கோவை: காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய காதலன்... கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு
கோவை: கோவையில் காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் அண்ணா காலனியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் நிர்மலா (25). இவர் தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
நிர்மலா மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளியில் படித்த போது கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் காதலித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி ஊட்டி பைகமந்து பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன். இவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
பள்ளியில் தொடங்கிய காதல் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் துளிர்த்துள்ளது. வெவ்வேரு மதங்களைச் சார்ந்த நிர்மலாவும், கிருஷ்ணமூர்த்தியும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
காதலி நிர்மலாவைக் காண அடிக்கடி கோவை வரும் கிருஷ்ணமூர்த்தி, அச்சமயங்களில் காதலி வீட்டிலேயே தங்குவது வழக்கமாம். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிர்மலாவின் பிறந்தநாள் வந்துள்ளது.
எனவே, விலை மதிப்பான கைபேசி ஒன்றை காதலிக்காக வாங்கிக் கொண்டு நிர்மலாவைக் காண வந்த கிருஷ்ணமூர்த்தி வழக்கம் போல, நிர்மலாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது நிர்மலாவின் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தியிடம் ‘நிர்மலாவை எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்'? என்று கேட்டதாகவும், அதற்கு அவர் கண்டிப்பாக நிர்மலாவைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியளித்ததாகவும் தெரிகிறது.
பின்னர், நிர்மலா வீட்டில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, காலை வெகு நேரமாகியும் அறைக் கதவைத் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த நிர்மலா மற்றும் அவரது பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது, கிருஷ்ணமூர்த்தி தூக்கில் தொங்கியதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி இறந்த விவரமறிந்து விரைந்து வந்த அவரது பெற்றோர், ‘எங்கள் மகன் தற்கொலை செய்யவில்லை. அவனை கொன்று விட்டனர். அவனது மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், கிருஷ்ணமூர்த்தி தங்கியிருந்த அறையில் கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளாரா? என்று போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அவரது செல்போனில் கடைசியாக பேசியது யார்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காதலியின் வீட்டில் காதலன் உயிரை மாயத்துக்கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications