தூக்கு ஒழிப்பு, சேது சமுத்திரம், கச்சத்தீவு மீட்பு...100 தலைப்புகளில் திமுக தேர்தல் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இந்த அறிக்கையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றம், கச்சத்தீவு மீட்பு, தூக்கு தண்டனை ஒழிப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Will abolish death sentence, says DMK manifesto

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தென்னகத்தில் கண்மூடிக் கிடந்த திராவிட இன மக்களின் கண்திறக்கத் துணையாக 1912ஆம் ஆண்டில் டாக்டர் நடேசனார் அவர்கள் தொடங்கிய மதராஸ் ஐக்கிய லீக் (Madras United League) அமைப்பும், கல்லூரியில் படிக்கச் சேர்ந்த திராவிட மாணவர்கள் தங்கிப் பயில திராவிட மாணவர் விடுதியும் (Dravidian Students' Hostel);

பின்னர் 1916ல் திராவிடர் உரிமைக் குரல் எழுப்ப சர்.பிட்டி.தியாக ராயரும் டாக்டர் நாயரும் டாக்டர் நடேசனாரும் இணைந்து உருவாக்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியும்; தொடர்ந்து தேசிய இயக்கத்தில் நிலவிய உயர் வகுப்பார் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் 1925ல் தொடங்கிய சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கமும்,

1938ல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் எழுச்சி பெற்ற தமிழர்களின் தலைவராக உயர்ந்த தந்தை பெரியார் அவர்களின் தலைமையினாலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனை யாற்றலாலும் உருக்கொண்ட இனஉணர்வு காரணமாக, 1944ல் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உருப்பெற்ற திராவிடர் கழகமும் என நுறு ஆண்டு களைக் கடந்த ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமை காக்கவும், தந்தை பெரியாரின் குறிக்கோளை எய்திடவும், தேவைப்பட்டதொரு ஜனநாயக இயக்கமாக 1949ல் அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த 65 ஆண்டுகளாக, மனிதகுல ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, உரிமைகளைக் காத்து, சாதி, சமயப் பகை நீங்கிய சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் பாடுபட்டு வருவதோடு, தமிழ் இன, மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாத்திட ஓயாது பணியாற்றி வருவது திராவிட முன்னேற்றக் கழகம்.

கொள்கைகளும் இலட்சியங்களும் பிரவாகம் எடுத்து - தடம் பிறழாமல், பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதியாக தி.மு.கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணா அவர்களின் அடியொற்றி, 1969ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநில அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் ஜனநாயக நெறிகளைக் காத்திடவும், இந்தியா ஒரு வலுவான பொருளாதார அமைப்பினைப் பெற்றிடவும், சாதி,சமய பேதமற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிடவும், உலக அளவில் நமது நாட்டின் மதிப்பினை உயர்த்திடவும் ஆக்கபூர்வமாகப் பணியாற்றி வருகிறது தி.மு.கழகம்.

இந்தப் பேரியக்கத்தை உருவாக்கி, ஆல் போல் தழைக்க வைத்து, மக்களின் வற்றாத பேரன் பைப் பெறச் செய்த, தலைவனாக, ஆசானாக, வழிகாட்டியாக விளங்கி, இன்று வங்கக் கடற் கரை ஓரம், நீடுதுயில் கொண்டிருக்கும் பேரறிஞர் பெருந்தகையின் நினைவிடம் நோக்கித் தொழுது,

100 தலைப்புகளில் தேர்தல் அறிக்கை

ஆட்சியில் அமர்ந்துள்ள காலத்தில், மக்கள் நலனே தம் நலனெனக் கருதித் தீட்டிச் செயல் படுத்தப்படும் திட்டங்களால் மக்கள் மகிழ்ந்து பாராட்டும் நிலையில் இருந்தாலும்; எதிர்க் கட்சியாக இருந்து, ஆளுங்கட்சியின் அடக்குமுறை, அதிகார வேட்டை, அராஜகம், காரணம் இல்லாமல் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல், சட்ட துஷ்பிரயோகம் ஆகியவைகட்கு ஆட்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தாலும், எல்லா நிலையிலும் "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'' என்று பணியாற்றும் தி.மு.கழகத்தை; புயல் நடுவிலும் அகல் விளக்கின் சுடர் அணையாமல், காக்கும் கரங்களைப் போல, கழகத்தைப் பாதுகாத்து வரும் தமிழக மக்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி கூறி இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை முன் வைக்கிறோம்.

2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மொத்தம் 100 தலைப்புகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் பங்கேற்ற காலத்தில் தமிழகத்திற்குக் கிடைத்த திட்டங்கள், நன்மைகள் எதுவுமே இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில், தேர்தல் அறிக்கையின் துவக்கத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் பங்கேற்ற காலத்தில் தமிழகத்திற்காக என்னென்ன திட்டங்கள் கிடைத்தன என்பதை விளக்கமாகத் தந்துள்ளோம்.

நாடு தழுவிய அளவில் சுயமரியாதை திருமண சட்டம்

தி.மு. கழகத்தின் அடிப்படை கொள்கைகளான சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், மதச் சார்பின்மை, தாய்மொழியான தமிழுக்கு முதன்மையான இடம், அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், நாடெங்கிலும் பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் ஆகியவை குறித்து தேர்தல் அறிக்கையில் விரிவாக குறிப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், அந்தந்த மாநில மொழிகளே அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற மொழி உரிமை கோரிக்கை இந்த அறிக்கையிலே இடம் பெற்றுள்ளது.

மகளிர் -குழந்தைகள் -மாற்றுத்திறனாளிகள் -அரவாணிகள்-முதியோர் -மாணவர்கள் -விவசாயிகள் -மீனவர் -நெசவாளர் -சிறு வணிகர்கள் -தொழிலாளர்கள் -சிறுபான்மையினர் எனச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் நலன்களைப் பாதுகாப்பது குறித்து இந்தத் தேர்தல் அறிக்கையில் தனித்தனியாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

பழங்குடியினப் பட்டியலில் மீனவர்கள்

வேலை வாய்ப்பில் தனியார் துறையிலும் கூட இட ஒதுக்கீடு, அகில இந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, பழங்குடியினர் பட்டியலில் மீனவர்களை இணைத்தல், ஆதி திராவிட கிறித்தவர்களுக்கு, ஆதி திராவிடர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குதல் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து, கழகத்தின் முற்போக்கான எண்ணங்கள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தூக்கு தண்டனை ஒழிப்பு

ஈழத் தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு, சேது சமுத்திரத் திட்டம், இரண்டாவது விண்கல ஏவுதளம், குளச்சல் துறைமுகத்தை சர்வ தேச துறைமுகமாக மேம்படுத்துதல், துக்குத் தண்டனை ஒழிப்பு, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து, நதிகள் தேசிய மயம் மற்றும் நதிகள் இணைப்பு போன்ற அதிமுக்கியமான, மத்திய அரசு கவனம் செலுத்தி உடனடி தீர்வு காண வேண்டியவை பற்றியும் இந்தத் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அறவே கூடாது என்றும் -கல்விக் கடன்களையும், விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டுமென்றும் - நெல், கரும்பு, கொப்பரைத் தேங்காய் மற்றும் பச்சைத் தேயிலை ஆகியவற்றுக்கு கட்டுப்படியாகக் கூடிய ஆதரவு விலை அறிவிக்கப்பட வேண்டுமென்றும் - அத்தியாவசிய பொருள்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான விலை கொள்கையில் மாறுதல் காணப்பட வேண்டுமென்றும் தேர்தல் அறிக்கையில் கூறி யிருக்கிறோம்.

நாடு முழுவதும் மக்கள் நலப் பணியாளர்கள்

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதைப் போல அகில இந்திய அளவில் பத்து லட்சம் மகளிரை மக்கள் நலப் பணியாளர்களாக நியமித்தல், பத்து இலட்சம் இளைஞர்களை சாலைப் பணியாளர்களாக நியமித்தல், மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் களுக்கென வாரியங்களை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகள் முக்கியமாக இந்தத் தேர்தல் அறிக்கையிலே இடம் பெற்றுள்ளன.

பொதுத் துறை நிறுவனங்கள் பாதுகாப்பு, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ரெயில்வே, விமானப் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் மத்திய அரசு உதவிட முன்வர வேண்டுமென்று இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மண் வளப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துதல் போன்ற இயற்கையோடு இயைந்த நடவடிக்கைகளின் தேவையை தேர்தல் அறிக்கையிலே வலியுறுத்தி யிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கை என்றாலே ஒரு சில கட்சியினர் மற்றக் கட்சி களையும், அரசுகளையும் தரக்குறைவாகத் தாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி பயன்படுத்திக் கொள்கின்ற இந்த நேரத்தில், யாரையும் எதற்காகவும் வசை பாடாமல் எங்களுடைய தேர்தல் அறிக்கை, எங்களின் நோக்கங்கள், செயல் திட்டங்கள், உறுதிமொழிகள் ஆகியவற்றைப் பற்றி ஆக்க பூர்வமான முறையிலும், நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற அரசியல் நாகரிகத்தோடும் எங்களால் முடிந்த அளவுக்கு மக்கள் பணி ஆற்றுவோம் என்ற உன்னத நோக்கத்தோடு, ஏற்கனவே பல முறை "சொன்னதைச் செய்வோம் *செய்வதைச் சொல்வோம்" என்று தெரிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களின் தேர்தல் அறிக்கையினை சமர்ப்பிக்கின்றோம்.

செய்தியாளர்களாகிய உங்கள் ஆர்வத்திற்கும் வருகைக்கும் இதுவரையில் அமைதியாக இருந்து இந்தத் தேர்தல் அறிக்கையினைப் பெற்றுக் கொண்டதற்கு நன்றியினைத் தெரிவித்து, நல்ல உள்ளம் படைத்த நீங்கள் - நல்ல உள்ளம் படைத்த தமிழக மக்களுக்கு இந்தக் கருத்துக்களைக் கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, நீங்கள் கட்டிக் காத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளை யெல்லாம் மீண்டும் மீண்டும் போற்றி விடைபெறுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 100 தலைப்புகள்..

1. முன்னுரை
2. மத்திய அரசில் பங்கேற்ற தி.மு.கழகத்தின் சாதனைகள்
3. கூட்டாட்சி முறை
4. மதச் சார்பின்மை
5. சமூக நீதி
6. வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு
7. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
8. மகளிருக்கு அதிகாரம்
9. குழந்தைகள் நலன்
10. மாற்றுத் திறனாளிகள்
11. அரவாணிகள்
12. முதியோர் நலன்
13. அகில இந்திய அளவில் சுயமரியாதை திருமணச் சட்டம்
14. சிறுபான்மையோர் நலன்
15. அகில இந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு
16. பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்துதல்
17. தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்வி
18. தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு வசதி
19. நாடெங்கிலும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்
20. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தாழ்த்தப்பட்டோர் நியமனம்
21. நெசவாளர் நலன்
22. புலம்பெயர்ந்தோர் நலன்
23. அயல்நாட்டு தூதர்களாக தமிழர்கள் நியமனம்
24. சேது சமுத்திரத் திட்டம்
25. இரண்டாவது விண்கல ஏவுதளம்
26. கச்சத் தீவு
27. ஈழத் தமிழர் பிரச்சினை
28. மீனவர்கள் நலன்
29. பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள்
30. மீனவர்களைப் பாதுகாத்திட தனித்துறை உருவாக்கம்
31. கடற்கரைவாழ் மக்கள் இயற்கைச் சீற்றப் பாதுகாப்புச் சட்டம்
32. கடல் வேளாண்மை
33. தமிழ் ஆட்சிமொழி
34. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழி.
35. உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்
36. நதிகள் தேசிய மயமும், இணைப்பும்
37. மின்சாரம்
38. தூக்கு தண்டனை ஒழிப்பு
39. பொருளாதாரக் கொள்கை
40. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு
41. புதுவைக்கு முழு மாநில தகுதி
42. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு
43. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம்.
44. கல்விக் கடன்கள் தள்ளுபடி
45. மாவட்டத் தலைநகரங்களில் சர்வதேச விளையாட்டரங்கம்.
46. அடிப்படைக் கட்டமைப்பு
47. சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்
48. குளச்சல் துறைமுகம்
49. தொழிலாளர் - பணியாளர் நலன்
50. கிராமப் புற அஞ்சல் தொழிலாளர்கள்
51. அமைப்பு சாராத் தொழிலாளர் நலன்
52. அனைத்து இந்தியத் தொழிற் சங்கங்களின் பத்து அம்ச கோரிக்கை
53. தொழிலாளர் மருத்துவக் காப்பீடு
54. ‘போனஸ்' திட்டம்
55. வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம்
56. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு
57. மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு
58. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
59. 10 இலட்சம் மகளிருக்கு மக்கள்நலப் பணியாளர் வேலைவாய்ப்பு
60. 10 இலட்சம் பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு
61. குடிநீர்
62. மழை நீர் சேகரிப்பு
63. மரபுசாரா எரிசக்தி
64. மக்கள் நல்வாழ்வு - வருமுன்காப்போம் திட்டம்
65. இந்திய உள்நாட்டு மருத்துவத் துறையில் உயர் ஆராய்ச்சி
66. கல்வி - மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வித் துறை
67. வேளாண்மை
68. காவிரிப் படுகை பகுதியில் மீத்தேன் எரிவாயு
69. விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்கல்
70. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தல்
71. சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் நலன்
72. விவசாயக் கடன் ரத்து.
73. நெல், கரும்பு, கொப்பரைத் தேங்காய் மற்றும் பச்சைத் தேயிலை ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை
74. விலைவாசியைக் கட்டுப்படுத்தல்.
75. சிலந்தி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்
76. மண்வளப் பாதுகாப்பு.
77. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம்
78. உப்பு உற்பத்தி
79. உப்பளத் தொழிலாளர்கள்
80. இரயில் போக்குவரத்து
81. பெருநகர விரைவு ரயில் திட்டம்
82. மாற்றுத் திறனாளிகளுக்கென தனி ரயில் பெட்டிகள்
83. இரயில்வே தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
84. திருச்சி பொன்மலையில் புதிய சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலை
85. இராயபுரத்தில் புதிய ரயில் முனையம்
86. நாகர்கோவில் - திருநெல்வேலி மாவட்ட ரயில் வழித் தடங்களை மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும்.
87. ரயில்வே தொழிலாளர்கள் ஓய்வூதியம்
88. விமானப் போக்குவரத்து
89. விமான தொழில்நுட்ப பல்கலைக் கழகம்
90. நீர்வழிப் போக்குவரத்து (பறக்கும் கப்பல் திட்டம்)
91. புதிய ‘பாம்பன்' பாலம்
92. கொள்ளிடத்தில் நவீன புதிய பாலம்
93. நீர்ப்பாசனம்
94. காவிரி நதிநீர்ப் பங்கீடு
95. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்
96. சுற்றுச் சூழல் பாதுகாப்பு
97. முன்னாள் இராணுவத்தினர் நலன்
98. தென்மண்டல எரிவாயுத் தொகுப்பு
99. நிரந்தரப் பொருட்காட்சி வளாகம்
100. காப்பிடங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+