ஜெ. மரணம்.. 75 நாள் மர்மத்தை 60 நாளில் விசாரித்து முடிப்பாரா நீதிபதி ஆறுமுகசாமி?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு டிசம்பர் 25க்குள் விசாரணையை நடத்தி முடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஒரு மாதமா தாமதத்திற்குப் பின்னர் விசாரணையைத் தொடங்கவுள்ள நிலையில், திட்டமிட்டபடி அவர் டிசம்பர் 25க்குள் விசாரணையை நடத்தி முடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு 25.09.2017ல் அமைத்தது.
சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின்பேரில், விசாரணை அறைக்குள் நடக்கும் உரையாடல்கள் வெளியில் கேட்காத அளவுக்கு, திரையரங்குகளில் உள்ள கட்டமைப்புபோல அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கவே இல்லை.

இன்னும் தொடங்கவில்லை
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஒரு மாதமாகியும் விசாரணை நடைபெறவே இல்லை. இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து இந்த விசாரணையின் போது கேட்கப்படும் என்று தெரிகிறது.

போயஸ் கார்டன் வீட்டிலிருந்து
திங்கட்கிழமையன்று போயஸ்கார்டனில் இருந்து ஆறுமுகசாமி தன்னுடைய விசாரணையைத் தொடங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் விசாரணையைத் தொடங்கும் போது அங்கு ஏன் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஆட்கள் இல்லை. செப்டடம்பர் 22, 2016ல் ஜெ வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் என்ன ஆனது என்பதையெல்லாம் ஆறுமுகசாமி விசாரிப்பாரா. ஜெயலலிதா உடல்நிலைசரியில்லாத சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னர் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள், வேலையாட்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை துவங்குமா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இட்லி சாப்பிட்டாரா?
ஜெயலலிதா மருத்துமனையில் செவிலியர்களிடம் பேசினார், இட்லி சாப்பிட்டார், தயிர் சாதம் சாப்பிட்டார் என்ற சந்தேகங்கள் தீர்க்கப்படுமா?. அக்டோபர் மாதம் முதல் சசிகலாவையே ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்குள் அனுமதிக்கவில்லை என்று தினகரன் சொன்னது உள்ளிட்ட மருத்துவமனையில் நடைபெற்ற விஷயங்கள் அனைத்தையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா ஆறுமுகசாமி.

டிசம்பர் 25க்குள் முடியுமா?
75 நாட்கள் நடந்த சம்பவத்தை நீதிபதி ஆறுமுகசாமி டிசம்பர் 25க்குள் விசாரித்து முடித்துவிடுவாரா. அவ்வாறு விசாரணை முடிக்கப்பட்டால் அது முழுமையான விசாரணையாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே அவர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு கோருவாரா சொன்னபடி விசாரணையை வெளிப்படைத்தன்மையோடு நடத்துவார் என்றால் நிச்சயம் காலநீட்டிப்பு அவசியமானதே.

ஆறுமுகசாமி அறிவிப்பு
இதனிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் இறந்தது வரையிலான தகவல்கள் குறித்து தனிப்பட்ட முறையிலோ நேரடியாக அறிந்தவர்களோ அதுகுறித்தத் தகவல்களை பிரமாணப்பத்திரமாக விசாரணை ஆணையத்திடம் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளார். நவம்பர் 22ம் தேதிக்குள் இந்த அறிக்கைகளை தபால் மூலமாகவோ நேரடியாகவோ வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications