விபத்தில் சிக்கினால் என்ன செய்ய முடியும்... கூட்டணி குறித்த கேள்விக்கு வாசன் "வாவ்" பதில்!
கரூர்: நன்றாக இருக்கிறோம். திடீரென உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது. என்ன செய்வோம், மருத்துவமனைக்குப் போவோம் இல்லையா. அதுபோலத்தான். இப்போது கட்சி நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் கூட்டணிக்குப் போவது குறித்து முடிவெடுப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறிய பதிலால் நிருபர்கள் அசந்து போய் விட்டார்கள்.
கூட்டணி சேருவது குறித்து இதுவரை எந்தத் தலைவரும் கூறாத புதுமையான விளக்கமாக இருக்கிறதே என்பதுதான் நிருபர்கள் அசந்து போகக் காரணம்.

கரூர் பைபாஸ் சாலையில் உள்ள பிரேம் மஹாலில் தமிழ் மாநில காங்கிரசின் கோவை மற்றும் தஞ்சை மண்டல இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. இந்த இரண்டு மண்டலங்களிலிருந்தும் 19 மாவட்டங்களைச் சார்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் ஜி,கே,வாசன் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தேசிய நாட்டு நலப்பணி திட்டம் 4.50 லட்சம் நபர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இதில் தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் இளம் வயதில் சமூகபணி, நல்லபழக்க வழக்கங்கள் பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய அரசு இதற்கான ஊக்கதொகையை பாதியாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது நல்லது அல்ல. மாநில அரசு இதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
மதுக்கடைகளை மூடுவது சம்பந்தமாக பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு கருத்து கேட்க வேண்டும். அந்த கருத்தின் அடிப்படையில் மதுக்கடைகளை முற்றிலும் மூடுவதாகவோ அல்லது படிப்படியாக மூடுவது பற்றி இந்த சட்டமன்ற கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிடவேண்டும்.
நடைபெற்று கொண்டு இருக்கின்ற சட்டமன்ற கூட்ட தொடர் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்று நான் நம்புகின்றேன். குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமைய வேண்டும் என்றார் அவர்.
அப்போது தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பற்றி தங்களின் கட்சியின் நிலைப்பாடு என்ன என நிருபர்கள் கேட்டதற்கு, வரும் 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை எங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தையெல்லாம் முடித்து விட்டு தான் தேர்தலில் எங்களுடைய கூட்டணி என்ன என்று அறிவிப்போம் என்றார்.
அப்போது ஒரு நிருபர் இந்த வருடத்திற்குள் தேர்தல் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை, ஆனால் விபத்து ஏற்பட்டால் உடனே சென்று விடுவோம் அல்லவா? அது போல தேர்தல் முன்னதாக வந்தால் அதற்கு தகுந்தாற் போல் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி சிரித்தார். அவரது பதிலைக் கேட்டு நிருபர்களும் அசந்து போய் கலகலகவென சிரித்Lனர்.
பின்னர் அதே நிருபர், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தை வடதமிழ் நாடு, தென் தமிழ்நாடு என கோரிக்கை விடுத்து வருகிறார். இன்னொரு கட்சியும் இக்கோரிக்கையை வைத்து வருகிறது என்று கேட்டதற்கு, ஒரே மக்கள், ஒரே தமிழ்நாடு என்று பதில் அளித்தார் வாசன்.












Click it and Unblock the Notifications