திமுக உறுப்பினர்களின் உரிமையை நிலைநாட்ட கோட்டைக்கு செல்வோம்- ஸ்டாலின்
சென்னை: சட்டசபைக்கு செல்ல முடியாவிட்டாலும், திமுக உறுப்பினர்களின் உரிமையை நிலைநாட்ட திங்கட்கிழமை சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்துக்கு செல்வேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறை மானியக் கோரிக்கையை முதல்வர் திங்கட்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறார்.
கோட்டையே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலையை முன்கூட்டியே சித்தரித்து உள்ளார்கள். முதல்வரே, தமிழகத்தின் தலைமைச் செயலகமே இன்றைக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

எங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக, மக்களுடைய பிரச்சினைகளை உரிமையோடு அவையில் எடுத்துச் சொல்வதற்காக நாங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகிறோம்.
சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளாகாத தி.மு.க. உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையில் பங்கெடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அமு சஸ்பென்ஸ்.
சட்டசபைக்கு என்னால் வரமுடியாது. சட்டசபை அலுவலகம் என ஒன்று உள்ளதே. அங்கு வரக்கூடாது என்று உத்தரவு கிடையாது. அலுவலகத்திற்கு செல்ல அனுமதி மறுத்ததே தவறு. எனவேதான் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறோம்.
முன்னதாக நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்திவைத்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் இன்றைக்கு சட்டசபை இருக்கிறது என்று சொல்வேனே தவிர, ஒரு சட்டசபை செயல்படுகிறது என்று சொல்ல மாட்டேன்.
இன்று என்ன நிலை என்பது உங்களுக்கு தெரியும். எங்கள் மீது 2 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 2 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வரக்கூடிய வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த திருமணத்துக்கு வருவோமா? வருகிற வழியிலேயே கைது செய்யப்படுவோமா? என்று கூட எங்களுக்கு சந்தேகம் இருந்தது.
ஒருவேளை இந்த திருமண விழாவில் பேசிவிட்டு வெளியே செல்லும்போது கூட கைது செய்யப்படலாம். அந்த நிலையில் நாங்கள் வந்திருக்கிறோம். எதற்காக இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
கடந்த 2 நாட்களாக நாங்கள் சட்டசபைக்கு உள்ளே செல்ல முடியாத நிலையில், ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் சட்டசபை எப்படி செயல்பட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மாதிரி சட்டசபையை நாங்கள் சட்டமன்ற வளாகத்தில் நடத்தினோம்.
காவல்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினுடைய மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடத்த வேண்டும்.
அந்த காவல்துறை முதல்வர் பொறுப்பில் இருக்கிறது. அதற்கு பதில் அளித்து பேசவேண்டியது முதல்வர் ஆனால் தற்போது என்ன நிலை என்றால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியே இல்லாமல் காவல்துறை மானிய விவாதம் நடக்க இருக்கிறது. இதுதான் வேடிக்கை.
என்றும் ஸ்டாலின் கூறினார்.
திட்டமிட்டு, வேண்டுமென்றே சட்டசபைக்குள் நாங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு பிரச்சினையை கிளப்பி, அந்த பிரச்சினைக்கு உரிய பரிகாரத்தை வழங்கிட வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கேட்டபோது பரிகாரம் கிடைக்கவில்லை.
எந்தவித அறிவிப்பும் இல்லாமல், எச்சரிக்கையும் இல்லாமல், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நாங்கள் எழுந்து நின்று எங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்கிறபோது ஏற்கனவே எழுதி தயாராக வைத்திருப்பதைப்போல ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.
தி.மு.க.வின் அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற ஒரு உத்தரவு. நாங்கள் வெளியே போய் சேர்வதற்குள் ஒரு வார காலம் தி.மு.க. உறுப்பினர்கள் அத்தனை பேரும் சஸ்பெண்டு என்று தீர்ப்பை வழங்கினார்.
சட்டசபை இல்லை என்றாலும் தி.மு.க.வுக்கு மக்கள் மன்றம் இருக்கிறது. அந்த மக்கள் மன்றத்தை தி.மு.க. என்றைக்கும் சந்திக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபைக்குள் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சட்டசபை அலுவலகத்திற்கு செல்வேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications