பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம்.. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிகம்.. காரணம் என்ன?
திருப்பத்தூர்: தமிழகத்தில் திருப்பத்தூரில் பிரசவ காலத்தின் போது தாய்மார்கள் இறப்புகள் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிறப்பு இறப்பு விகிதம் எவ்வளவு என கணக்கிடப்பட்டு அவை பதிவு செய்யப்படும். இறப்பு விகிதம் அதிகரித்தால் அதற்கான காரணத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்டறியும்.
அதிலும் பேறு காலத்தின் போது தாய் இறக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதால் அதற்குரிய காரணங்களை கண்டறிவதில் அதிகாரிகள் இறங்குவர். பேறு காலத்தின் போது இறப்பு விகிதம் என்பது 1 லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு எத்தனை பெண்கள் பிரசவத்தின் போது இறந்துவிடுகிறார்கள் என்பதை கணிப்பதாகும்.

தமிழகத்தில் தாய் இறப்பு
அந்த வகையில் தமிழகத்தில் பேறு காலத்தின் போது தாய் இறப்பு விகிதத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகம் நிகழ்கிறது. அதாவது கடந்த 2021- 2022 ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேறு காலத்தில் தாய் இறப்பு விகிதம் 93.4 ஆகும். ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பேறு கால தாய் இறப்பு விகிதம் என்பது 58 சதவீதம் மட்டுமே.

திருப்பத்தூரில் இறப்புகள்
இதனால் திருப்பத்தூரில் இந்த இறப்புகள் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டது. அதில் பேறு காலத்தின் போது ரத்த அழுத்த குறைபாடு காரணமாக 33 சதவீத தாய்மார்கள் இறக்கிறார்கள். அது போல் 20 சதவீதம் பேர் 18 வயதுக்குள் கர்ப்பம் தரிப்பதால் பிரசவத்தின் போது இறக்கிறார்கள்.

7 சதவீதம்
7 சதவீதம் பெண்கள் ரத்த சோகையாலும் 13 சதவீதம் பெண்கள் கொரோனாவாலும் பிரசவ காலத்தில் இறந்தார்கள். பிரசவ காலத்தில் பெண்கள் இறப்புதற்கு டீன் ஏஜில் திருமணம் செய்து அந்த வயதில் கரு தரிப்பதே என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள். இதற்கு மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் ஆகும்.

18 வயது
இது களையப்பட வேண்டும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். பெண் குழந்தைகள் காதல் வலையில் சிக்குவதை தடுப்பதற்காகவே பெற்றோர் பலர் அவர்கள் 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்களும் 18 வயதிற்குள் கரு தரிக்கிறார்கள்.

திருப்பத்தூரில் சுகாதாரத் துறை
இதுகுறித்து திருப்பத்தூரில் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஜூலை 2020 முதல் பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு வரை குழந்தைகள் ஹெல்ப் லைனுக்கு 300 க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்துள்ளன. அவையெல்லாமுமே குழந்தை திருமணம் என சொல்ல முடியாது.

குழந்தை திருமணம்
ஆனால் கணிசமாக குழந்தை திருமணங்களை நிறுத்தியுள்ளோம். இதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகளும் ஆகும். குழந்தை திருமணம், டீன் ஏஜில் கர்ப்பம் குறித்தும் இதனால் கடந்த இரு ஆண்டுகளாக பிரசவ கால இறப்புகள் அதிகரித்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications