எடப்பாடி அரசு 'மெஜாரிட்டி' நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட மறுத்தது ஏன் தெரியுமா?
சென்னை: இப்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்று கூறியுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதற்ககு காரணமாக அதிமுகவின் உட்கட்சி பூசலை கைகாட்டியுள்ளார்.
தினகரன் தரப்பை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் தங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கையில்லை என்று கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், பெரும்பான்மை இல்லாமல் உள்ள எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரி வருகின்றன.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்ததோடு, திமுகவினர் சார்பில் நேரிலும் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று ஆளுநரை சந்தித்து கோரிக்கைவிடுத்தார். முன்னதாக இக்கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கடிதமாகவும் ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.

ஆளுநர் மறுப்பு
இந்த நிலையில், திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன் போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்தித்து, தமிழக சட்டசபையை கூட்ட உத்தரவிட்டு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என ஆளுநர் கூறிவிட்டதாக பின்னர் வெளியே வந்த திருமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள்
19 எம்எல்ஏக்களும் அதிமுகவில் இருப்பதாகவும், அவர்கள் அதிமுகவைவிட்டு வெளியேறினால் அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தாராம். அதாவது தினகரன் அணி எம்எல்ஏக்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் தன்னால் அதில் தலையிட முடியாது, இது உட்கட்சி விவகாரம் என ஆளுநர் கூறிவிட்டதாக திருமா தெரிவித்தார்.

ஆளுர் மீது விமர்சனம்
ஆனால், சட்ட வல்லுநர்களோ இது தவறான முன் உதாரணம் என்கிறார்கள். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, ஆளுநரின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது என கூறியுள்ளார். இவர்கள் கூறுவதெல்லாம், அரசு மீது நம்பிக்கையில்லை என எம்எல்ஏக்கள் கூறுவது கட்சி பிரச்சினை கிடையாது என்பதுதான். கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்தால்தானே அது கட்சி விவகாரம். ஆட்சியின் அரசியல் சாசன பாதுகாவலர் பொறுப்பிலுள்ள ஆளுநர், ஆட்சிக்கு ஆதரவில்லை என எம்எல்ஏக்கள் கூறுவதை கட்சி விவகாரமாக பார்க்க முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

கட்சி தாவல் தடை சட்டம்
ஒருவேளை அதிமுகவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரும் ஆளுநர் கூற்றுப்படி வேறு கட்சிக்கு தாவினால், கட்சி தாவல் தடை சட்டத்தில் அவர்கள் பதவி பறிக்கப்படும். பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசு எளிதாக வென்றுவிடும். நிலைமை இப்படி இருக்கும்போது, ஆளுநர் ஏன் இந்த காரணத்தை கூறினார் என வினவுகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications