"வெயிலில்" வெளுத்துப் போன "ரெட் அலர்ட்".. தேமே என்று வேடிக்கை பார்க்கும் மக்கள்!
கன மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: அரசியல் பிளான்களின் சாயம் ரெட் அலார்ட் மழையில் கரைந்து வெளுக்க தொடங்கிவிட்டது!
5 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நம்ம மாநிலத்தின் 2 தொகுதிகளுக்கும் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. காரணம் கேட்டால், மழை என்றார்கள். இந்த காரணத்தை சொன்னது தலைமை செயலாளர் என்ற செய்தி வெளியே வருகிறது.
[கடைசில புசுபுசு நாய்களையும் போராட்டத்தில் குதிக்க வச்சுட்டீங்களேய்யா!]

கடிதம் அனுப்பினாரா?
இடைத்தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது பொதுவாக தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். ஆனால் தற்போது தலைமை செயலாளர் மூலமாகவும் தேர்தல் குறித்த முடிவு எடுக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த கடிதத்தை தலைமை செயலாளர் எப்போது தேர்தல் ஆணையருக்கு அனுப்பினார் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம்
அப்படியானால் முதல்வர் ஏன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக கடந்த 4-ம் தேதி மதுரையில் கூட்டம் நடத்தினார் என தெரியவில்லை. தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம் என்று கூட கூட்டத்தில் பேசினார் முதல்வர். தமிழக முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் தலைமை செயலாளர் கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி இருக்க முடியாது. ஒருவேளை தெரிந்துதான் அனுப்பியிருந்தால், மதுரை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே ஏமாந்தவர்களா?

கோர்ட்டுக்கு போறேன்
இதில் ரொம்பவே பாதிக்கப்பட்டுவிட்டது தினகரன்தான்! இடைத்தேர்தலுக்கான எல்லா வேலையையும் ஆரம்பத்திலிருந்தே இழுத்து போட்டு செய்தவர் அவர்தான்! இப்போது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்துக்கு போகபோகிறேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.

அதிமுக பயந்துவிட்டது
மழையெல்லாம் ஒரு காரணமா? ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்கூட டிசம்பர் மாதம்தானே வந்தது? இப்படி இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காதது சரி கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூட சொன்னார். தோற்றுவிடுவோம் என்று அதிமுக பயந்துதான் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அறிக்கையும் வெளியிட்டார். ஸ்டாலின் சொல்வது போல அதிமுக பயந்துபோய் இருக்கிறதா? அப்படி பயம் என்றால் அது யாரை பார்த்து? திமுகவை பார்த்தா? தினகரனை பார்த்தா? என்று புரியவில்லை.

தேர்தல் அதிகாரி பேட்டி
இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக பரவலாக கூறப்பட்டு வந்ததால் இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறதா என்றும் தெரியவில்லை.தமிழகத்தில் பருவமழையால் இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதாக தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டதால்தான், தேர்தல் ஒத்துவைக்கப்பட்டுள்ளது என்று பேட்டியில் உரக்கவே சொன்னார் தலைமை தேர்தல் அதிகாரி.

வாய்ப்பே இல்லை
ஆனால் நேற்று என்ன நடந்தது? வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தற்போதைக்கு பருவமழைக்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். அவ்வளவுதான்... இப்போது நெட்டிசன்கள் பொங்கி வருகிறார்கள். திகிலை கொடுத்த வராத மழைக்கும் வானிலை மையம் கூட அரசுக்கு ஆதரவாக போய்விட்டதே என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கிலியில் மக்கள்
தமிழக அரசு தாங்களாகவே முன்வந்து நம் மக்கள் அதிகமாக கேள்விப்படாத ரெட் அலர்ட் என்ற வார்த்தையை சொல்லி கிலி ஏற்படுத்தியது. 6 மற்றும் 7 தேதிகளில் மழை கொட்ட போகிறது, ஜாக்கிரதையாக இருங்கள் என்றார்கள். அப்படி ஒரு மழையே வரவில்லை. பின்னர் 5 தேசிய பேரிடர் மீட்பு குழுவை அரக்கோணத்திலிருந்து வரவழைத்து 4 மாவட்டங்களுக்கும் விரைந்து ஓட செய்தது.

தேமே என மக்கள்
மறுநாள் ரெட்அலார்ட் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தும் விட்டது. இந்த இடைப்பட்ட தேதியில்தான் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களின் தேர்தல் தேதியை சொல்லிவிட்டு, நமக்கு சொல்லாமல் ரெட் அலார்ட்டுடன் சேர்ந்து காணாமல் போய்விட்டது! இதை எல்லாவற்றையும் ஒன்றுமே புரியாமல் "தேமே" என்று விழித்து பார்த்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்!!












Click it and Unblock the Notifications