அதிமுக கோட்டை பொள்ளாச்சியை அசால்டாக தூக்கிய திமுகவின் ஈஸ்வரசாமி.. அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தவர்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி சுமார் 2,52,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டிய இந்த ஈஸ்வரசாமி யார்.. இவரது வெற்றி எப்படிச் சாத்தியமானது என்பது குறித்துப் பார்க்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று எண்ணப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் இருக்கும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

குறிப்பாக அதிமுக கோட்டையாகக் கருதப்படும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 5,33,377 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் 2,52,042 வாக்கு வித்தியாசத்தில் அவர் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
பொள்ளாச்சி தொகுதி: பொள்ளாச்சி என்பது பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.. இருப்பினும், கடந்த 2019இல் அங்கு திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சண்முகசுந்தரம் வென்றார். கடந்த 1980க்கு பிறகு திமுக அங்கு நேரடியாக வென்றது அதுவே முதல்முறை.. இருப்பினும், அதன் பிறகு தொகுதியில் சண்முகசுந்தரம் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக் கூறப்பட்டது. திமுகவினரே அவர் மீது அதிருப்தியில் இருந்ததால் இந்த முறை ஈஸ்வரசாமி வாய்ப்பை பெற்றார்.
இவர் இதில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர்.. அங்கு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த ஈஸ்வரசாமி, அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு சுபம் பைனான்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி இவர் அதை வெற்றிகரமாக நடத்தினார். தொடர்ந்து 2001இல் அவர் டிவிஎஸ் நிறுவனத்தின் டீலர் ஆனார்.
படிப்படியாக உயர்ந்தவர்: தொடர்ந்து சிறப்பாக வேலை அவர், பல நிறுவனங்களில் டீலராக ஒப்பந்தம் பெற்றார். அதன் பிறகு தொழிலில் ஏறுமுகமாகவே இருந்தது. அதன் பிறகு பல்வேறு புதிய தொழில்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும், அப்பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த இவருக்கு 2007இல் கருப்புசாமி புதுார் கிளைக் கழகத்தின் ஒன்றிய பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு அரசியலிலும் படிப்படியாக முன்னேறினார். கவுன்சிலர் தொடங்கி பல்வேறு ஊராட்சி, ஒன்றிய பதவிகளை வைத்துள்ளார். அவரது பணிகள் சிறப்பாக இருந்ததால் திமுக தலைமையும் இவரை மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமித்தது.
வெற்றி: மேலும், இவர் அமைச்சர் சக்கரபாணிக்கும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். பொள்ளாச்சி தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அவரது பரிந்துரை பெயரிலேயே ஈஸ்வரசாமிக்கு வாய்ப்பு தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அவர் பொள்ளாச்சி தொகுதிக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications