அழகிரி ஆதரவாளர் போஸை தூக்கிய அழகிரியின் முன்னாள் சகா தங்கம் தென்னரசு!
சென்னை: திமுகவில் இருந்து அழகிரியின் ஆதரவாளர் விருதுநகர் போஸ் திட்டமிட்டே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவால் கழற்றிவிடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த திமுக தீவிர கட்சி சீரமைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 33 பேரை சஸ்பென்ட் செய்துள்ளது.
இதில் கே.பி. ராமலிங்கம் பகிரங்கமாக அழகிரி அணிக்குப் போனவர். அவரை தேர்தல் பிரச்சனைகளோடு சேர்த்து கட்டம் கட்டிவிட்டது திமுக. அதேபோல்தான் விருதுநகர் போஸும் அழகிரி ஆதரவாளர் என்பதாலேயே கழற்றிவிடப்பட்டார் என்று கூறப்படுகிறது.

சாத்தூரார், தங்கம் தென்னரசு
விருதுநகரைப் பொறுத்தவரையில் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுதான் பெருந்தலைகள். இவர்களுக்கு அடுத்தது விருதுநகர் போஸ். சாத்தூர் ராமச்சந்திரனும் தங்கம் தென்னரசும் எலியும் புலியுமாக இருந்தாலும் திமுக தலைமைக்கு வேண்டியவர்கள்.

அன்று அழகிரி ஆதரவு
தங்கம் தென்னரசு முன்னர் அழகிரி ஆதரவு முகாமில் இருந்தவர்தான். அழகிரி குடும்பத்துக்கும் தங்கம் தென்னரசு குடும்பத்துக்கும் மிக நெருக்கமான உறவும் உண்டு என்று கூறப்பட்டது,

ஸ்டாலின் முகாமில்..
ஆனால் திமுகவில் அழகிரி ஓரங்கட்டப்படுவிட தங்கம் தென்னரசு இயல்பாகவே ஸ்டாலின் அணிக்குப் போய்விட்டார். இதில் அழகிரிக்கு ஏக வருத்தம்.

அழகிரி முகாமில் போஸ்
இப்படி விருதுநகர் மாவட்ட பெருந்தலைகளான சாத்தூர் ராமச்சந்திரனும் தங்கம் தென்னரசும் ஸ்டாலின் பக்கம் போய்விட 2வது இடத்தில் அதாவது மாவட்ட துணை செயலராக இருந்த விருதுநகர் போஸ் அடையாளம் தேடி அழகிரி முகாமில் அடைக்கலமானார். திமுகவில் நீக்கப்பட்ட பின்னரும் கூட விருதுநகர் போஸ் வீட்டுக்கு அழகிரி சென்றுவந்தார்.

கழற்றிவிடப்பட்ட போஸ்
அவரை கழற்றிவிட தருணம் பார்த்து இருந்த தங்கம் தென்னரசு, கட்சி சீரமைப்புக் குழுவில் உறுப்பினரானார். இதுதான் வாய்ப்பென்று மதிமுகவுக்கு விருதுநகர் போஸ்வேலை பார்த்தார் என்ற காரணத்தை முன்வைத்து இப்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் போஸ்.

திட்டமிட்டே ..
அதே நேரத்தில் தற்போது விருதுநகர் மாவட்டம் 2ஆகப் பிரிக்கப்பட சாத்தூராரும் தங்கம் தென்னரசுவும் 'உங்களுக்கு கிடைக்கும் மாவட்டத்தில் நான் தலையிடுவதில்லை.. எனக்கு கிடைக்கும் மாவட்டத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்" என்று ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுவிட்டார்களாம். இந்த இருவர் மட்டும்தான் மாவட்டத்தில் தலையெடுக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு போஸை கட்டம் கட்டிவிட்டிருக்கின்றனர் என்கின்றனர் விருதுநகர் உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications