மளிகை + அத்தியாவசிய பொருள்.. கள்ளச்சாராய பாதிப்பு குடும்பத்துக்கு உதவி.. விஜய் கட்சி முக்கிய முடிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில் 100க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. மெத்தனால் கலந்த இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 150க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து ஒவ்வொருவராக இறந்து வருகின்றனர்.
நேற்று இரவு வரை மொத்தம் 52 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலருக்கு கண்பார்வை பறிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி சென்று சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை சார்பில் அதன் எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சொல்லுக்கிணங்க, தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வழிக்காட்டுதலின்படி கள்ளக்கறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மறஅறம் அத்தியாவசிய பொருட்களை மாவட்ட தலைமை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வழங்கப்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
அதன்படி பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாவலர் பராமரிப்பில் வளர 18 வயது நிறைவடையும் வரை ஒவ்வொரு மாதமும் மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்படும்.*பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் தலா ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரணத்திலிருந்து நிலையான வைப்புத்தொகை வைக்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரணத்திலிருந்து வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.
அரசு தவிர அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை தனித்தனியே செய்வதாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவதாக பாஜக அறிவித்துள்ளது. அதேபோல் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை ஏற்கும் என்று அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில், ‛‛கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்கும். இக்குழந்தைகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும்'' என அறிவித்துள்ளார். மேலும் விசிக தலைவர் திருமாவளவனும் சுமார் 20 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவி செய்துள்ளார். அந்த வரிசையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications