For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சிக்காரர்களை கண்டபடி பேசும் அமைச்சர் மணிகண்டன்... மா.செ. பதவி பறிப்பு பின்னணி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கட்சிக்காரர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் கடுகடுப்புடன் பேசுவது, சீனியர்களுக்கு மதிப்பு கொடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களினால் அமைச்சர் மணிகண்டனிடம் இருந்து ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்திருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற தகவல் பரவி வருகிறது.

மதுரையில் வசித்தாலும் மணிகண்டனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம்தான். ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்று ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர், அமைச்சர், மாவட்ட செயலாளர் என கடகடவென கட்சியில் மேலே போனார் மணிகண்டன்.

Why Minister Manikandan dropped of party post

இப்போது மணிகண்டனின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்துள்ளதோடு அந்த மாவட்டத்தின் நிர்வாகிகளை மாற்றியுள்ளார். இன்று காலையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக எம்.ஏ.முனியசாமி, முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகன், கமுதி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.காளிமுத்து, கடலாடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் பி.சரவணன், கமுதி பேரூராட்சி செயலாளர் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், சாயல்குடி பேரூராட்சி செயலாளராக எஸ்.சரீபு ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

கடலாடி ஒன்றியக் குழுத் தலைவர் நீக்கம்

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வி.மூக்கையா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர 27-வது வார்டு செயலாளர் ஏ.பழனிவேல் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். இவர்களுடன் அதிமுகவினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அது சரி திடீரென்று மணிகண்டனிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க காரணம் என்ன? என்று கேட்கின்றனர் அதிமுகவினர்.
தொகுதியில் இருந்து தன்னை சந்திக்க வரும் கட்சிக்காரர்களை விரட்டுவது, அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வது என அமைச்சரின் செயல்பாடுகள் எல்லை மீறியதே அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிபோக காரணம் என்ற தகவல் பரவி வருகிறது.

சென்னையில் அமைச்சரை சந்திக்க கட்சிக்காரர்கள் வந்தாலும், உரிய மரியாதை கொடுக்காமல் திட்டுவார். அதோடு முதுகுளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் கீர்த்திகாவின் தோல்விக்கும் மணிகண்டன்தான் காரணம் என்ற ரீதியில் தலைமைக்கழகத்திற்கு கடிதங்கள் பறந்தன. இதுவும் மணிகண்டனின் பதவி பறிபோக காரணமாக அமைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வேட்பாளராக மணிகண்டன் அறிவிக்கப்பட்டதும், பட்டணம் காத்தான் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் ஒருவர். கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பினாராம். அந்தக் கடிதத்தில், ' தொகுதிக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர் மணிகண்டன். இவர் மதுரையில் வசித்து வருகிறார். ஒருநாள்கூட ராமநாதபுரத்தில் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை. இவரை வேட்பாளராக நியமித்ததில் கட்சிக்காரர்களுக்கு விருப்பமில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வெளியானது. எதிர்ப்புகள் இருந்தாலும் தேர்தல் முடிவில் மணிகண்டன் வெற்றி பெற்றார். தனக்கு எதிராக கடிதம் எழுதியவரை வரவழைத்து ' என்னைப் பற்றி புகார் சொல்ற அளவுக்கு வந்துட்டீங்க. உங்களை என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியும் என்று மிரட்டும் தொனியில் கூறினாராம். இது அப்படியே புகாராக சென்றதாம்.

கட்சிக்காரர்களை மதிக்காதது, அவர்களை மிரட்டும் தொனியில் பேசுவது என அனைத்தும் சேர்ந்து அமைச்சரின் மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டது என்கின்றனர் அதிமுகவினர். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெருமளவு மாற்றப்பட்டதில் உற்சாகமாக இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டாலும் ஏற்கனவே வகித்து வரும் மருத்துவ அணி துணைச் செயலாளர் பதவியில் நீடிப்பார் என்று அறிவித்துள்ளதால் சற்றே நிம்மதியடைந்துள்ளார் மணிகண்டன்.

English summary
Here is the background story of Minister Manikandan was today sacked from the the party post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X