தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்
புதுக்கோட்டை: அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து விலகி தவெகவில் இணைந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரும் தவெகவில் இணைகிறாரா? என தகவல்கள் பரவின. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும் எனவும், என் தொகுதி மக்களின் முடிவு தான் என் முடிவு என்றும் கூறினார்.
எடப்பாடியுடன் செல்வீர்களா அல்லது விஜய்யின் தவெகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு மழுப்பலாகவே விஜயபாஸ்கர் பதில் அளித்தார். முன்னதாக விஜயபாஸ்கர், இன்று தனது இல்லத்தில் 500-க்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

விஜயபாஸ்கர் எந்த பக்கம்?
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பங்கள் நிலவியது. விஜய்க்கு ஆதரவாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் தரப்பினர் சென்றதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். எனினும் விஜய் எஸ்பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த எஸ்பி வேலுமணி தரப்பினர் எடப்பாடியுடன் சமாதானம் பேசினர். எடப்பாடியும் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இசக்கி சுப்பையா உள்பட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விஜய்யின் தவெகவில் இணைந்தனர். அதே சமயம் சி விஜயபாஸ்கர் மற்றும் சிவி சண்முகம் எடப்பாடியுடனும் சேரவில்லை. தங்கள் எம்.எல்.ஏ பதவிகளையும் ராஜினாமா செய்யவில்லை. இதனால் அவர்களது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்ன என தமிழக அரசியல் களத்தில் விவாதம் பறந்து வந்தது.
ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை இலுப்பூரில் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், விஜய்யின் தவெகவுடன் இணைவதா இல்லை எடப்பாடியுடன் மீண்டும் சேர்வதா? என அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பது தொடர்பாக தனது இல்லத்தில் 500-க்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பொதுமக்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் செய்தியாலர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில்
"நிறைய பேர் இன்று என் வீட்டுக்கு வந்தார்கள். பெண்கள், இளைஞர்கள் என கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது உண்மை தான். எல்லாரும் அவங்க அவங்க கருத்தினை சொல்லியிருக்காங்க.. உள்வாங்கியிருக்கிறேன். நீங்க எல்லாரும் பொறுமையாக இருங்க.. யாரும் அவசரப் பட வேண்டாம்.. 2001-இல் இருந்து பொது வாழ்க்கையில் இருந்து வருகிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது ஆசை.. கொரோனா காலக்கட்டத்தில் கூட எனது உயிரை துச்சமென கருதி பணியாற்றினேன்.
எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு. நிர்வாகிகள் வேகமாக இருக்கிறார்கள், நான் அவர்களைப் பொறுமையாக இருக்கச் சொல்லியிருக்கிறேன். எனது ஆதரவாளர்கள் பல கருத்துகளைக் கூறினார்கள். அனைத்தையும் கேட்டிருக்கிறேன். அனைவரின் கருத்தினையும் உள்வாங்கிக்கொண்டுள்ளேன். அவர்கள் தான் எனக்கு முக்கியம். அவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று தெரிவித்தார்.
அப்போது, விஜயபாஸ்கரிடம், த.வெ.க.வில் இணைகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்.. தொடர்ந்து தொகுதி மக்களிடம் கருத்துக்களை கேட்டு விட்டு முடிவு எடுப்பேன்" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications