பா.ஜ.க வை ஒப்பிட்டா காங்கிரசே தேவலாமாம்: சொல்வது 'விடுதலை' சிறுத்தை திருமா!!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியை ஒப்பிட்டால் காங்கிரஸ் கட்சியே பரவாயில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால் அதன் பின்னர் தி.மு.க.விடம் விடுதலை சிறுத்தைகள் விலகியே இருந்து வருகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் கூட தி.மு.க.வை ஆதரிக்காமல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டைத்தான் திருமாவளவன் எடுத்திருந்தார். அண்மைக்காலமாக இடதுசாரி கட்சிகளுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார் திருமாவளவன்.

இந்நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்தால் மகிழ்ச்சி என்று திருமாவளவன் பேசியது அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை என்பதை நிரூபிப்பதாக இருந்தது. மேலும் 2016 சட்டசபை தேர்தலில் திருமாவளவன் தனி அணியை அமைக்கலாம் என்றும் அண்ணா தி.மு.க. அணியில் இடம்பெற்லாஅம் என்றும் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தந்தை ஈ.வி.கே.சம்பத் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழாவை எனது நண்பர் காங்கிரஸ் கோபண்ணா நடத்தி னார். அதில் இளங்கோவன், நான், சி.பி.ஐ. சுப்பராயன், ஆகியோர் கலந்துகொண்டோம்.
நான் கலந்துகொண்ட அந்த சூழல் காங்கிரஸ் தரப்பில் சில முணுமுணுப்புகளை உருவாக்கியது. காரணம், நான் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். காங்கிரஸ் கட்சி அதற்கு நேர் எதிரானது என்பதால் தான். அந்த வகையில், காங்கிரசுக்கும் சிறுத்தைகளுக்கும் ஈழ விவகாரத்தில் முரண்பாடுகள் உண்டு. அதை மறுக்கவில்லை.
இன்றைய சூழலில் மதவெறி சக்திகளும் சாதி வெறி அரசியலும் தலை தூக்கத் துவங்கியிருக்கிறது. அதை முறியடிக்க வேண்டுமானால் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். அதை உணர்த்தவும் அதனடிப்படையிலும் பேசியதுதான், காங்கிரசோடு கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியடைவேன் என்பதே தவிர இதற்கு வேறு உள்நோக்கம் கிடையாது.
இது சந்தர்ப்பவாதமும் அல்ல. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இருந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த நான், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் சோனியாகாந்தி முன்னிலையிலேயே ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற காங்கிரஸ் தவறிவிட்டது என்றும் இது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் செய்த துரோகம் என்றும் வெளிப்படையாகவே பேசி யிருக்கிறேன்
.இது அவைக் குறிப்பிலும் பதிவாகியிருக்கிறது. இந்த கருத்தில் இப்போதும் நான் மாறவில்லை. மதவாத அரசியலில் அழுத்தமாக இருக்கும் பா.ஜ.க.வோடு எந்தச் சூழலிலும் நான் நட்பு பாராட்ட முடியாது. அதனால், முரண்பாடுகள் இருந்தாலும் காங்கிரசோடு இணைந்து செயல்பட வேண்டிய சூழல் இருக்கிறது. அதனை புறம்தள்ள முடியாது. காங்கிரசோடு கூட்டணியில் இருந்த காலத்திலேயே சுதந்திரமாக புலிகளைப் பற்றியும் ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேசியிருக்கிறோம்.
அதனால் இந்த அணுகுமுறை துரோகமென்று சொல்ல முடியாது. அண்மையில்கூட, மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார் வைகோ.
தற்போது பா.ஜ.க.வை ஒப்பிட்டுப் பார்க்கும்போது காங்கிரசே தேவலாம் என்று சொல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஈழப் பிரச்சினையில் காங்கிரசை மட்டுமே குற்றவாளியாகப் பார்த்துவிட முடியாது. காங்கிரஸ் மட்டு மல்லாது பா.ஜ.க. உட்பட பெரும்பாலான கட்சிகள் காங்கிரசின் நிலைப்பாட்டையே ஒத்திருக்கின்றன.
2016-ல் வரும் சட்டசபை தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நடக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. சில கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க. பலகீனப்பட்டு இருப்பதாக நம்பி புதிய கூட்டணி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் தங்களின் வாக்கு வங்கியை இழந்து விடவில்லை என்பதை மறுத்துவிட முடியாது. அந்த இரு கட்சிகளும்தான் உண்மையான போட்டியை எதிர்கொள்ளும்.
ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்பவே செய்கிறார்கள். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப வலுவான மாற்று சக்தி உருவாகவில்லை. மாற்றத்தை மக்கள் விரும்பினாலும் தி.மு.க., அ.தி. மு.க.வுக்கு எதிரான வலிமைப் பெற்றவர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம். ஆனால், 2016-க்குள் அப்படி ஒரு மாற்று சக்தி உருவாகும் என்பது கேள்விக் குறியே.
நடிகர்கள் மீதான கவர்ச்சி அபிப்ராயம் மக்களிடம் இருக்கவே செய்கிறது. விஜயகாந்த்தின் அரசியல் இமேஜை குறைத்து மதிப்பிட முடியாது. அதேபோல, நடிகர் விஜய் நேரடி அரசியலுக்கு வந்தால்... தற்போதைய அரசியல் கட்சிகள் போட்டு வைத்திருக்கும் கணக்குகள் மாறக்கூடும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications