முதல்வர் பேரிலும், ஆளும்கட்சி அமைச்சர்கள் பேரிலும் வந்ததனால், இதை கருத்தில் கொண்டு,தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அமைச்சர்கள் பதவி விலகி, வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டும்.

குற்றமற்றவர் என நிரூபிக்கத் தவறினால் அவர்கள் ஆட்சி செய்ய தகுதியில்லாதவர்களாக கருதப்படுவார்கள். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று இவர்கள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வருமான வரித் துறையும் ஆய்வு செய்யவேண்டும். எனவே அதிமுக அரசு இதற்கான விளக்கத்தை உடனடியாக கொடுக்கவேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், இனிவரும் காலங்களில் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அந்தவகையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தேமுதிக வரவேற்கிறது.

இனிவரும் தேர்தல் காலங்களில் பணப் பட்டுவாடா என்பது இல்லாமல், நேர்மையான தேர்தலாக நடக்க, இந்த உத்தரவு நிச்சயமாக பயனளிக்கும். எனவே இதை வரவேற்கிறோம். ஆளும்கட்சியினர் இந்த வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK leader vijayakanth welcome that EC order case against CM Palanisamy over cash distribution issue.
Please Wait while comments are loading...