For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடைகற்களை வெற்றிப்படிகளாக மாற்றி புதிய சரித்திரம் படைப்போம்: ஜெ. மகளிர் தின வாழ்த்து

By Siva
Google Oneindia Tamil News

World Women's day: Karunanidhi, Jayalalitha wish women
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

பெண்களின் சிறப்பினையும், மாண்பையும் போற்றும் வகையில் சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகுக்கு உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியோடு எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் "உலக மகளிர் நாள் விழா" 8-.3.-2014 அன்று நம்நாடு உட்பட உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச்த் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, "உலக மகளிர் நாள்" என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், ஆண்களுக்கு இணையாகக் கல்வி, பொருளாதார, அரசியல், சமூக நிலைகளில் முன்னேற்றங்கள் கண்டிட தேவையான பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை உருவாக்கிச் செயல் படுத்திய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் பல; அதாவது, 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தை 1989இல் தொடங்கியது கழக ஆட்சி.

பெண்கள் 10ஆம் வகுப்பேனும் படிப்பதை ஊக்கப்படுத்திட வேண்டும் எனும் உணர்வோடு 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கியது கழக ஆட்சி.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டத்தை 1975இல் தொடங்கி, இளம் விதவை மகளிரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது கழக ஆட்சி.

மேலும், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண உதவித் திட்டங்களின் நிதி உதவியையும் படிப்படியாக 25,000 ரூபாய் வரை உயர்த்தி, லட்சக்கணக்கான ஏழை மகளிர் நலம்பெற வழிவகுத்தது கழக ஆட்சி.

ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடி ரூபாய் செலவில் விமானப் பணிப்பெண் பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தை 2009ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி. கிராமப்புற மகளிர்க்கு மகப்பேறு உதவிகள் எந்த நேரமும் கிடைத்திடும் வண்ணம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேர மருத்துவச் சேவையை உருவாக்கியது கழக ஆட்சி. கிராமப்புற ஏழை மகளிர் கல்லூரிப் படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக 1969ஆம் ஆண்டில், பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளிலேயே அரசு சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகள் பலவற்றைத் தொடங்கியது கழக ஆட்சி. ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வகைசெய்திட வேண்டும் என்பதற்காக 1989இல் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்தின் பயன்களை 2008 முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான ஏழை மகளிர் உயர்கல்வி பெற ஆவன செய்தது கழக ஆட்சி.

பெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு நிலையான களம் அமைக்கும் வகையில், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் 1973இல் இந்தியாவிலேயே முதன் முறையாகக் காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்து இன்று காவல்துறையில் உயர் பதவிகள் பெற்றுப் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் பணிபுரிவதற்கு வித்திட்டது கழக ஆட்சி. ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியது கழக ஆட்சி. விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கிட 1998இல் ஆணையிட்டு நடைமுறைப் படுத்தியது கழக ஆட்சி.

தருமபுரியில் 1989ஆம் ஆண்டில் மகளிர் திட்டத்தைத் தொடங்கி அதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் தோன்றிடவும், அவற்றின் வாயிலாகக் கிராமப்புற மகளிரின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்திடவும் வழிவகுத்தது கழக ஆட்சி. 1998இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உட்படப் பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன்களை மேம்படுத்தியது கழக ஆட்சி. அரசுத் துறைகளில் பெண்களுக்கு முப்பது விழுக்காடு இடஒதுக்கீட்டினை 1990ஆம் ஆண்டில் வழங்கிட சட்டம் கண்டு; இன்று தமிழக அரசு அலுவலகங்களில், கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பெருவாரியாகப் பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்கியது கழக ஆட்சி. பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்களை ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும் என 1997இல் ஆணையிட்டது கழக ஆட்சி. சமூக நிலைகளில் பெண்களுக்கு உரிய சிறப்புகள் கிட்டிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக 1990இல் பெண்களுக்குப் பரம்பரைத் சொத்தில் சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம் கண்டது கழக ஆட்சி! அரசின் தொழில்மனைகள் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 10 விழுக்காடு மனைகளை ஒதுக்கிட வகை செய்து, பெண்கள் தொழில் முனைவோராகிட ஊக்கம் தந்தது கழக ஆட்சி.

திருக்கோவில்களின் அறங்காவலர் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சட்டம் கண்டது கழக ஆட்சி! 1989ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வேலைக்குச் செல்ல முடியாமையால் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைச் சரிக்கட்டவும், அவர்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி. 50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது கழக ஆட்சி. இந்தியாவிலேயே முதல்முறையாக 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்தது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் மேயர் பதவி வரை ஏறத்தாழ 40,000 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெற்று ஜனநாயகக் கடமை ஆற்றிடும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது கழக ஆட்சி.

இவையல்லாமல் ஏழைத் தாய்மார்களின் இதயம் குளிர ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியது கழக ஆட்சி. ஏழைத்தாய்மார்களின் பொது அறிவு வளர்ச்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது கழக ஆட்சி! ஏழைத்தாய்மார்களின் உடல்நலம் காத்திட எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கியது கழக ஆட்சி! இப்படிப் பல்வேறு வகையிலும் மகளிர் சமுதாயம் கல்வி, அறிவியல், அரசியல் சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டு; அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்குப் பல வகையிலும் வழிவகுத்த பெருமை கழக ஆட்சிக்கும், தி.மு.க.வுக்கு உண்டு என்பதனை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன்.

நடுநிலைமையுடன், சிந்திப்போர் அனைவரும், உணர்ந்து மகிழ்ந்து போற்றும் வகையில், கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக அரசு மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங்களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை ஊரும், உலகமும் கண்டு உவந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி; மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தமிழக மகளிர் சமுதாயம் முழுமைக்கும் தெரிவித்து மகிழ்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
TN CM Jayalalithaa and DMK supremo Karunanidhi have wished women ahead of world women's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X