மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொலை: கொலையாளிகளை மடக்கிய போலீஸ்
சென்னை: பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவார் என்பதாலேயே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தோம் என்று பிடிபட்ட ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகே சொக்காநல்லூர் சத்திரத்தில் இருந்து காவல்சேரி கிராமத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் குறுக்கே நெமிலிச்சேரி - வண்டலூர் உயர்மட்ட சாலை செல்வதால், அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
உயர்மட்ட சாலையின் கீழ் சுரங்கப்பாதை அருகே கடந்த 20ம் தேதியன்று மாலை 6 மணியளவில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இப்பகுதி, திருவள்ளூர் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

மனநலம் பாதித்த பெண்
போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான பெண் சென்னை குன்றத்தூரை சேர்ந்த லதா, 45 என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டதால் அவரது கணவர் சங்கர், இரு மகன்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன் வாடகை வீட்டை காலி செய்து விட்டு, மனைவியை விட்டு பிரிந்து சென்றதும் தெரியவந்தது.

ஆட்டோ டிரைவர்கள் மீது சந்தேகம்
இந்நிலையில், ரத்தக்கறை படிந்த நிலையில் ஒரு ஆட்டோ பூந்தமல்லியில் உள்ள பிரபல நகைக்கடை அருகே அனாதையாக நின்றது. வெள்ளவேடு போலீசார் சென்று ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஆட்டோவில், அதன் உரிமையாளரின் பெயர் பாபு, குன்றத்தூர் என இருந்தது. ஆட்டோவை பாபுவின் மகன் மஸ்தான், 21 ஓட்டி வந்தது தெரிந்தது. அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

மஸ்தான் சரண்டர்
ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மஸ்தான் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் மஸ்தான் அடைக்கப்பட்டார். இக்கொலைக்கு உதவியாக இருந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான சுரேஷை,21 போலீசார் தேடி வந்தனர்.

சுரேஷ் கைது
குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருந்த சுரேஷை நேற்று கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடத்தினர். மஸ்தானும், சுரேஷூம் லதாவை ஆட்டோவில் அழைத்து சென்று அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கழுத்தறுத்து கொலை
இந்த சம்பவத்தை லதா வெளியே சொன்னால் பிரச்னையாகி விடுமோ என்ற பயத்தில் சில தினங்களுக்கு முன்னர் மாலை லதாவை ஆட்டோவில் அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்து ஆட்டோவில், காவல்சேரி பகுதியில் வீசி சென்று உள்ளனர். சுரேஷை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கோர்ட்டில் சரணடைந்த மஸ்தானை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications