சசியை கையெடுத்து கும்பிட்ட மதுசூதனன்.. அது போன மாசம்... இது இந்த மாசம்!
அம்மாவுக்கு அப்புறம் நீங்கதான் கட்சியை காப்பாத்தனும் என்று கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சசிகலாவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு காலில் விழா குறையாக கெஞ்சினார் மதுசூதனன். இன்று அவரேதான் சசிகலா பொதுச்ச
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணமடைந்து 4 நாட்களுக்குப் பின்னர் சசிகலாவை சந்தித்த மதுசூதனன் தலைமையிலான அதிமுகவினர் நீங்கதான் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சினர். இன்று அதே மதுசூதனன், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தகுதியற்றவர் என்று கூறியுள்ளார்.
எனக்குப் பின்னரும் அதிமுக 200 ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும் என்று சட்டசபையில் சவால் விட்டு கூறினார் ஜெயலலிதா. உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக பொதுச்செயலாளரானார் சசிகலா. இப்போது சசிகலா முதல்வராக பதவியேற்க ஆசைப்பட்டதால் கட்சிக்குள் பிளவு எற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் வெர்சஸ் விகேஎஸ்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். பெரும்பான்மையான தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் இருக்கின்றனர். 5 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு உள்ளது.

மதுசூதனன் ஆதரவு
தமிழக முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், சசிகலாவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் உடன் சென்று ஆளுநரையும் அவர் நேற்று சந்தித்தார்.

பொதுச்செயலாளராக நீடிக்க தகுதியில்லை
இதனைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வானதை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தற்காலிக பொதுச்செயலாளராக ஒருவரை தேர்ந்தெடுக்க அதிமுக விதியில் இடமில்லை என்று மனுவில் குறிப்பட்டுள்ள மதுசூதனன், ஒருவர் பொதுச் செயலாளராக அமர வேண்டுமானால் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவமானம்
பொருளாளராக இருந்த பன்னீர் செல்வத்துக்கு சில அவமானங்கள் இழைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். பொருளாளருக்கே அவமானம் என்றால், நாளைக்கும் நமக்கும் அதே நிலை நடக்கும் என்று நினைத்தேன். கட்சியை காப்பற்றனும், குடும்பத்தை அல்ல. கட்சிக்காக தான் வாழ்கிறோம் என்றும் கூறியுள்ளார் மதுசூதனன்.

கட்சியில் இருந்து நீக்கம்
இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், அவைத் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மதுசூதனன் நீக்கப்படுவதாக சசிகலா உத்தரவிட்டுள்ளார். ஆனால் தன்னை கட்சியை விட்டு நீக்க சசிகலாவிற்கு உரிமையில்லை என்றும் நான் சசிகலாவை நீக்கிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் மதுசூதனன்.

டிசம்பர் 10, 2016
பிப்ரவரி 10ம் தேதியான இன்று சசிகலா மீது சராமரி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மதுசூதனன், கடந்த டிசம்பர் 10ம் தேதியன்று அதாவது ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் 4 நாட்களில் சசிகலாவின் வீட்டிற்கு அணியாக சென்று அவரைப் பார்த்து கட்சிக்கு தலைமையேற்க கும்பிட்டு கேட்டுக்கொண்டனர். இந்த காட்சியை ஜெயாடிவியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர்.

கையெடுத்து கும்பிட்டு
அம்மாவுக்கு அப்புறம் கட்சியை சிதைக்க சதிகாரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கட்சியை காப்பாற்ற நீங்கள்தான் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் சசிகலாவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அப்போது சசிகலா, மதுசூதனனின் கையை பிடித்துக்கொண்டு தலையாட்டினார்.

ஓபிஎஸ் கலகக்குரல்
இதனையடுத்து கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பொதுச்செயலாளராகவும் நியமனம் சென்றனர். இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுப்பியுள்ள கலகக் குரல் அதிமுகவை இரண்டாக பிளக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்களும், ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் பார்த்து ஆதரவு தெரிவித்தனர். மதுசூதனன் ஓபிஎஸ் அணிக்கு மாறியுள்ளார். இப்போது சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது விதியிலேயே இடமில்லை என்கிறார் மதுசூதனன்.
ஆதரித்ததும் விலகியதும் ஏன்?
சசிகலாவை நான் தான் ஆதரித்தேன். சசிகலா கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் குடும்பமே கட்சியை நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
எனவேதான் சசிகலாவை நிராகரியுங்கள் என்று கூறியுள்ளார் மதுசூதனன். வடிவேலு சொன்னது போல அது போன மாசம்... இது இந்த மாசம்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!












Click it and Unblock the Notifications