என்னாச்சு காவலர்களின் கோரிக்கை?.. ஏமாற்றம் தந்த முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காவல்துறை மானியக்கோரிக்கை தொடங்கிய கடந்த 6 ஆம் தேதியன்று சட்டசபை முன்பு போராடியும் எந்த பலனும் இல்லையே என்று ஓய்வு பெற்ற காவல்துறையினர், குடும்பத்தினர் தற்போது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

இந்தியாவிலேயே குறைந்த சம்பளம் பெறுவது தமிழக காவலர்கள், 24 மணி நேரமும் பணியாற்றுவது தமிழக காவலர்கள், பணிச்சுமையால் வீடு திரும்பமுடியால் அவதியில் தமிழக காவலர்கள் என பல்வேறு தகவல்களை கொண்ட போஸ்டர்கள் சென்னை, திருச்சியில் ஒட்டப்பட்டன. அதேபோல், சமூக வலைதளங்களிலும் காவலர்களின் கோரிக்கைகள் குறிப்பாக புரட்சி வெடிக்கும் என்று பரபரப்பாக பரவியது. இதனால், சட்டமன்றத்தை முற்றுகையிட போவதாக வெளியான தகவலை அடுத்து சட்டமன்ற வளாகம், மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்புக்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்ட ஒழுங்கு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது காவலர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற காவலர்கள் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், காவலர்கள் நலனுக்கு எந்த முக்கியத்துவத்தையும் இந்த அரசு தரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, பயணப்படிகள் மற்றும் சங்கம் அமைக்க அனுமதி ஆகியவை காவலர்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும். ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் சங்கம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது, ஆனால் காவலர்களுக்கு அனுமதி மறுப்பது சரியான நிலைப்பாடு இல்லை என்று வருத்தப்பட்டார்கள் காவலர்கள்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

தங்களது கோரிக்கைகளில் ஒன்றிரண்டு கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் முதல்வரின் பதில் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் காவலர்கள் குமுறுகிறார்கள். "போராட்டம் நடத்தப்பட்ட பிறகும் அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றத்தை நாடுவதை தவிற எந்த வழியும் இல்லை" என்றார் மூத்த காவலர் ஒருவர்.

அறிவிப்பின் சாராம்சம்

அறிவிப்பின் சாராம்சம்

முதல்வர் பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்த 54 அறிவிப்புகளில் ஒன்றிரண்டு மட்டுமே காவல்துறையினர் அதாவது காவல் பணியாளர்களைப் பற்றி இருந்தது. மற்றவையெல்லாம் கட்டிடம் கட்டப்படும், கருவிகள் வாங்கப்படும், சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளே என்று கொந்தளிக்கின்றனர் ஓய்வு பெற்ற காவலர்கள்.

வழக்கு தொடர திட்டம்

வழக்கு தொடர திட்டம்

தற்போது மேலும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுள்ள டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று சொல்லும் காவலர்கள், மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் முன்னாள் டிஜிபியுமான நட்ராஜையும் சந்தித்து முறையிட்டிருந்தனர். அதேபோல், முதலமைச்சர் பிரிவுக்கும் பலமுறை மனுக்கள் அனுப்பியிருந்தனர். அவற்றை அடிப்படையாகக்கொண்டு வழக்கு தொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கை கொடுக்குமா நீதித்துறை

கை கொடுக்குமா நீதித்துறை

அரசுக்கு பாதுகாவலனாக இருக்கும் காவலர்களை அரசு புறக்கணிப்பதால், காவலர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amidst protests Welfare of Police oriented announcements not took place in CM’s announcements at assembly today
Please Wait while comments are loading...