சானிடரி நாப்கினுக்கான வரி விலக்கப்படுமா?... பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
சானிடரி நாப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியானது மத்திய பட்ஜெட்டில் விலக்கு அளிக்கப்படுமா என்பது மத்திய பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சென்னை : இரண்டு வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தொழில்துறையினர், விவசாயத் துறையினர் என்ன அறிவிப்பை மத்திய அரசு வெளியிடப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளுக்கும் நிதி ஒதுக்குவது, திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கியது மத்திய பட்ஜெட். தொழில்துறையினர் தங்கள் வர்த்தகத்திற்கு ஏற்ப வரியில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுகின்றனவா என்பதையே எதிர்பார்ப்பர்.
இதே போன்று கடந்த ஆண்டே தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருமான வரி உச்சவரம்பில் மத்திய அரசு எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. தனி நபர் வருமானம் (பெண்கள் உள்பட) ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சமாக இருந்தால் அவர்களுக்கு வரி இல்லை, ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10 சதவீதத்திற்கு பதிலாக 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று 2017ல் அரசு அறிவித்தது.

வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படமா?
இந்நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வால் பல பொருட்களில் விலை உயர்ந்துள்ள நிலையில், வாங்கும் திறனும் குறைந்துள்ளதால் வருமான வரி உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ. 3 முதல் ரூ. 4 லட்சம் என்ற அளவில் உயர்த்த வேண்டும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை குறைத்து மாத பட்ஜெட்டில் பிரச்னை ஏற்படாமல் இருக்க வழி செய்வதோடு ஆடம்பர பொருட்களுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்கலாம் என்று கூறுகின்றனர் பெண்கள்.

சானிடரி நாப்கினுக்கு வரி
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது முதல் மத்திய அரசுக்கு எதிராக பெண்கள் முன் வைத்து வரும் ஒரே ஒரு விஷயம் சானிடரி நாப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவீத வரி. பெண் சுகாதாரத்திற்காக நிதி ஒதுக்கும் மத்திய அரசு ஏன் சானிடரி நாப்கின் மீதான வரியை குறைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகின்றனர் பெண்கள், இந்த எதிர்ப்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா என்பது பட்ஜெட் நாளன்று தான் தெரியும்.

பெண் பாதுகாப்புக்கை உறுதி செய்ய நிதி
இதே போன்று பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா கொலையை தொடர்ந்து நிதி அறிவிக்கப்பட்ட நிலையில் அது சரியாக பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்கின்றனர் பெண்கள். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ந்த வண்ணமே இருப்பதால் பொதுஇடங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க நிர்பயா தொண்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறத்துகின்றனர்.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்
மேலும் பெண்களின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில் பெண்களுக்கென கூடுதல் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தனி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பதும் பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications