வலைவீசும் கட்சிகள்... விஜயகாந்த்துக்கு 'செல்வாக்கு' என்பது உண்மையா?- அத்தனையுமே பில்டப்பா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிக 'கிராக்கி' உள்ள கட்சியாக தோற்றம் தருகிறது விஜயகாந்த்தின் தேமுதிகதான். உண்மையில் அரசியல் கட்சிகள் வலைவீசி காத்திருக்கும் அளவுக்கு தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் இருக்கிறதா? என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தி வரவேண்டும் என்று சில "கரை சேர" முடியாத கட்சிகள் விரும்புவது காலம் காலமாக நீடித்து வருகிறது... அப்படி வருகிற ஒரு சக்தியுடன் கை கோர்த்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட முடியாதா? என்ற நப்பாசையைத் தவிர இதன் பின்னணியில் வேறு எதுவும் இல்லை.
இப்படியான ஒரு மாற்று அரசியல் இடத்துக்கு பல்லாண்டு காலம் நடிகர் ரஜினிகாந்த்தை முயற்சித்துப் பார்த்தன இந்த அரசியல் சக்திகள். ஆனால் அவர் இதோ.... அதோ... என ஒவ்வொரு புதுப்பட ரிலீஸுக்கு மட்டும் 'போக்கு காட்டி' கல்லாவை நிரப்பிக் கொண்டதோடு சரி... அரசியல் பக்கமே எட்டிப் பார்க்க முடியாத தொலைவுக்கு "அன்னியப்பட்டு போய்விட்டார்".

8.38% வாக்குகள்
இச்சூழலில்தான் நடிகர் விஜயகாந்த், தேமுதிக என்கிற ஒரு அரசியல் கட்சித் தலைவராக உருவெடுக்கிறார்... 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை தனித்தே தேமுதிக எதிர்கொண்டு 232 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெல்ல முடிகிறது. மொத்தமாக 27,64,223 பேர் விஜயகாந்த் கட்சிக்கு வாக்களித்தனர். அதாவது மொத்தம் 8.38% வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்தது.
அத்தேர்தலில் திமுக 96 இடங்களில் வென்று காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. 96 இடங்களைக் கைப்பற்றிய திமுக பெற்ற வாக்கு சதவீதம் வெறும் 26.46%. (87,28,716). ஆனால் 61 இடங்களைப் பெற்ற அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 32.64% (1,07,68,559).

பில்டப்போ பில்டப்
அந்த தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் 8.28% (27,65,768) வாக்குகளுடன் உருவெடுத்தாலும் இதற்கு சமமாக தேமுதிகவும் 8.38% வாக்குகளைப் பெற்றிருந்ததால் அனைத்து அரசியல் கட்சியையுமே திரும்பிப் பார்க்க வைத்தது. இருப்பினும் 8.38% வாக்குகளை வைத்திருந்த தேமுதிக, அதைப் போல 3, 4 மடங்குகள் வாக்குகளை "நிலையாக" வைத்திருக்கும் திமுக, அதிமுகவுக்கு மாற்றான ஒரு அரசியல் கட்சி என்ற பிம்பம் பில்டப் கொடுக்கப்பட்டது.

2009-ல் சரிவு
அதே வேகத்துடன் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை தேமுதிக எதிர்கொண்டது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு மொத்தம் 31,26,117 வாக்குகளை அதாவது 7.38% வாக்குகளைப் பெற்றது. திமுக 22 தொகுதிகளில் போட்டியிட்டு 18-ல் வென்றது. மொத்தம் 18.32% வாக்குகளை (76,25,397) பெற்றது. அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9-ல் வென்றது. மொத்தம் 16.71% வாக்குகளை (69,53,591) அதிமுக பெற்றிருந்தது.

அதிமுக கூட்டணியில்...
2011ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரை மக்களோடும் தெய்வத்துடனும் கூட்டணி என்றும் தாம் தனித்தே போட்டியிடுவேன் என்றும் பேசிவந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் இடையே குடிகாரர், ஊத்திக் கொடுத்தாரா (உத்தமி) என பரஸ்பரம் பாட்டில் சண்டை நடந்தது.
ஆனால் திடீரென 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கை கோர்த்தார் விஜயகாந்த். அவரை கெஞ்சிக் கூத்தாடி கூட்டணியில் சேர்த்தது ஜெயலலிதா தான். இம்முறை மொத்தம் 41 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு 29 இடங்களைக் கைப்பற்றினார் விஜயகாந்த். திமுகவோ வெறும் 23 இடங்களில்தான் வென்றது. இத்தனைக்கும் 22.4% வாக்குகளை திமுக பெற்றிருந்தது. ஆனால் வெறும் 7.88% வாக்குகளையே பெற்ற தேமுதிக சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

8% ஐ தாண்டலையே...
என்னதான் வாக்கு சதவீதம் 8%ஐ தாண்டாத போதும் அதிமுகவுக்கு அடுத்தது தேமுதிகதான் என்ற பிம்பம் மீண்டும் ஊடகங்களில் வலுவாக கட்டப்பட்டது. இத்தனைக்கும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் பெற்ற இடங்கள் 5 தான்... ஆனால் அதன் வாக்கு சதவீதம் 9.30%... ஆனாலும் தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்து தேமுதிகதான் என்ற மாய பிம்பம் உருவாக்கப்பட்டது.
அதுவும் 2011 தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 38.40%.... இப்படி அதிமுக, திமுகவின் வாக்கு சதவீதத்தை ஒருகாலத்திலும் எட்டி தொட்டுவிட முடியாத தேமுதிகதான் தமிழகத்தின் ஆட்சிக் கனவில் மிதக்கத் தொடங்கியது... ஊடகங்களும் அரசியல் ''ஆராய்ச்சியாளர்களும்'' இதற்கு முட்டுக் கொடுத்து வந்தன.

உடைந்த கூட்டணி
இருப்பினும் சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு அதிமுக- தேமுதிக கூட்டணி உடைந்து போனது. உதவியவர்களை தூக்கி எறியும் ஜெயலலிதா வழக்கம்போல விஜய்காந்தையும் தூக்கி 'அக்கட' போட்டார்.

2014 பரீட்சை...
மேலும் விஜயகாந்த் மற்றும் அவரது ஆதரவு சக்திகளின் "எதிர்கால' கனவுகள் மீது பேரிடியை இறக்கியது அதிமுக... விஜயகாந்த் கட்சியின் கணிசமான எம்.எல்.ஏ.க்களை தம் பக்கம் இழுத்துக் கொண்டார் ஜெயலலிதா... இதனால் விஜயகாந்த்தின் செல்வாக்கு கேள்விகுறியானது... இதற்கும் பரீட்சையாகத்தான் 2014 லோக்சபா தேர்தல் வந்தது.
தேமுதிகவைத் தொடங்கிய போது யாருடனும் கூட்டணி இல்லை என்று புதிய முழக்கத்தை வைத்து ஒரு குறிப்பிடும்படியான வாக்குகளை பெற்று வந்த விஜயகாந்த் 2011 தேர்தலில் முதல் முறையாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அந்த கூட்டணியால் ஆதாயம் அடைந்த போதும் அது நிலைக்கவில்லை. கட்சி கலகலத்துப் போனது..
இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பிடித்தது. அதுவும் தேமுதிகவின் பரம எதிரியான பாமகவுடன் கூட்டணியும் சேர்ந்தது. ஆனால் ராமதாசுடன் விஜய்காந்த் மேடை ஏறவில்லை.
இப்படி ஒரு தண்ணி- எண்ணெய் கூட்டணி அமைந்தது. இந்த தேர்தலில் அதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளை அள்ளியது. இத்தனைக்கும் நாடு முழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தமிழகத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது.

சரிந்து போன விஜயகாந்த் வாக்கு வங்கி
திமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அதிமுக 44.45%; திமுக 23.64% வாக்குகளைப் பெற்றிருந்தன. திமுக தமது வாக்கு வங்கியை அப்படி தக்க வைத்து கொண்டிருந்தாலும் அதிமுகவின் வாக்கு கிட்டத்தட்ட 2 மடங்கானது.
ஆனால், அந்தத் தேர்தலில் விஜயகாந்த்தின் உண்மையான பலம் வெளிப்பட்டது. சுமார் 8% வாக்கு வங்கியை தொடர்ந்து வைத்திருந்த அவரது வாக்கு பலம் அந்தத் தேர்தலில் 5.19% என்ற அளவுக்கு சுருங்கியது. ஆக, 2006-ம் ஆண்டு தேர்தலில் 8%-ல் தொடங்கிய விஜயகாந்த் கட்சியின் வாக்கு சதவீதம் என்பது 2014-ல் 5% ஆகத்தான் சுருங்கிப் போய்விட்டது.

5%-தான் ஒரிஜனல் வாக்கு
இப்படி வெறும் 5% வாக்குகளை மட்டுமே வைத்திருக்கக் கூடிய தேமுதிக, தன்னைவிட சுமார் 5 முதல் 8 மடங்கு கூடுதலாக வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக காட்டிக் கொள்கிறது... இந்த 5% வாக்குகளை வைத்திருக்கும் தேமுதிகவை இழுத்துக் கொண்டால் தமிழகத்தில் ஆட்சி அமைத்துவிடுவோம் என பகல் கனவு காண்கிறது வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி.
தமிழகத்தில் 2% வாக்குகளைத்தான் வைத்திருக்கும் பா.ஜ.க.வும் 5% வாக்குகளை வைத்திருக்கும் விஜயகாந்த்துடன் கூட்டணி வைத்துவிட்டால் தமிழக முதல்வர் எனும் அரியாசனம் தங்கள் கைக்கு வந்துவிடும் என மனப்பால் குடிக்கிறது...

கரை சேர்ந்த திமுக
அதிமுகவின் நிலைமையை மழைக்கு முன் மழைக்குப் பின் என இரண்டாக பிரிக்கலாம். மழைக்கு முன் ஜெயலலிதாவின் செல்வாக்கில் பெரிய அளவில் சரிவு இல்லை. காரணம் ஜெயலலிதாவின் தவறுகளை ஊடகங்கள் தொடர்ந்து மறைத்து வந்ததே. ஆனால், மழையும் வெள்ளமும் ஜெயலலிதா அரசின் வண்டவாளத்தை தோல் உரித்துக் காட்டியதோடு, அதிமுக என்ற கட்சியின் குவாலிட்டி என்ன என்பதை ஸ்டிக்கராக ஒட்டிவிட்டுப் போனது.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுத ஏதாவது கிடைக்காதா என அதிமுக ஆதரவு ஊடகங்களே மைக்ராஸ்கோப் வைத்து தேட வேண்டிய நிலையில் அந்த அரசு இப்போது உள்ளது.
திமுகவின் நிலைமையையும் மழைக்கு முன் மழைக்குப் பின் என்றே பிரிக்கலாம். வெள்ளத்துக்கு முன் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தக் கட்சி வெள்ளத்தில் நீந்தி கரையேற ஆரம்பித்துவிட்டது.
காரணம், ஜெயலலிதா அரசு தானே தவிர கருணாநிதியோ ஸ்டாலினோ அல்ல. செயல்படாத இந்த அரசாங்கத்துக்கு, திமுக எவ்வளவோ பரவாயில்லை என்று மக்களை நினைக்க வைத்த ஜெயலலிதாவுக்கு கருணாநிதி என்றும் நன்றியோடு இருக்க வேண்டும்.

தேமுதிக- காங்கிரஸ் கை கோர்த்தால்...
திமுகவைப் பொறுத்தவரையில் அதன் வாக்கு வங்கி என்பது 22 முதல் 25% தான். அது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை அப்படியே நிலைத்தே இருக்கிறது... இதில் தேமுதிகவின் 5%, காங்கிரஸின் 5% இணைகிறபோது அதிமுகவுக்கு சமமான அல்லது வீழ்த்தக் கூடிய வலிமை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறது... அதுவும் தமிழகத்தில் பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்கிற 20 ஆண்டுகால படிப்பினைகளின் அடிப்படையில் ஒருவாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதற்காக இருக்கிற "சொற்ப வாக்கு" கட்சிகளான தேமுதிக, காங்கிரஸை இணைத்துக் கொள்வதை பலம் என திமுக நினைக்கிறது.
ஆனால் எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் தலைகீழாய் நின்று வாக்கு சேகரித்தாலும் மிச்சம் இருக்கிற கட்சிகள் அனைத்தையும் கூட்டணியில் சேர்த்தாலும் கூட அதிகபட்சம் 8 முதல் 10% வாக்குகளைக் கூட எட்டிப் பிடிக்க முடியாத பாஜகவும் வைகோ அணியும் தேமுதிகவுக்காக கொடுக்கும் பில்டப்புகள் அனைத்தும் ஓவர் டோஸ்தான்....
தன்னுடைய உண்மை செல்வாக்கை மூடி மறைத்து தங்களது அரசியல் இருப்புக்காக ஒரு மாயமாலத்தை கட்டமைக்க பாஜக, வைகோ அணி முயற்சிக்கிறார்கள் என்பது விஜயகாந்த்துக்கு நன்கு தெரியும். இதனால்தான் இந்த கட்சிகளுக்கு பிடி கொடுக்காமல் திமுகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கேப்டன்!!












Click it and Unblock the Notifications