சொந்த விருப்பத்தினால் சன்னியாசியாகியுள்ளோம்.. ஈஷா மைய பக்தைகள் வாக்குமூலத்தால் வழக்கில் திருப்பம்
கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வலுக்கட்டாயமாக தங்கள் மகள்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறி பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், விருப்பத்தின் பேரில் சன்னியாசம் பூண்டுள்ளதாக அந்த பெண்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை வடவள்ளி ஓம் கணேஷ் வீதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற பேராசிரியர் ச.காமராஜ் (61). இவர் கடந்த 1ம் தேதி, மாவட்ட கலெக்டரிடம் ஈஷா யோகா மையம் பற்றி புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்ற தனது மகள்கள் கீதா காமராஜ் (33), லதா காமராஜ் (31) ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து திரும்பி வரவில்லை. அவர்களது பெயர்களும் மா மதி, மா மாயு என மாற்றப்பட்டுள்ளன.

மொட்டை அடித்தனர்
அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டு, சாமியார் உடை அணிவிக்கப்பட்டுள்ளது. மகள்களை பார்த்து பேசக் கூட அந்த மையத்தினர் அனுமதிப்பதில்லை. திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ வேண்டிய அவர்கள் சன்னியாசிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

எஸ்.பி விசாரணை
அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தனிமையில் விசாரணை
இதையடுத்து பேரூர் சரக டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட இரு பெண்களுமே, எஸ்.பி ரம்யா பாரதி முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தனி அறையில் யாருடைய இடையூறும் இன்றி அந்த பெண்களிடம் எஸ்.பி விவரம் கேட்டு பெற்றுள்ளார்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு
ஆன்மீகத்தின் மீதுள்ள ஈடுபாட்டால், சுய விருப்பத்தின் பேரில்தான், உலக வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்து சன்னியாசம் வாங்கியுள்ளோம். ஆனால், ஈஷா மையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பெற்றோர் செயல்படுகின்றனர். நாங்கள், ஆன்மீகத்தில் அமைதியாகவும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கும் வழி செய்யுங்கள். எங்கள் பெற்றோரிடம் இருந்தும், அவர்களை தூண்டி விடுபவர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த பெண்கள் கூறியுள்ளனர்.

புகார்
இவ்விரு பெண்களும் மேஜர் என்பதால், அவர்களின் வாக்குமூலம் வழக்கில் முக்கியத்தும் பெற்றுள்ளது. ஆனால், யோகா மையம் மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக தமிழக அரசு உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெண்ணின் பெற்றோர் இணைந்து சென்று மாவட்ட எஸ்.பியிடம் மனு அளித்துள்ளனர்.

யோகா மையம் விளக்கம்
ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள விளக்கம்: 'மா மதி, மா மாயு ஆகியோரின் பெற்றோர் தெரிவித்துள்ள புகாரால் வேதனை அடைந்துள்ளோம். அவர்கள் இருவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கி இருக்கிறார்கள். யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி தங்க வைக்கவில்லை.
அவர்களது பெற்றோர் தெரிவிக்கும் புகாரில் உண்மையில்லை. மதிப்புமிக்க மையத்தின் புகழை கெடுக்கும் வகையில் செயல்படும் அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications