பாலூட்டும்போது மார்போடு அணைத்துக் கொன்றேன்.. பெண்ணே, நீயும் தாய் தானா?
நாகர்கோவில்: 2வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் எனது கணவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த நான், பால் கொடுக்கும்போது எனது குழந்தைகளை நானே கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் திவ்யா.
ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (39). இவரது மனைவிதான் திவ்யா. 29 வயதான இவருக்கு அனுஷ்கா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் திவ்யாவுக்கு நாகர்கோவில் மருத்துவமனையில் இரட்டைப் பெண் குழ்தை பிறந்தது.
தாய் வீட்டில் தங்கியிருந்தார் திவ்யா. இந்த நிலையில்தான் அவரது இரட்டைப் பெண் குழந்தைகளும் பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் விசாரணை
ஆனால் இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் போனது. இதையடுத்து விரைந்து வந்து அவர்கள் விசாரணை நடத்தினர். அவசரம் அவசரமாக குழந்தைகள் புதைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தை திவ்யா அடையாளம் காட்டினார். அங்கிருந்து உடல்கள் எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

போலீஸ் வழக்குப் பதிவு
இதையடுத்து போலீஸ் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் திவ்யாதான் குழந்தைகளைக் கொன்றார் எனத் தெரிய வந்தது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார் திவ்யா.

பெண் குழந்தைகள் நிரம்பிய வீடு
திவ்யாவின் கணவர் கண்ணன் வீட்டில் அவருடன் பிறந்தவர்கள் 4 அண்ணன் தம்பிகள். இவர்களில் 3 பேருக்கு திருமணமாகி விட்டது. 3 பேருக்குமே பெண் குழந்தைகள். இதனால் கண்ணன் மூலமாக ஆண் வாரிசை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. அடுத்த குழந்தையும் இரட்டைப் பெண்ணாக பிறந்ததால் கண்ணன் வீட்டார் அதிருப்தி அடைந்தனராம்.

வெறுப்பை உமிழ்ந்த முட்டாள்கள்
மீண்டும் பெண் என்பதால் திவ்யாவை கண்ணன் வீட்டார் யாரும் கண்டு கொள்ளவில்லையாம். கண்ணனே கூட சரியாக மனைவியிடம் பேசுவதில்லையாம். பிறந்த குழந்தைகளைக் கூட வந்து பார்க்கவில்லையாம். இதனால் திவ்யாவுக்கு பெரும் பயம் வந்து விட்டது. இதனால் இந்த நிலைமைக்குக் காரணமான அந்த பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்லும் முடிவுக்கு வந்துள்ளார்.

பாலூட்டும்போது
பாலூட்டும்போது இரு குழந்தைகளையும் மார்போடு மார்பாக சேர்த்து இறுக்கி வைத்து மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளார் பின்னர் தாய்ப்பால் ஊட்டியபோது புரைக்கேறி இறந்து விட்டதாக கூறியுள்ளார். குடும்பத்தினர் நம்பியுள்ளனர். ஆனால் அக்கம்பக்கதத்தினர் சந்தேகமடைந்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications
