அவர் வருவாரா... அவர் வருவாரா... "அம்மா"வை எதிர்பார்த்து அதிமுகவினர்!!
சென்னை: அதிமுகவினரின் இப்போதையை ஒரே பிரார்த்தனை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக அரியணை ஏற வேண்டும் என்பதுதான்.
இதற்காக அங்கப்பிரதட்சணம், அக்னி சட்டி எடுப்பது, தேர் இழுப்பது, யாகம் வளர்ப்பது என கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர். இவர்களின் பிராத்தனை யாருக்கு கேட்கிறதோ இல்லையோ அந்த ஜெயலலிதாவிற்கு நிச்சயம் கேட்டிருக்கும்.
ஆனாலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா அக்டோபர் 18ஆம் தேதி முதல் எந்த ரியாக்சனும் இல்லாமல் போயஸ்கார்டனே கதி என்று இருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா செப்டம்பர் 27 ஆம் தேதி சிறை சென்றார். அதுமுதல் துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர் அதிமுகவினர். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக தொடக்கவிழா தினத்தன்று சோகத்துடனேயே விடிந்தது.
வழக்கமான உற்சாகமின்றி இருந்த அதிமுகவினர், ஜெயலலிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த உடன் பட்டாசு, இனிப்பு என்று கொண்டாடி தீர்த்தனர். அக்டோபர் 18ஆம் தேதி சிறையில் இருந்து ஜெயலலிதா சென்னை திரும்பிய நாள்தான் அதிமுகவினருக்கு தீபாவளி திருநாளாக இருந்தது. ஆனால் இந்த உற்சாகமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.

எம்.ஜி.ஆர் நினைவுநாள்
டிசம்பர் 24 ஆம் தேதி அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாள். இந்த நாளில் கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு ஜெயலலிதா வந்து மலர் வளையம் வைத்துவிட்டு, அதிமுகவினரிடையே உரையாற்றுவார். நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி உறுதிமொழி வாசிப்பார்கள். இந்த ஆண்டு எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு ஜெயலலிதா வரவேயில்லை. மாறாக போயஸ் கார்டனில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவினார். இதுவே அதிமுகவினருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்
ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அதிமுகவினர் மூன்று நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். அதிமுக தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிடுவார். கடந்த ஆண்டு கொடநாடு சென்றதால் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை கோத்தகிரியில் கொண்டாடினார் ஜெயலலிதா. இம்முறை சென்னையில்தான் இருக்கிறார். ஆனால் தலைமைக்கழகம் வருவது சந்தேகம்தான் என்கின்றனர்.

பார்த்தசாரதி பெருமாள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி நாளில் ஆண்டுதோறும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை தரிசிப்பார் ஜெயலலிதா. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வைகுண்ட ஏகாதசி வந்தது. தோழி சசிகலா உடன் ஜெயலலிதா கோவிலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருக்க சசிகலா மட்டுமே கோவிலுக்கு வந்தார்.

பக்தர்களோடு பக்தராய்
அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. பக்தர்களோடு பக்தர்களாக நின்று தரிசித்த சசிகலா, உற்சவர், மூலவர் இருவரையும் வணங்கி விட்டு காலை 5.30 மணிக்கு கையில் பிரசாதத்துடன் போயஸ் கார்டன் சென்றார் சசி.

எப்போ வருவார் ஜெ?
சொத்துக்குவிப்பு வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகுதான் வெளியில் வருவேன்' என்று சபதம் போட்டிருக்கிறாராம் ஜெயலலிதா. எனவே மூன்று மாதங்களுக்கு அம்மா தரிசனம் கிடைக்காது என்று அங்கலாய்கிறார்கள் அதிமுகவினர்.

சனிப்பிரதோச வழிபாடு
சசிகலாவின் இப்போதைக்கு கோவில் கோவிலாக சென்று வருகிறார். கடந்த டிசம்பர் 16-ம் தேதி சனிப் பெயர்ச்சி அன்று வடதிருநள்ளாறு என்று அழைக்கப்படும் சென்னை பொழிச்சலூர் சிவன் கோயிலில் சசிகலா சிறப்பு வழிபாடு நடத்தினாராம். சனிதோஷ நிவர்த்தி பரிகார ஹோமங்கள் லட்சார்ச்சனைகளிலும் பங்கேற்றாராம்.

பொதுக்குழு கூடுமா?
அதிமுக அமைப்புத் தேர்தல் டிசம்பர் 11ல் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 25 வரை 14 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். ஆனால் ஆண்டு தோறும் நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா வருவாரா என்பதுதான் இப்போதைய தலையாய கேள்வி.

கலெக்டர்கள் மாநாடு எப்போ?
இது இப்படி இருக்க கலெக்டர்கள், உயரதிகாரிகள் மாநாடு எப்போது என்று தெரியாமல் உள்ளது. தமிழக முதல்வராக இருப்போர், ஆண்டுதோறும், டிசம்பரில், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மாநாட்டை நடத்துவது வழக்கம். இம்மாநாடு, மூன்று நாட்கள் நடைபெறும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2011 நவம்பர் மாதமும், அடுத்து, 2012 மற்றும் 2013ல் டிசம்பர் மாதமும், கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் மாநாடு நடத்தப்பட்டது.

முதல்வர் தயக்கம்
தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டை நடத்த தயக்கம் காண்பித்து வருகிறார். இது, கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் ஜெய மயமாய் இருப்பதால் அதிமுக மட்டுமல்ல துடுப்பில்லாத படகு போல தமிழகமும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications