• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதியை நாத்திகராக்கிய திருவாரூர் தேர் சவுக்கடிகள்... பால்ய கால நினைவுகள்

By Mathi
|

- மணா

பத்திரிகையாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு எப்போதும் சமச்ச்சீராக இருப்பதில்லை. ஆளுக்காள் இது மாறுபடும். சிலர் எப்போதும் நெருங்கவிடாத புதிரைப் போலவே இருப்பார்கள். சிலர் அணுகமுடியாத தூரத்தில் தன்னை வைத்திருப்பார்கள். சிலர் நண்பர்களாய் நெருக்கம் காட்டுவார்கள்.

இதில் சுலபமாகப் பத்திரிகையாளர்கள் அணுகுவதற்குச் சாத்தியப்பட்டவர் கருணாநிதி. தனக்குப் பிடித்த எழுத்தையும், பேச்சையும் கொண்டாடுகிறவர். அவரைப் பல முறை முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோதும் சந்தித்திருக்கிறேன். பதவிகள் அவர் பழகும் விதத்தை மாற்றிவிடவில்லை. பத்திரிகையாளர்களும் அப்படி உணர முடிந்ததில்லை.

95 ஆண்டு பிறந்தநாள் விழாவின் போது பலதரப்பட்ட வாழ்த்துக்கள் வந்து குவியும் நேரத்தில் அவருடைய துவக்க கால வாழ்வின் சில தருணங்கள் மட்டும் இங்கே:

 Writer Manaa column on Karunanidhis childhood days

தான் பிறந்து வளர்ந்த்த ''திருக்கோளிலி' என்ற திருக்குவளையின் மீது அவருக்குப் பிடிப்பு அதிகம். திருவாரூரிலிருந்து முப்பது கி.மீ தூரத்தில் இருக்கிற அந்தக் கிராமத்தில் தியாகராஜசுவாமி கோவிலின் எதிரே இருக்கிற தெற்குவீதியின் கடையில் ஓடுவேய்ந்த வீடு. இவருடைய தந்தை முத்துவேலர் நாதஸ்வரக் கலைஞர்.

அந்தக் காலத்திலேயே நாதஸ்வரத்தில் தங்கப்பட்டை போட்டு வாசித்தவர். மனைவி அஞ்சுகம். முதலில் இரண்டு பெண் குழந்தைகள். அடுத்து கருணாநிதி. பெற்றோருக்குச் செல்லக்குழந்தை.

அதே தெருவின் எல்லையின் இருந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் தான் இவர்களுடைய குலதெய்வம். அந்தக் கோவிலுக்குப் பெற்றோர் வேண்டிக் கொள்ளும்போதெல்லாம் தன்னுடைய தலை மொட்டையடிக்கப்படுவதைக் கிண்டலுடன் ''நெஞ்சுக்கு நீதி'' நூலில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

 Writer Manaa column on Karunanidhis childhood days

பையனைச் சிறிது காலம் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள அனுப்பினார்கள். ராகங்கள் பரிச்சயமானாலும், நாதஸ்வரம் ஒட்டவில்லை.

திருவாரூருக்குத் திருவிழாவின்போது வேடிக்கை பார்க்கப் போகும்போது முன்னால் தேரை இழுக்கிறவர்கள் வடத்தை இழுக்கச் சிரமப்படும்போதெல்லாம் அவர்களுடைய உடம்பில் சாதியின் காரணமாக சவுக்கடிகள் துள்ளிவிழுந்து, அவர்கள் வேகத்துடன் தேரை இழுப்பார்கள். அந்தக் கொடுமை இளம்வயதில் கருணாநிதியைப் பாதித்தது.

திருக்குவளையில் துவக்கத்தில் படித்து திருவாரூரில் உள்ள வடபாதிமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இவரை ஆறாம் வகுப்பில் சேர்க்க மறுத்தபோது எதிரே இருந்த கோவில் குளத்தில் விழப் போய்விட்டார். அப்படிப்பிடிவாதமாக இருந்தவரைப் பிறகு பள்ளியில் சேர்த்தார்கள். அவர் படித்த வகுப்பறையில் இவர் சுவரில் அழுத்தமாக எழுதிய '' மு.க'' என்கிற இனிஷியல் இன்னும் இருக்கிறது.

சிறுவயதில் உருவான எதிர்ப்புணர்வும், போராட்ட வேகமும் படிப்பை மடைமாற்றி, திருவாரூரில் உள்ள கீழ வீதியில் சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தைத் துவக்க வைத்தது. மாணவர் நேசன் என்ற கையெழுத்துப்பிரதியையும், பிறகு முரசொலியையும் துவக்க வைத்தது. அதில் அவருடைய பெயர் ''சேரன்'. முரசொலி முதல் இதழிலேயே நாத்திக மணம்!

 Writer Manaa column on Karunanidhis childhood days

கருணாநிதியின் குடும்பம் திருவாரூக்கு இடம் பெயர்ந்த பிறகு இந்த திருக்குவளை வீடு சிறிது காலம் பள்ளியாக இருந்து இப்போது கருணாநிதி நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளே அவருடைய பெற்றோரின் சிலைகள். கருணாநிதியின் வாழ்வைச் சொல்லும் கறுப்பு-வெள்ளை நிழல்கள். உள்ளே ஒரு கல்வெட்டு அவர் பிறந்த நாளை_3.6.1924 என்று சொல்கிறது.

முதல்வரான பிறகும் தான் பிறந்த ஊருக்கும்,வீட்டுக்கும் வரும்போது ஆற அமர அங்கே இருந்து நினைவுகளைப் பின்னோக்கி அசைபோட்டிருக்கிறார். அருகில் தன்னுடைய தாயாரின் சமாதிக்குச் சென்று நெகிழ்ந்திருக்கிறார்.

குளக்கரைக் காற்றடிக்கும் வீடு அவருடைய நினைவில் சிதையாமல் இருந்திருக்கிறது.

1986 ஜூலை மாதம் 18 ஆம் தேதி. நான்காவது முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் இந்த வீட்டிற்கு வந்த கருணாநிதி சிறிது நேரம் வெக்கையடிக்கும் வீட்டில் தங்கி விட்டு இங்குள்ள குறிப்பேட்டில் பால்யத்தின் அடையாளத்தோடு கைப்பட இப்படி எழுதியிருக்கிறார்.

''நான் பிறந்த மண்ணில் நான் பிறந்த இல்லத்திற்கு எத்தனை முறை வந்தால் தான் என்ன! தெவிட்டுவதில்லையே ! எத்தனையோ பசுமையான நினைவுகள்! நான் பிறந்த மண்ணுக்கு நான் எப்படித்தான் நன்றி சொல்லப்போகிறேன்?''

கருணாநிதிக்கு சிறுவயதிலிருந்து நெருக்கமாக இருந்த நண்பரான தென்னன் திருவாரூர்க்காரர். அவரைச் சந்தித்தபோது கருணாநிதி பற்றிச் சொல்ல அவரிடம் எத்தனை அனுபவங்கள்?

''அப்போ ஆறாவது வகுப்புப் படிச்சிக்கிட்டிருந்தார் கருணாநிதி. அப்பவே சிறுவர் சீர்திருத்தச் சங்கம்னு ஒரு சங்கத்தைத் துவக்கியிருந்தோம்.. எந்த ஜாதியினரையும் யாரும் இழிவு படுத்தக்கூடாது''ங்கிறதே அப்பவே சொல்லிக்கிட்டிருப்போம். சங்கத்தில் கூட்டங்கள் நடத்துவோம்.

பத்திரிகைகளைப் படிச்சுட்டு மூட நம்பிக்கைகளை விட்டுடணும்னு பேசுவோம்.அப்பவே பலரும் பாராட்டுறபடி எழுத ஆரம்பிச்சுட்டார் கருணாநிதி. பெரியாரோட கூட்டங்களுக்குச் சேர்ந்து போவோம்.

பதினெட்டு வயசிலேயே ''முரசொலி''யைத் துண்டுப்பிரசுரமா ஆரம்பிச்சுட்டோம். (முதல் இதழைக் காண்பிக்கிறார்) பலரோட நன்கொடையிலே தான் அதை நடத்தினோம். எல்லோருக்கும் இலவசமாக முரசொலியைக் கொடுத்துப் படிக்கச் சொல்வோம். கடவுளைக் கண்டிச்சு எழுதறதாலே பல அச்சகங்கள்லே அச்சடிச்சுக் கொடுக்க மாட்டாங்க. நாராயணசாமிங்கிற காங்கிரஸ் காரர் தான் கருணாநிதியின் பேச்சுத்திறமையால் அச்சடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கருணாநிதியின் அப்பா, அம்மாவுக்கும், மற்ற குடும்பத்தினருக்கும் சுயமரியாதைக் கருத்துக்களிலே உடன்பாடு கிடையாது. ஆனாலும் அவரோட பேச்சை ரசிப்பாங்க. முரசொலியை அச்சடிச்சு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டுபோய்க் கொடுப்போம். அங்கே படிச்சிக்கிட்டிருந்த நெடுஞ்செழியன், அன்பழகன்கிட்டே கூடக் கொடுத்திருக்கோம்.

திருவாரூரிலும்,நாகப்பட்டிணத்திலும் நாடகங்களை ''நாகை திராவிட நடிகர் சங்கம்''ங்கிற பெயரில் நடத்தியிருக்கோம். அவரும், நானும் அதில் நடிச்சிருக்கோம். அதிலே சிவகுருவா நடிச்சப்போ கருணாநிதிக்கு அவ்வளவு எதிர்ப்பு. பல சிக்கல்கள். நஷ்டங்கள். மீறி நடத்தினோம். பிறகு சினிமா வாய்ப்பு வந்துச்சு.

சேலத்துக்குப் போய் ''மந்திரிகுமாரி'' படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதிக்கிட்டிருக்கிறப்போ எனக்கு ஊரில் கல்யாணம் முடிவாச்சு. என்னோட கல்யாணத்துக்குப் பத்திரிகை அடிச்சதே கருணாநிதிதான். சாயந்திர நேரத்தில் சுயமரியாதைத் திருமணம். கருணாநிதிதான் வரவேற்றுப் பேசினார். அப்போ ஊரில் எங்களுக்குப் பேரே '' உருப்படாத பசங்க'' தான்.

 Writer Manaa column on Karunanidhis childhood days

அதைத் தன்னுடைய வரவேற்புரையில் சுட்டிக்காட்டி '' ஒரு உருப்படாததுக்கு நடக்கிற திருமணத்திற்கு வாழ்த்திப் பேச இன்னொரு '' உருப்படாதது' வந்திருக்கு''ன்னு பேசினப்போ ஒரே சிரிப்பு

பராசக்தி,மனோகரா பட வெற்றிக்குப் பிறகு சினிமாவிலும், அரசியலிலும் உச்சிக்குப் போய்ட்டார் கருணாநிதி. நாடே திரும்பிப்பார்க்கிற அளவுக்குத் தன்னை வளர்த்துக்கிட்டார். எதையும் திட்டமிட்டு ஒழுங்கோட செய்யணும்கிற குணம் மட்டும் அவர் கிட்டே இருந்து மாறலை.

முதல்வரா இருந்தப்போ இங்கே வர்றப்போ எங்களைக் கூப்பிட்டுப் பேசுவார். பழசை எல்லாம் நினைவுபடுத்துவார். கிளறிக் கிளறிக் கேட்பார். பலரோட பெயர்கள் அவரோட நினைவில் இருக்கிறது ஆச்சர்யமா இருக்கும். திருக்குவளைக்கும், திருவாரூருக்கும் வர்றப்போ தனிச் சந்தோஷம் அவரோட முகத்திலும் இருக்கும். பேச்சிலும் இருக்கும்.''

''- இப்படி கருணாநிதியின் அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது அந்தக் குதூகலத்திற்கே போனார் தென்னன்.

பிரபல வார இதழில் சேர்ந்ததும் நான் ஆரம்பித்த தொடர் 'நதிமூலம்'. பிரபலங்கள் பலருடைய சொந்த ஊருக்குப் போய் அவர்களுடைய வளர்ச்சியைச் சிறுகதையைப் போல விவரிக்கிற தொடருக்காக திருக்குவளையும், திருவாரூரும் போய் கருணாநிதியின் நண்பர்களைச் சந்தித்துவிட்டுவந்து எழுதியிருந்தேன். பிறகு அதே தொடர் நூலாக வந்தபோது கருணாநிதி வீட்டிற்குப் புத்தகத்தைக் கொடுக்கப் போயிருந்தேன்.

 Writer Manaa column on Karunanidhis childhood days

'' இங்கே கிட்டே வாய்யா''- அருகில் அழைத்துத் தோளில் செல்லமாகத் தட்டி '' அருமையா ஆரம்பிச்சுக்கய்யா'' என்று ஒருமுறை அவருடைய வீட்டின் மாடியில் சந்தித்தபோது பாராட்டிச் சொன்னார் கருணாநிதி.

அவரைப் பற்றிய ''நதிமூலம்' கட்டுரையை இப்படி ஆரம்பித்திருந்தேன்.

''திருக்குவளை- பெயரிலேயே மரியாதையை இணைத்திருக்கிற சின்னஞ்சிறு கிராமம்''

அருமையான பால்ய நினைவுகள் லேசில் மறைவதில்லை!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Writer Manaa's column on DMK President Karunanidhi's Childhood days in Thirukkuvalai

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more