பெண் போலீஸ் ராமு தற்கொலை... ஏமாற்றிய பயிற்சி எஸ்.ஐ சஸ்பெண்ட்- வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ
திருநெல்வேலி: திருமணத்தை மறைத்து காதலித்து ஏமாற்றியதால் பெண் போலீஸ் ராமு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு காரணமாக பயிற்சி எஸ்.ஐ. அருமை நாயகம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அருமை நாயகத்தை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ராமுவின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
கான்ஸ்டபிள் ராமு, தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது மனதை மாற்ற எஸ்.ஐ அருமைநாயகம் போனில் கெஞ்சியுள்ளார். அந்த போன் உரையாடல் வைரலாக வாட்ஸ்அப்பில் பரவிவருகிறது.

திருமணமான ஏட்டு காதல்
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொட்டல் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராமு, 23. இவர், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றினார். இவர், சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ஆலங்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டுவாக பணியாற்றிய ஆலங்குளத்தை சேர்ந்த அருமைநாயகத்துடன் நட்பு ஏற்பட்டது. அருமைநாயகத்துக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது. அதையெல்லாம் மறைத்துதான் ராமுவுடன் அருமைநாயகம் நெருங்கிப் பழகினார்.
ராமுவை திருமணம் செய்வதாக அருமைநாயகம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் எஸ்ஐ ஆக பதவி உயர்வு பெற்று அருமைநாயகம் சென்னையில் 6 மாத பயிற்சிக்கு சென்றார். ராமு, அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

ஏமாற்றிய அருமை நாயகம்
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருமைநாயகத்திடம் பலமுறை வற்புறுத்தினார் ராமு. ஆனால் அதை அவர் நிராகரித்து வந்தார். திருமணத்துக்கு மறுத்த அருமைநாயகம் மீது ராமு, போலீஸில் புகார் கொடுத்தார். அப்போது ராமுவை சமரசப்படுத்திய அருமைநாயகம் வழக்குப்பதிவு செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதன்பிறகு ராமுவை அருமைநாயகம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

ராமு தற்கொலை
இதனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் ராமு, மனுதாக்கல் செய்தார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அருமைநாயகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த ராமு, கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உறவினர்கள் போராட்டம்
இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ராமுவின் உறவினர்கள் அருமைநாயகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5 நாட்களுக்கும் மேலாக உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அருமைநாயகத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. விக்ரமன் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் அருமைநாயகத்தை கைது செய்யும்வரை ராமுவின் உடலை வாங்கமாட்டோம் என்று உறுதியாக உள்ளனர்.

உயரதிகாரிகள் தலையீடு
ராமுவும், அருமைநாயகமும் பேசிய ஆடியோக்கள் போலீஸிடம் உள்ளன. அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ போலீஸார் அமைதியாக இருக்கிறார்கள். ராமு, தற்கொலை செய்தபிறகாவது அவரை கைது செய்திருந்தால் கூட இந்த பிரச்னைக்கு போலீஸார் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அதையும் போலீஸார் செய்யவில்லை. இதனால் ராமு விவகாரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் தலையீடு இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வைரலாகும் ஆடியோ
கான்ஸ்டபிள் ராமு, கொடுத்த புகாரை அடுத்து விசாரணைக்காக ராமு அழைக்கப்படுவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சி இருக்கிறார். உன்னால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்றும், கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று ராமுவிடம் கூறியிருக்கிறார். நீ கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்டும், நான் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்டும் ஒன்று போல் இருந்தால் விட்டுவிடுவார்கள். இல்லை என்றால் என்னை கைது செய்யக்கூட வாய்ப்பிருப்பதாக அருமை நாயகம் ராமுவிடம் கூறியுள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications