பாமக ஆட்சிக்கு வந்தால் ஃப்ரீயாக பூச்சி மருந்து தருவோம் - டாக்டர் ராமதாஸ்
திருக்கோவிலூர்: பாமக ஆட்சியைப் பிடித்தால் விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சி மருந்து, உரம் ஆகியவற்றை வழங்குவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் மேலமங்கலம், சிறுவானூர், தக்கா, ஏமப்பேர், செம்மார், ஏனாதிமங்கலம் மற்றும் வளையாம்பட்டு ஆகிய கிராமங்களில் பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:

மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சிதானா...?
தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் தொடர்ந்து 47 வருடங்கள் ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் தமிழகம் முன்னேற்றம் காணவில்லை. மாறாக ஆட்சியாளர்கள்தான் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்றுள்ளனர்.

வாக்களித்த மக்களுக்கு மது எனும் விஷம்
வாக்களித்த மக்களுக்கு மது எனும் விஷத்தை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறவே முடியாமல் இன்னமும் அடித்தட்டு நிலையிலேயே உள்ளனர்.

ஒருமுறை பாமகவுக்கு வாய்ப்பளியுங்கள்
தமிழகம் வளர்ச்சி பெறவும், தமிழக மக்கள் வாழ்வில் உயர்வு பெறவும் ஒருமுறை பா.ம.க.வுக்கு வாய்ப்பு கொடுங்கள், 47 ஆண்டுகாலம் ஏமாந்த நீங்கள் இந்த ஒருமுறை பா.ம.க.வுக்கு வாய்ப்பு கொடுத்தால் 2016-ல் அன்புமணிராமதாசை முதல்வராக்கும் நிலை வரும். அப்படி ஒரு நிலை வரும்போது மத்திய அமைச்சராக அன்புமணி ராமதாஸ் சிறப்பாக செயல்பட்டு அதன் பலனாக உலகளவில் பாராட்டப்பட்டதுபோல் தமிழகத்தில் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ்தான் முதல்வர் என்னும் வகையில் சிறப்பாக செயல்படுவார்.

மதுவை ஒழித்தாலே முன்னேறி விடலாம்
தமிழகத்தில் மது என்னும் கொடிய அரக்கனை ஒழித்துவிட்டாலே நாம் பெரும் முன்னேற்றம் காணமுடியும். பா.ம.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும், இலவச கல்வி கட்டாயமாக்கப்படும், ஊராட்சிக்கு ஒரு டிராக்டர் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து இலவசம்
விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக தரப்படும், குறிப்பாக விளைபொருட்களை விளைவித்த விவசாயிகளுக்கே விலை நிர்ணயம் செய்யும் உரிமை கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications