Exclusive: இன்னும் சில தினங்களில்.. "சின்னம்மா" முதல்வராவார்-அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்
சசிகலா சில தினங்களில் அதிமுக பொதுச்செயலாளராவும், முதல்வராகவும் பதவியேற்பார் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்று கூறி கட்சி நிர்வாகிகள், எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்ட வாரியாக அணி அணியாக தீர்மானம் நிறைவேற்றி போயஸ்கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சின்னம்மா நீங்க தலைமையேற்று கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று அனைவரும் கேட்கின்றனர். அதற்கு சசிகலாவோ, நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைக்கிறார்.
சசிகலாவிற்காக தனது முதல்வர் பதவியை சிந்தாமல் சிதறாமல் விட்டுக்கொடுப்பார் ஓ.பன்னீர் செல்வம். அவர் விசுவாசம் மிக்க அதிமுக தொண்டர். பணிவுக்கு உதாரணமே அவர்தான் என்று கூறினார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். அவரேதான் பின்னர், ஓபிஎஸ்க்கு எதிராக போடப்பட்ட தீர்மானம் அல்ல இது என்று கூறினார்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணனிடம் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் நமக்கு அளித்த பிரத்யே பேட்டி

சின்னம்மாதான் எல்லாமே
ஒன் இந்தியா தமிழ் : சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்வது பற்றி நிர்வாகிகள் ஏகமனதாக கோரிக்கை வைத்த நிலையில் திடீரென முதல்வராகவேண்டும் என்று கோரிக்கை வைப்பது ஏன்?
ஏ. நவநீதகிருஷ்ணன் எம்.பி: அம்மா இருக்கும் போதே எந்த தகவல் என்றாலும் சின்னம்மா மூலமாகத்தான் போகும். அம்மாவை நேரடியாக பார்க்க முடியாது. ஆட்சியோ, கட்சியோ சின்னம்மாவின் நேரடி கண்காணிப்பு இருந்தது. இப்போது அம்மா இல்லை என்பதால் சின்னம்மாவை பொறுப்பேற்க சொல்லி அழைக்கிறோம்.

விரைவில் முதல்வர் ஆவார்
ஒன் இந்தியா தமிழ்: முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென்று சசிகலாவை முன்னிறுத்துவது ஏன்? சசிகலாவிற்காக பதவியை விட்டுக்கொடுப்பார் ஓபிஎஸ் என்று அதிமுக அமைச்சர் கூறுகிறாரே?
நவநீதகிருஷ்ணன் எம்.பி: சின்னம்மா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வர் ஆகியிருப்பார். அவரை யாரும் கேட்க மாட்டார்கள். ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தற்போது கட்சி சார்பில் முதல்வர் பொறுப்பில் உள்ளார். விரைவில் சின்னம்மா சசிகலா முதல்வராக பொறுப்பேற்பார்.

ஒருமித்த முடிவுதான்
ஒன் இந்தியா தமிழ்: நிர்வாகிகள் வரையில்தான் சசிகலாவிற்கு ஆதரவு, தொண்டர்கள் மத்தியில் சசிகலாவை முதல்வராகவோ, பொதுச்செயலாளராகவோ ஏற்றுக்கொள்வதில் சர்ச்சை நிலவுவதாக கூறப்படுகிறதே?
நவநீதகிருஷ்ணன் எம்.பி: கட்சியோ, ஆட்சியோ இரண்டிற்கும் சின்னம்மா தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் கட்சியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் நிலைப்பாடு. அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ஒரே கருத்தைத்தான் முன் வைத்துள்ளோம்.

புதுச்சேரியில் தீர்மானம்
புதுச்சேரியில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட கோகுலகிருஷ்ணனிடம், புதுவை நிர்வாகிகள் நிலைப்பாடு பற்றிய கேள்வியை முன்வைத்தோம். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக பொதுச்செயலாளராக சின்னம்மாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications