அதிக பயம் வேண்டாம்; உஷாரா இருந்தா போதும்.. ரமணன் தரும் ‘கூல்’ நியூஸ்!
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதாவது, வரும் மே 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நிலவி வரும் வெப்ப அலை வீசக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றார்கள். எல்நினோ ஆண்டை தொடர்ந்த அடுத்து வரும் ஆண்டு என்பதால்தான் இந்த வெப்ப அலை வீசுகிறது என்கிறார் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான்.

வேறு சிலர் வேறு பல காரணங்களைக் கூறுகிறார்கள். உண்மையில் இந்த வெப்ப அலை அச்சம் தரக் கூடியதா? இதற்கு என்ன காரணம்? இதற்கான விளக்கத்தைக் கூறுகிறார் வானிலை ஆய்வு மைய முன்னாள் அதிகாரி ரமணன்.
"வெப்பத்தின் தாக்கத்தை அளவிடுவதற்காக எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும் போது அதில் மேகக் கூட்டங்கள் என்பது பதிவாகவே இல்லை. வெறும் வறண்ட வானிலையே காணப்படுகிறது. அதுதான் இந்த வெப்ப அலைக்குக் காரணம்.
வானம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இடையில் மேகங்கள் இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவைத் தடுத்து மிதமாக்கி அனுப்பும். மேகங்கள் இல்லாததால் நேரடியாக வெயிலின் தாக்கம் அப்படியே தடுக்கப்படாமல் பூமியை நோக்கி இறங்குகிறது. அதுதான் முதல் காரணம்.
சென்னையைப் பொறுத்தளவில் உயர்ந்த பட்ச வெப்பநிலை பதிவானது எப்போது என்று பார்த்தால், கடந்த 2003 மே மாதம் 31ஆம் தேதிதான் பதிவாகி இருந்தது. அதன்பிறகு மிகப்பெரிய அளவில் வெப்பநிலை பதிவாகவில்லை. ஆகவே, பதற்றம் தரும்படி யாரும் செய்தி போடத் தேவையில்லை.
தமிழ்நாட்டில் இதற்கு முன்னால் ஜூலை மாதம் கூட 40 வரை டெம்ப்ரேச்சர் வந்திருக்கிறது. ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள் நம் முன்னோர்கள். அந்தக் காலத்தில்தான் காற்று வேகமாக வீசும். அப்படி வீசும் போது கடற்காற்றே வீசத் தொடங்கி இருக்காது.
கணினியில் பதிவாகி உள்ள வானிலை அறிக்கைப்படி பார்த்தால், ஒடிசாவில் இன்று லேசான மேகக் கூட்டங்கள் தென்படுகின்றன. அதைப்போலக் கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசாக மேகக் கூட்டங்கள் பதிவாகி உள்ளது. மே மாதத்தைப் பொறுத்தளவில் பெரிய அளவில் மேகக் கூட்டங்களே இல்லை. வறண்ட வானிலையே உள்ளது.
ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் வெயில் அதிகம் இருக்கும். அப்படி உள்ள போது அதிகம் வேர்த்துக் கொட்டாது. ஆனால், தமிழ்நாட்டில் வெயிலுடன் ஈரப்பதமும் சேர்ந்துவிடுவதால், அதிக புழுக்கம் இருக்கும். நிறையத் தாகம் ஏற்படுவதுடன் உடலில் அதிகம் வேர்த்துக் கொட்டும். அதற்கு ஈரப்பதத்தால் அதிக புழுக்கம் ஏற்படுவதே காரணம்.

அதனால்தான் நமக்கு அதிக எரிச்சலாக உணர்கிறோம். நிலத்திலிருந்து வரும் வறண்டக் காற்றுடன் ஈரமும் கலந்தால் அந்த மாதிரி பிரச்சினை வரும். நமது உடலின் வெப்பநிலை சாதாரணமாக 98.4 degree fahrenheit. அதை செண்டிகிரேட் அளவுக்கு மாற்றினால் கிட்டத்தட்ட 37 வரும். அதை மீறி வெப்பநிலை 40 சென்றால் உடல் தாங்காது.
வாரம் என்று எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு 52, அதை ஐந்து நாள்களாகக் கணக்கிட்டால் மொத்தம் 73 ஐந்து நாட்கள் கிடைக்கும். அதை பெண்டேட் என்பார்கள். அந்த 5 நாட்களுக்குச் சராசரி வெப்பநிலை என்பது உள்ளது. அதைப் போன்று 73 ஐந்து நாட்கள் என்பது வானிலைக் கணக்குப்படி உள்ளன. அந்த அட்டவணை வைத்துத்தான் வெப்பநிலையை அறிவிப்பார்கள். அப்படிப் பார்த்தால் சராசரியாக 3 எனக் கணக்கிடுவோம். அது சராசரி. 4 பதிவானால் வெப்ப அலையாகிவிடும். 6 அல்லது 7க்கு போனால் தீவிர வெப்ப அல்லை.

சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த வெப்பநிலை இன்று இல்லை. 2 அல்லது 3 டிகிரி கூட உள்ளது. அதற்குக் காரணம் நகரமயமாக்கல். கட்டிடங்களின் பெருக்கம். மரங்களை வெட்டுவது. வாகனங்களின் அதிகரிப்பு. மக்கள் தொகை அளவு அதிகமாவது. இவை எல்லாம் தான் வெப்பநிலை அதிகரிக்கக் காரணம்.
ஏசி பயன் படுத்துவது மிகமிக முக்கிய காரணம். கரியமில வாய்வு அதிகமாக வெளியேறுவதால் வெப்பநிலை அதிகரிக்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications