குமரி மீனவர்களின் மனக்குமுறல்கள்... ஆர்கே நகர் வாக்குவங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்த பாதிப்பு ஆர்கே நகர் மீனவர்களின் ஓட்டுகளிலும் பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீனவர்களின் வாக்குகளில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஓகி புயலின் போது கடலுக்கு சென்ற மீனவர்களை காணவில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தில் தொடங்கிய போராட்டம், ரயில் மறியல், சாலை மறியல் என்று தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மீனவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், சென்னையிலும் மீனவர்கள் பேரணியாக சென்று தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவப் பிரதிநிதிகளில் ஒரு பிரிவினர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் அவரை சந்தித்து காணாமல் போன குமரி மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் பிசி
மீனவர்கள் காணாமல் போன விவகாரம் வீரியமடைந்ததற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. ஒரு மாவட்டமே கடுமையான சேதத்தை சந்தித்திருக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிடாமல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி வைத்துவிட்டு இங்கு ஆர்கே நகர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கேரளாவோடு சேர்த்து விடுங்கள்
இதனால் முதல்வர் வந்து சேதங்களை பார்வையிட்டு தாங்கள் கோரும் நிவாரணத்தை வழங்க வேண்டும் என்பது மீனவ மக்களின் கோரிக்கை. அவ்வாறு, தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் தங்களை கேரளாவோடு இணைத்துவிடுங்கள் என்றும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள்.

மீனவர்களின் நிலை
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னை என்பது அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. தூக்கி வீசும் கடல்அலையோடு தினம் தினம் போராடி மீன்பிடித்து கரை சேரும் மீனவர்களின் நிலை என்ன என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

ஆர்கே நகரில் பாதிப்பை தருமா?
எனவே குமரி மீனவர்களின் கோரிக்கை நியாயமானது தான் என்றும் பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்கே நகரில் உள்ள மீனவ மக்களும் குமரி மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே கருதப்படுகிறது. இதனால் அதிமுகவிற்கு மீனவர்களின் வாக்குவங்கி சதவிகிதத்தில் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications