16 ஆண்டுக்கு முன் தொலைத்த குடும்பத்தை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த இளைஞர்... வாட்ஸ் அப் மகிமை!
சென்னை: வாட்ஸ் அப் மூலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்த குடும்பத்துடன் மீண்டும் இளைஞர் ஒருவர் சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
கைகளில் ஆறாம் விரலாய் மாறிப்போன செல்போன்களில் இணையம் வந்ததிலிருந்து தீமைகளும், நன்மைகளும் ஒருசேரவேக் கிடைக்கிறது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செயல்களை நம் கண் முன் கொண்டு வந்து காட்டிய டிவி போலவே, தவறுகள் நேரும் போது தட்டிக் கேட்பதற்கும், நல்ல செயல்களுக்கு பாராட்டுவதற்கும் நல்லதொரு ஊடகமாக வாட்ஸ் அப் செயல்படுகிறது.

வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் உரிய நேரத்தில் துரிதமாக உதவவும் செய்கிறது வாட்ஸ் அப் என்பதற்கு இதோ மேலும் ஒரு உதாரணம்.
காணாமல் போன சிறுவன்...
திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தாமோதரன்-சுந்தரி தம்பதி. இவர்களுக்கு 6 மகன்கள். கடந்த 1999ம் ஆண்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு புதுச்சேரிக்கு சென்றுள்ளார் தாமோதரன். அப்போது அவரது 5வது மகனான சிகாமணி (7) எதிர்பாராத விதமாக காணாமல் போய் விட்டார்.
தேடித்தவித்த பெற்றோர்...
பதறிப்போன பெற்றோரும், குடும்பத்தினரும், அந்த பகுதி முழுவதும் தேடியும் சிகாமணி சிக்கவில்லை. இதையடுத்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்த தாமோதரன்-சுந்தரி தம்பதியினர், உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தனர். சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து மகனை தேடி அலைந்த பெற்றோர், பின்னர் தவித்துப்போய் திருவொற்றியூருக்கு திரும்பினர். இது நடந்து 16 வருடங்கள் ஓடி விட்டது. தொடர்ந்து சிகாமணியை அவரது பெற்றோர் தேடி வந்துள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
எலக்ட்ரீசியன்...
இதற்கிடையே காணாமல் போன சிகாமணி, பேசின்பிரிட்ஸ் பகுதியிலுள்ள தொண்டு நிறுவன விடுதியில் தங்கி இருந்துள்ளார். தற்போது எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் சிகாமணியும், தனது குடும்பத்தை தேடி வந்துள்ளார்.
வாட்ஸ் அப் ஆடியோ...
இந்நிலையில், வாட்ஸ் அப்பில் காணாமல் போனவர்கள் பற்றி வரும் விளம்பரங்களைப் பார்த்த சிகாமணியின் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. தானும் இதே போல் வாட்ஸ் அப் மூலமாக தனது குடும்பத்தைத் தேடினால் என்ன என தோன்றியது. அதனைத் தொடர்ந்து தனது குடும்பம் குறித்த விபரங்களை ஆடியோவாகப் பதிவு செய்து, கூடவே தனது தொலைபேசி எண்ணையும் இணைத்து தன் நண்பர்கள் மத்தியில் பரவ விட்டார் சிகாமணி.
ஒரே மணி நேரத்தில்...
கடந்த 19ம் தேதி இரவு 8 மணிக்கு வாட்ஸ் அப்பில் இந்த ஆடியோ பரவியது. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இந்த ஆடியோ பலர் மூலம் பரவி திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனுக்கு சென்றது.
இன்ப அதிர்ச்சி...
சிறுவயதில் காணாமல் போன சிகாமணியை தாமோதரன் குடும்பத்தார் தேடி அலைவது குறித்து தெரிந்திருந்த கார்த்திக்கிற்கு, இந்த ஆடியோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக தாமோதரன் குடும்பத்தாருக்கு இது தொடர்பாக கார்த்திக் தகவல் அளித்தார்.
மகிழ்ச்சி...
இதனால் ஒரே மணி நேரத்தில் தனது குடும்பத்தாருடன் சிகாமணி மீண்டும் போனில் பேசினார். சுமார் 16 ஆண்டுகள் கழித்து சிகாமணி வீடு திரும்பியது தாமோதரன் குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications