விரைவில் நல்ல முடிவு? நாசருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. சிடிஆர் நிர்மல்குமார் ட்விட்டால் பரபரப்பு
சென்னை: விரைவில் நல்ல முடிவெடுக்க இருக்கும் அண்ணன் நாசர் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று அதிமுகவைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் போட்ட ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக டி.ஆர்.பாலு எம்.பி.யின் மகன் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்க உள்ளார். ஆனால் என்ன துறைக்கு அமைச்சராக போகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தொழில்துறை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று ஒரு தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் உண்மையா என்பதை அரசு அறிவித்தால் தான் தெரியும். அதேபோல் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தென்னரசு உள்ளிட்ட சிலரின் பொறுப்புகள் மாற்றப்படலாம் என்றும் சொல்கிறார்கள். என்ன பொறுப்பு மாறும் என்பது தெரியவில்லை.

ஆவடி நாசர் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆவடி நாசர் பால்வளத்துறையில் சரியாக கவனம் செலுத்தாததால் அதள பாதாளத்துக்கு அதன் நிர்வாகம் சென்று விட்டதாகவும், பால் தட்டுப்பாடு மற்றும் பால் விநியோகம் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், வந்த பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள் ஊடகவியலாளர்கள்.
திமுகவில் பல ஆண்டுகளாக உள்ள ஆவடி நாசர், முதல்வர் முக ஸ்டாலினின் தீவிர விசுவாசிஆவார். தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலம் முதல் , மு.க.ஸ்டாலின் சொல்லுக்கு கட்டுப்பட்டவராக இருந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சி சேர்மனாக இருந்த ஆவடி நாசர், திமுகவில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.

ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி: கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்ற ஆவடி நாசர், அடுத்து நடந்த 2021 தேர்தலில் பெரும்பான்மை வித்தியாசத்தில் மாஃபா.பாண்டியராஜனை வீழ்த்தினார். அதற்கு பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு தனது அமைச்சரவையில் பால் வளத்துறையை கொடுத்து நாசருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
ஆவின் நிர்வாகம்: இந்நிலையில் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல் விட்டதால் ஆவின் நிறுவனம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்துக்கு முழுமையாக பால் ஊற்றி வந்த நிலையில் இப்போது நிலைமை தலைகீழாக போய் பல்வேறு மாவட்டங்களில் தனியார் கம்பெனிகளுக்கு பால் ஊற்றுவதால் ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.ஆவின் நிர்வாகம் பெரிய வளர்ச்சி பெறவில்லை என்ற புகார் உள்ளது. இதுஒருபுறம் எனில் ஆவடி நாசரின் மகன் ஆசிம்ராஜா ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டதாகவும் புகார்கள் உள்ளது.
பதவி இழந்த அப்பா மகன்: ஆவடியில் உள்ள 5-வது காவல் பெட்டாலியனுக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. கொடி நட்டு கடைகள் போடப்பட்டதற்கு ஆசிம்ராஜா பின்னணியில் இருந்ததாக புகார்கள் எழுந்தது. காவல்துறை நிலத்தையே ஆக்கிரமிப்பு செய்த புகார் காரணமாக ஆசிம்ராஜாவின் மாநகரச் செயலாளர் பொறுப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறிபோனது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கீழே கிடந்த கல்லை எடுத்து தொண்டரை நோக்கி ஆவடி நாசர் வீசிய சம்பவங்களும் கட்சி தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியது. அத்துடன் பால்வளத்துறையில் உள்ள சில நிர்வாக பிரச்சினைகளும் ஆவடி நாசர் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.

30 ஆண்டு நட்பு: பதவியை இழந்த ஆவடி நாசர் தற்போது மிகுந்த மனவருத்ததில் இருக்கிறாராம். அமைச்சர் பதவி போனாலும், திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருக்கும் நாசர், தனக்கு மீண்டும் முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். 30 ஆண்டுகள் ஸ்டாலினின் நட்பு வட்டத்தில் உள்ள நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிர்மல்குமார் ட்வீட் : இந்த சூழலில் அதிமுகவில் இருந்து ஆவடி நாசருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஆவடி நாசர் அடுத்து என்ன முடிவெடுக்க போகிறார் என்பதும் இதுவரை வெளியாகவில்லை. இந்த சூழலில் பாஜகவில் இருந்து பிரிந்து அண்மையில் அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்ட ட்வீட் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது
உதயநிதி களப்பணி: சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்ட பதிவில், அண்ணன் ஆவடி நாசர் செய்த களப்பணியில் உதயநிதி 1% செய்திருப்பாரா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உழைப்பவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பு விரைவில் நல்ல முடிவெடுக்க இருக்கும் அண்ணன் நாசர் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... என்று நிர்மல்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications